வியாழன், 13 ஆகஸ்ட், 2020

சஷ்டி கவசமும் சர்ச்சைகளும்


கந்த சஷ்டித் தொடர்பான ஒரு    சர்ச்சை எழுந்தபோது அது குறித்து.  எழுதுமாறு என்னுடைய நண்பர்கள்  சிலர் வலியுறுத்தினர்அனைவரும்  உணர்வு வெளிப்பாட்டுடன் இருந்த  அந்த நேரத்தில் அது குறித்து எழுதாமல் அவையெல்லாம் ஓரளவு அடங்கிய பின் இதனை எழுதுகிறேன்கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் ஒரு கூறு என்பதை யாரும் மறுக்கமுடியாதுஜனநாயகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையாக எதுவும் இருக்கமுடியாதுஆனால் அந்த சுதந்திரம் கட்டுப்பாடுடைய சுதந்திரமாக இருத்தல் வேண்டும்வின்சென்ட்     சர்ச்சில் ஒரு முறை இவ்வாறு குறிப்பிட்டார்." உன்னுடைய கைத்தடியை எப்படி வேண்டுமானாலும் சுழற்ற உனக்கு இங்கு சுதந்திரம்    உண்டு.     ஆனால் அது மற்றவரின் மூக்கை காயப்படுத்திவிடக்கூடாதுஆனால் நம்முடைய நாட்டில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு நடிகரோஅறிமுகமில்லாத அரசியல்வாதியோசமூக ஆர்வலரோ தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவும்தாங்கள் அறிவு ஜீவிகள் என நம்பவைக்கவும்முதலில் கையில் எடுப்பது கடவுள் மறுப்பு என்பதேஅதிலும் இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளை கொச்சைபடுத்தியும் கேலி செய்தும் தாங்கள் பெரிய அறிவாளிகள் என்பதை நிரூபிக்க பார்ப்பார்கள்இது போன்ற சின்ன மதியாளர்களை நாம் புறந் தள்ளிவிட்டு நமக்கு எது சரியென்றுபடுகிறதோ அதன்படி வாழ்வதே நலமாகும்.

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசம் என்று கற்ற்றிந்த எவரும் கூற மாட்டார்கள்சஷ்டி கவசம் ஒரு த்யானப்பாடலாக குண்டலினி சக்தியை மேலெழும்ப செய்யும் ஒரு மந்திரமாக பாடப்பட்டிருக்கிறது் மூலாதாரத்திலிருந்து உச்சந்தலை வரை அமைந்துள்ள ஏழு சக்கரங்களில் மனதை ஒரு நிலைப்படுத்தும் வண்ணமே அது படைக்கப்பட்டிருக்கிறதுஅதற்காகத்தான் உடல் உறுப்பு ஒவ்வொன்றின் மீதும் மனதை நிலை நிறுத்தும் வண்ணம,அப்பாடல் வரிகள் அமைந்திருக்கிறதுதேவராயசுவாமிகள் குறிப்பிட்டுள்ளவாறு உடல்தூய்மையுடன் இப்பாடலை தினம் முப்பத்தாறுமுறை சொல்லி வருபவர்கள் அளப்பரிய சக்திகளை அடையப் பெறுவார்கள்ஓரிரு முறை இப்பாடலை உச்சரிப்பதன் மூலம் கூட எண்ணற்ற இடர்களிலிருந்து தாங்கள் காப்பற்றப்பட்டிருப்பதாக பலர் அனுபவ வாயிலாக உணர்ந்திருக்கிறார்களஇந்து மத பக்தி இலக்கியங்கள் யாவும் பல நூறாண்டுகளாய் பௌத்தம்சமணம்மொகலாயர் ஆட்சிஆங்கிலேயர் ஆட்சி என எல்லாவற்றையும் கடந்து இன்னமும் உயிர்ப்புடன் திகழ்கின்றனஅவற்றை இழிவுபடுத்துபவர்கள் அல்லது அழிக்க முயல்பவர்களால் அவை என்றும் முடங்கிப் போனதில்லைமாறாக அவதூறு செய்யப்படும் பொழுதெல்லாம் அவை மேலும் புத்துணர்வு பெற்று பல மடங்கு பெருகி வளர்வதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்கம்ப ராமாயணம்பெரியபுராணம்ஏன் சமீபத்தில் ஆண்டாள் நாச்சியார் என அவதூறு செய்யப்பட்ட அனைத்தும் முன்னைவிட அதிகமாக மக்களால் நேசிக்கப்படுவதை காண்கிறோம் கந்த சஷ்டி கவசம் இனி அறியாதவர்களால் கூட வாசிக்கப்பட்டு உலகம் முழுவதும் தனது   அருட் கரத்தை பரவ்விடப்  போகிறதுஅந்த அருள் வெள்ளத்தில் இன்று இகழ்ந்தவர்கள் கூட ஒரு நாள் சங்கமிப்பார்கள் 

செவ்வாய், 17 மார்ச், 2020

கரோனா வைரஸும் கடவுள் வழிபாடும்


ஒவ்வொருமுறையும் ஏதேனும் இயற்கை இடர்பாடுகள் வரும்பொழுதும் ஒவ்வொரு மதங்களையும் சார்ந்த சிலர் இது தொடர்பாக எங்கள் மதத்தில் சில முன்னறிவிப்பு உள்ளது என மேற்கோள் காட்டுவது இப்பொழுதெல்லாம் வழக்கமாகிவிட்டது. கரோனாவையும் அது விட்டு வைக்கவில்லை. சிலப்பதிகாரத்தில் இல்லாத நான்காவது அத்தியாத்தில் மூன்றாவது பாடலில் கரோனாவைப்பற்றி பாடல் உள்ளது என சிலரும் , போகர் சித்தரின் பாடலில் உள்ளது என சிலரும் சமஸ்கிருத ஸ்லோகத்தில் உள்ளது என சிலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள். தவறான செய்திகளை அளித்து மதத்திற்கு பெருமை சேர்க்க நினைப்பது கேலிக்குத் தான் இடமளிக்கும். உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அத்தனை நிகழ்வுகளையும் முன்பே அறிவிக்கப்பட்டு உள்ளது எனக் கூறுவது எதார்த்தத்திற்கு புறம்பானதாகத்தான் அமையும். ஆனால் ஒவ்வொரு முறையும் உலகில் ஏதேனும் பாதகங்கள் ஏற்பட்ட பொழுதும் அதனிலிருந்து மக்களின் துன்பங்களை குறைக்கும் வண்ணம்  நம்முடைய ஞானிகள் பல இறைவழிபாடுகளையும் பதிகங்களையும் பாசுரங்களையும் அளித்திருக்கிறார்கள். இறை நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றை கடைபிடித்து இடர்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

ஒரு காலத்தில் திருச்செங்கோடு நகரில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இனம் புரியாத குளிர் வியாதி பரவி பல மக்கள் உயிரை இழந்தனர். திருஞானசம்பந்தர் அவ்வூருக்கு வருகை தந்தபோது பக்தர்கள் இது குறித்து அவரிடம் முறையிட்டனர், . இது முன்வினை பயனே என்று தனது ஞானத்தால் அறிந்த சம்பந்தர் அந்நோய் நீங்கும் வண்ணம் அவ்வினைக்கு என்னும் தொடங்கும் ஒரு பதிகத்தைப் பாடி அருளினார். அப்பதிகப் பயன் காரணமாய் அந்நோய் அவ்வூரிலிருந்து மட்டுமல்ல அந்நாட்டை விட்டே அகன்றது. நம்ம்டைய துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் வேறு யாரும் அல்ல. நம்முடைய செயல்களே காரணம் என்பதை ஞானிகள் உணர்த்தினர். இதைத்தான் பூங்குன்றனாரும் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று குறிப்பிடுகிறார். நாம் செய்கின்ற வினையின் அதாவது செயல்களின் காரணமாகவே நமக்கு துன்பங்கள் ஏற்படுகிறது எனவும் அதனிலிருந்து விடுபட இந்தப் பதிக பாராயணம் பயன் தரும் என்றும் சம்பந்தர் குறிப்பிடுகிறார். எனவே கரோனா போன்ற நோய்களின் பிடியிலிருந்து விடுபட இப்பதிகத்தை நாம் தினமும் சூரிய உதயத்திற்கு முன் ஒருமுறையும், அஸ்தமனத்திற்குப் பிறகு ஒருமுறையும் கேட்டு வருவோமானால் நாம் நிச்சயம் இந்த கொடிய நோயின் பிடியிலிருந்து விடுபடலாம். ஆன்மீகமே நம்பிக்கையின் அடிபடயில் நிகழ்வதுதான். ஏன் நீங்கள் இதை முயன்று பார்க்கக் கூடாது? உங்களால் முடியுமானால் இப்பதிகத்தை நீங்களே மனனம் செய்தோ அல்லது நூலின் துணை கொண்டோ ஓதி வருவீர்களானால் மிகுந்த நன்மை பயக்கும்.

பாடியிருப்பவர் திருத்தணி சுவாமினாதன் அவர்கள்
தொகுப்பு:நலமிகு பதிகங்கள் 40
வெளியீடு  : ஸ்ருதிலயா




படித்துப் பயன்பெற மனனம் செய்து பயனுற பதிக வரிகள் 

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமையாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.


வியாழன், 12 டிசம்பர், 2019

கிரகப் பெயர்ச்சிகளும் பரிகாரங்களும்




தற்பொழுதெல்லாம் கிரக பெயர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதற்கான பரிகாரங்களும் செய்தித் தாள்கள், இணையதளம் மற்றும் இதர ஊடகங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாய் பக்தித் தலங்களாக இருந்த நம்முடைய ஆலயங்கள் எல்லாம் பரிகாரத் தலங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஆலயங்களில் மூல மூர்த்திகளின் வழிபாடுகல் குறைந்து கிரகங்கள் வழிபாடு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது மிகவும் தவறான ஒன்றாகும். கிரக மாற்றங்கள் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வரும் என்பதை இந்து மதம் ஏற்றுகொண்டிருக்கிறது. அதன் காரணமாய் கிரக வழிபாடுகளும் அனுமதிக்கப்படுகிறது. எனினும் கிரக பெயர்ச்சி விளைவுகளிலிருந்து தற்காத்து கொள்வதற்கு கிரக வழிபாடு மட்டுமின்றி, இறைவனிடம் பூரண சரணாகதி அடைவதே சிறந்த வழியாகும். கிரகப் பெயர்ச்சிகளில் சனி பெயர்ச்சியினை மிகுந்த வலிமை உடையதாக கருதப்படுகிறது. சனி பெயர்ச்சியின் தீய விளைவுகளிலிருந்து விடுபட பல பரிகாரங்களும் சொல்லப்படுகிறது. சனி பெயர்ச்சி மட்டும் அல்லாது இதர பெயர்ச்சிகளின் சாதகமில்லாத நிலையிலிருந்து விடுபட திருஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தினை( இத் தொடரில் அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 7 இல் கோளறுப் பதிகம் இடம் பெற்றுள்ளது) தொடர்ந்து படித்துவர உரிய பலன்கள் கிடைக்கும். சனி கிரகப் பரிகாரம் மட்டும் வேண்டுபவர்கள் சனிக்கான கீழ்கண்ட  ஸ்லோகத்தை படித்துவர நன்மையுண்டாகும்

வஜ்ர தேஹாய காலாக்னி ருத்ராய
அமித தேஜஸே ப்ரமாஸ்த்ர நம்ப
நாமஸ்மை நமஸ்தே: ருத்ர மூர்த்தயே
மர்க்கடேச மஹா ஸ்வாஹ
சர்வசோஹ விநாசக சத்ரு சம்ஹாய
ரக்ஷ ஸ்ரீய தாஹாயே தேஹிமே:

திங்கள், 13 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 33


கல்வி நலம் தரும் சகலகலாவல்லிமாலை

ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் கலைமகளை நோக்கிப் பாடிய சகலகலாவல்லி மாலையை தினந்தோறும் ஓதும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி நிலையில் மேம்படவும் கல்வீல் வெற்றியினைப் பெறவும் கலைமகளின் அருள் நிச்சயம் கிட்டும். இந்தப் பதிகத்துடன் அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் தொடர் நிறைவு பெறுகிறது. இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டப் பாடல்கள் தவிர தமிழில் ஏராளமான அருட்பதிகங்கள் உள்ளன. பன்னிருத் திருமுறைகள், திவ்ய பிரபந்தம், அருணகிரியார் பாடலகள், கந்த புராணம், பெரிய புராணம், கம்ப ராமாயணம் இது போன்று என்ணற்ற நூல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் படித்து இறைவனது அருள் பெற்று வளமுடன் வாழ வேண்டுகிறேன்.நன்றி.


வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதௌி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 

வெள்ளி, 10 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 32


அனைத்தும் நல்கும் அபிராமி அந்தாதி

திருக்கடையூர் அபிராமி அம்மன் மீது அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதி அருள் மழைப் பொழியக்கூடிய அற்புதமாகும். அந்தாதியாகப் பாடிய நூறுப்பாடல்களும் ஒவ்வொன்றும் ஒரு பலனை அளிக்ககூடியதென பக்தர்களின் அனுபவ மொழிகள் எடுத்து சொல்கின்றன. அவற்றில் ஒரு சிலப் பாடல்கள் இங்கு தரப்பட்டுள்ளது அனைத்துப் பாடல்களையும் சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டு மகிழ்வதோடு அம்மன் அருளையும்பெறலாம்.அம்மன் அருளால் விளைந்த இந்த அற்புத அந்தாதியை தினம் ஓதுபவர் வாழ்வு ஒளி பெறும் என்பது திண்ணம்.




                                                                     பகுதி 1
                                                                      பகுதி 2

பிரிந்தவர் ஒன்று கூட
துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

உயர்பதவிகள் பெற
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

மனக் கவலை நீக்க
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

நல்ல கணவர் அமைய
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?

மரணபயம் அகல
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.

மனநோயிலிருந்து விடுபட
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

கடன் தீர
இல்லாமை சொல்லி ஒருவர் தம் பாற் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்த நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

பிள்ளைகள் நன்கு வளர
தஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அரியாரெனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே

கல்வி செல்வம் ஏனைய நல்லன பெற
தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

மகப்பேறு உண்டாக
தாமம் கடம்பு படைபஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடிச் செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே

மன அமைதி ஏற்பட
அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே

கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ
வருந்தா வகையென் மனத்தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே

வியாழன், 9 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 31


கஷ்டம் தீர்க்கும் கந்த சஷ்டி கவசம்


இது வரை சைவ வைணவத்தை சார்ந்த 30 அற்புதப் பதிகங்கள் பார்த்தோம். தற்பொழுது  இந்நூல் இல்லாத இந்து தமிழர் இல்லமே இல்லை என்னும் அளவில்அனைவரும் அறிந்திருக்கக்கூடிய கந்த சஷ்டி கவசம் பற்றி அறிவோம். ஸ்ரீ தேவராய ஸ்வாமிகளால் கந்தன் அருளால் அருளப்பட்டதே கந்த சஷ்டி கவசமாகும். நமக்கு நேரக் கூடிய அனைத்து வகைத் துன்பங்களையும் போக்கக் கூடிய அற்புத மந்திரப் பாடல். பில்லி சூனியம் பேய் பிடித்தல் மன நோய் விஷக் கடிகள் எதிரிகளால் ஏற்படும் தொல்லை என்று பல்வகையான துன்பங்களிலிருந்து நம்மை கவசம்மை காக்கு இத்திருப்பாடல். தினம் இதனை ஓதி வரும் அனைவரும் இவ்வுண்மையை அறிவர்..இப்பாடல் வரிகளோடு சூலமங்கலம் ராஜலக்ஷ்மி சகோரிகள் பாடுவதையும் அன்றாடம் கேட்டு நீங்கள் பயன் அடையலாம்.






துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்        

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக        

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக        .

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென        

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க        

விரைந்தெனைக் காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும்        .

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்        

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்        

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்        

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண       

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து        

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று        

உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க        

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க        

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க        

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க       

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க        

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க        

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க        

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க        

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க        

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்        

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்        .

கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்        

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்        

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட        

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய        

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்        

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட        

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்       

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்        .5

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்        

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரஹண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம்ஒளி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்        

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா        

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே        

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை        

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத் தாக வேலா யுதனார்        

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்        

வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்       

பெற்றவள்குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய        

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்        

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்        

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை        

வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி        

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்       

சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி       

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே        

மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

        

K

செவ்வாய், 7 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 30


உண்மையான பக்தி இல்லையாயினும் இறையருள் பெற்றுத் தரும் பாசுரம்

உண்மையான பக்தி உணர்வு இல்லாதவர்களும்  இறையருள்  பெற வேண்டியும்  பக்தி உணர்வு பெருகி வளரவும் இறையருளால் நம்மாழ்வாரால் பாடப்பெற்றது இப்பாசுரம். இப்பாசுரப் பாராயணம் அனைவருக்கும் அளப்பற்ற நன்மைகளை அளிக்கக் கூடிய வல்லமை உடையதாம்.

கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று 
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி 
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்? 
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே             
 
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே 
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல 
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான் 
வானே மா நிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே             

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி 
வள்ளல் மணிவண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் 
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன் 
வெள்ளத்து அணைக்கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே?             
 
என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் வாசகங்கள் சொல்லியும் 
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து 
நின்கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன் 
என்கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே             
 
கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை 
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு 
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால் 
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே             
 
புறம் அறக் கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும் 
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டொழிந்தேன் 
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக்கண் 
அறம் முயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே             
 
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ் இடத்தான்? யான் ஆர்? 
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் 
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலைபூசல் இட்டே 
மெய்ம் மால் ஆயொழிந்தேன் எம்பிரானும் என் மேலானே             
 
மேலாத் தேவர்களும் நிலத் தேவரும் மேவித் தொழும் 
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார் 
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் 
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே    
 
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும் 
நாவாய் போல் பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க 
தேவு ஆர் கோலத்தொடும் திருச் சக்கரம் சங்கினொடும் 
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே            
 
ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து 
தானே இன் அருள் செய்து என்னை முற்றவும் தான் ஆனான் 
மீன் ஆய் ஆமையும் ஆய் நரசிங்கமும் ஆய் குறள் ஆய் 
கான் ஆர் ஏனமும் ஆய் கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே    
 
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங்கண்ணன் தன்னை 
ஏர் வள ஒண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன 
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும் 
ஆர்வண்ணத்தால் உரைப்பார் அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே 

ஞாயிறு, 5 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 29



குழந்தைகள் குறை தீர்க்கும் பாசுரம்

பெரியாழ்வார் காருண்யனாம் கண்ணனுக்கு உள்ளம் உருகப் பாடிய தாலாட்டு. இப் பாசுரத்தினை ஓதுவதன் பயனாய் குழந்தைகள் பிணி நீங்கவும் ஆரோக்கியமாய் வாழ்வதுடன் வையத்துள்  அனைத்தும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் என்பது திண்ணம். பெரியாழ்வாரின் இந்த பக்தித் தமிழ் படிக்க படிக்க நெஞ்சை உருகச் செய்து இறைவனது கருணைப் பெற பெரிதும் உதவும்

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி 
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் 
மாணிக் குறளனே தாலேலோ 
      வையம் அளந்தானே தாலேலோ             

உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ 
இடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடும் 
விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான் 
உடையாய் அழேல் அழேல் தாலேலோ 
      உலகம் அளந்தானே தாலேலோ          
 
என்தம்பிரானார் எழிற் திருமார்வற்குச் 
சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு 
இந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி 
தந்து உவனாய் நின்றான் தாலேலோ 
      தாமரைக் கண்ணனே தாலேலோ            
 
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் 
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் 
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் 
செங்கண் கருமுகிலே தாலேலோ
      தேவகி சிங்கமே தாலேலோ             

 
எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று 
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு 
வழு இல் கொடையான் வயிச்சிரவணன் 
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ 
      தூமணி வண்ணனே தாலேலோ             
 
ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும் 
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் 
மா தக்க என்று வருணன் விடுதந்தான் 
சோதிச் சுடர் முடியாய் தாலேலோ 
      சுந்தரத் தோளனே தாலேலோ             
 
கான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் 
வான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் 
தேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் 
கோனே அழேல் அழேல் தாலேலோ 
      குடந்தைக் கிடந்தானே தாலேலோ             
 
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை 
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ 
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் 
நச்சுமுலை உண்டாய் தாலேலோ 
      நாராயணா அழேல் தாலேலோ            
 
மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
ஐயா அழேல் அழேல் தாலேலோ 
      அரங்கத்து அணையானே தாலேலோ           
 
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை  இடர்தானே      

வெள்ளி, 3 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 28


வாழ்வில் வரும் இன்னல்கள் நீக்கி வளமான வாழ்வு தரும் பாசுரம்

திருமங்கை ஆழ்வாரால் பாடப் பெற்ற "பெரிய திருமந்திரத்தின் மகிமை என்னும் இப்பாசுரத்தை துன்பம் வரும் காலங்களிலும் நோய்களினால் அவதியுறும்போதும் மனமுருக ஓதினால் துன்பங்கல் நீங்கி வளமான வாழ்வு அமையப் பெறுவர் என்பது அனுபவப் பூர்வமாக அறிந்தவர்களின் வாக்காகும்.


வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் 
      பெருந் துயர் இடும்பையில் பிறந்து 
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு 
      அவர் தரும் கலவியே கருதி 
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் 
      உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து 
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் 
      - நாராயணா என்னும் நாமம்       

ஆவியே அமுதே என நினைந்து உருகி 
      அவர் அவர் பணை முலை துணையாப் 
பாவியேன் உணராது எத்தனை பகலும் 
      பழுதுபோய் ஒழிந்தன நாள்கள் 
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் 
      சூழ் புனல் குடந்தையே தொழுது என் 
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
சேமமே வேண்டி தீவினை பெருக்கி 
      தெரிவைமார் உருவமே மருவி 
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் 
      ஒழிந்தன கழிந்த அந் நாள்கள் 
காமனார் தாதை நம்முடை அடிகள் 
      தம் அடைந்தார் மனத்து இருப்பார் 
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் 
      - நாராயணா என்னும் நாமம் 
 
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி 
      வேல்கணார் கலவியே கருதி 
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் 
      என் செய்கேன் நெடு விசும்பு அணவும் 
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட 
      பாழியான் ஆழியான் அருளே 
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் 
      கண்டவா திரிதந்தேனேலும் 
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் 
      சிக்கெனத் திருவருள் பெற்றேன் 
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் 
      உடம்பு எலாம் கண்ண நீர் சோர 
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் 
      எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் 
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி 
      அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் 
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை 
      மா மணிக் கோயிலே வணங்கி 
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் 
      இன்னது ஓர் தன்மை என்று உணரீர் 
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில் 
      கண்டவா தொண்டரைப் பாடும் 
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் 
      சூழ் புனல் குடந்தையே தொழுமின் 
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் 
      கருத்துளே திருத்தினேன் மனத்தை 
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை 
      பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம் 
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன் 
      செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி 
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் 
      படு துயர் ஆயின எல்லாம் 
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் 
      அருளொடு பெரு நிலம் அளிக்கும் 
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற 
      தாயினும் ஆயின செய்யும் 
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் 
      - நாராயணா என்னும் நாமம்             
 
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் 
      மங்கையார் வாள் கலிகன்றி 
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை 
      இவை கொண்டு சிக்கென தொண்டீர் 
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின் 
      துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் 
நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு 
      - நாராயணா என்னும் நாமம்            

வியாழன், 2 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 27




குழந்தைப் பேறு அளிக்கும் பாசுரம்

12 ஆழ்வார்களில் ஒருவரும் நாச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர் கொடியாள்   எனவும் வைணவர்களால் பெரிதும் போற்றப்படும் ஸ்ரீ ஆண்டாள்  எம்பெருமான் மீது காதல் கொண்டு இனிய தமிழில் அளித்துள்ளப் பாசுரங்கள் அருளுடையவை மட்டுமல்ல. படிக்க படிக்க இன்பம் பயப்பனவாகும்..அவர் அருளிய திருப்பாவை அனைவரும் அறிந்த ஒன்றே. திருப்பாவைப் பாடல்கள் அனைத்தும் இவ்வலைப் பதிவில் முன்பே அளிக்கப்பட்டுள்ளது.இங்கு அளிக்கப்பட்டுள்ள அவரது திருவாய்மொழியான வாரண மாயிரம் என்ற அற்புதப் பாசுரத்தை தொடர்ந்து ஓதி வருபவர்கள் மகப் பெறு அடைவார்கள் என்பது திண்ணம்.



வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.  

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்.

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.  

செவ்வாய், 30 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 26



நோய்களிலிருந்து நிவாரணம் பெறவும் பிறவித் தவிர்க்கவும் உதவும் பாசுரம்

நம்மாழ்வார் அருளிய இத்திருவாய்மொழிப் பாராயணம் பிணிகளின்றி வாழவும் பிறவிப் பெருங்கடல் நீந்தவும் உதவும் என்பது ஆன்றோர் வாக்கு



பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று 
துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்வார் 
அறவனை ஆழிப்படை அந்தணனை 
மறவியை இன்றி மனத்து வைப்பாரே   
 
வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினைத் 
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன் 
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து 
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே   

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் 
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை 
தூய அமுதைப் பருகிப் பருகி என் 
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே     
 
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை 
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை 
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் 
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ?   

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை 
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள் 
விடவே செய்து விழிக்கும் பிரானையே?     
 
பிரா அன் பெரு நிலம் கீண்டவன் பின்னும் 
விரா அய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் 
மராமரம் எய்த மாயவன் என்னுள் 
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?   

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் 
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து 
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல் 
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?   
 
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம் 
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி 
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை 
முன்னை அமரர் முழுமுதல் தானே       

அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை 
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை 
அமர அழும்பத் துழாவி என் ஆவி 
அமரத் தழுவிற்று இனி அகலும்மோ?     
 
அகலில் அகலும் அணுகில் அணுகும் 
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான் 
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் 
பகலும் இரவும் படிந்து குடைந்தே   

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை 
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன் 
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து 
உடைந்து நோய்களை ஓடுவிக்குமே     

ஞாயிறு, 28 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 25




வாழ்வில் வரும் துயரம் போக்கும் பாசுரம்

நாராயணின் பக்தர்களுக்கு வரும் துயர் நீக்கும் உபாயாமாக பெரியாழ்வார் அருளிய அற்புதப் பாசுரம் இது. இதனைத் தினம் ஓதி வரும் துயர்களுக்கு விடை கொடுக்கலாம் என்பது திண்ணம்

ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் 
      பேச்சும் அலந்தலையாய்ச் 
செய்ய நூலின் சிற்றாடை செப்பன் 
      உடுக்கவும் வல்லள் அல்லள் 
கையினில் சிறுதூதை யோடு இவள் 
      முற்றில் பிரிந்தும் இலள் 
பை அரவணைப் பள்ளியானொடு 
      கைவைத்து இவள்வருமே             

வாயிற் பல்லும் எழுந்தில மயி
      ரும் முடி கூடிற்றில 
சாய்வு இலாத குறுந்தலைச் சில 
      பிள்ளைகளோடு இணங்கி 
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் 
      தன் அன்ன செம்மை சொல்லி 
மாயன் மா மணிவண்ணன்மேல் இவள் 
      மால் உறுகின்றாளே             
 
பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் 
      முற்றத்து இழைக்கலுறில் 
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் 
      அல்லது இழைக்கலுறாள் 
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில 
      கோவிந்தனோடு இவளைச் 
சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும் 
      தட்டுளுப்பு ஆகின்றதே             
 
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் 
      பெண்மகளை எள்கி 
தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த 
      சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் 
ஆழியான் என்னும் ஆழ மோழையில் 
      பாய்ச்சி அகப்படுத்தி 
மூழை உப்பு அறியாது என்னும் 
      மூதுரையும் இலளே             
 
நாடும் ஊரும் அறியவே போய் 
      நல்ல துழாய் அலங்கல் 
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் 
      சோதித்து உழிதர்கின்றாள் 
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் 
      கேசவனோடு இவளைப் 
பாடிகாவல் இடுமின் என்று என்று 
      பார் தடுமாறினதே             

பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் 
      பாடகமும் சிலம்பும் 
இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு 
      என்னோடு இருக்கலுறாள் 
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள் 
      பூவைப் பூவண்ணா என்னும் 
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் 
      மால் உறுகின்றாளே  
           
பேசவும் தரியாத பெண்மையின் 
      பேதையேன் பேதை இவள் 
கூசமின்றி நின்றார்கள் தம் எதிர் 
      கோல் கழிந்தான் மூழையாய் 
கேசவா என்றும் கேடிலீ என்றும் 
      கிஞ்சுக வாய் மொழியாள் 
வாச வார்குழல் மங்கைமீர் இவள் 
      மால் உறுகின்றாளே 

காறை பூணும் கண்ணாடி காணும் தன் 
      கையில் வளை குலுக்கும் 
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் 
      கொவ்வைச் செவ்வாய் திருத்தும் 
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் 
      தேவன் திறம் பிதற்றும் 
மாறில் மா மணிவண்ணன்மேல் இவள் 
      மால் உறுகின்றாளே             
 

கைத்தலத்து உள்ள மாடு அழியக் 
      கண்ணாலங்கள் செய்து இவளை- 
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்? 
      நம்மை வடுப்படுத்தும்- 
செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன் 
      செய்வன செய்துகொள்ள 
மைத் தடமுகில் வண்ணன் பக்கல் 
      வளர விடுமின்களே             
 

பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து 
      பேணி நம் இல்லத்துள்ளே 
இருத்துவான் எண்ணி நாம் இருக்க 
      இவளும் ஒன்று எண்ணுகின்றாள் 
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் 
      வார்த்தை படுவதன்முன் 
ஒருப்படுத்து இடுமின் இவளை 
      உலகளந்தான் இடைக்கே             
 

ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில் 
      நாராயணனுக்கு இவள் 
மாலதாகி மகிழ்ந்தனள் என்று 
      தாய் உரை செய்ததனை 
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன் 
      விட்டுசித்தன் சொன்ன 
மாலை பத்தும் வல்லவர்கட்கு 
      இல்லை வரு துயரே