திங்கள், 22 டிசம்பர், 2014

திருப்பாவை 7






கீசு கீசென்று எங்கும் ஆணை சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே?
 காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
 ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
    நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
    கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
 தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: 

புத்தியில்லாத பெண்ணே, அதிகாலை புலர்ந்து விட்டது. ஆணை சாத்தன் பறவைகள் கீச்சு கீச்சு என்று குரல் எழுப்பி தங்களுக்குள் பேசத் தொடங்கி விட்டன. அது உனக்கு கேட்கவில்லையா? நெய் மணம் வீசும் கூந்தலையுடைய ஆயர் குலப் பெண்கள், தங்கள் மார்பில் அணிந்துள்ள ஆமைத் தாலியும், அச்சுத் தாலியும் கலகல என்று ஒலி எழுப்ப தங்கள் கைகளை அசைத்து மத்தினால் தயிரைக் கடையும் சல சல என்னும் ஒலியும் கூடவா கேட்கவில்லை?





திருவெம்பாவை 7. 

 அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர் 
 உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் 
 சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாயதிறப்பாய் 
 தென்னானென் நம்முன்னம் தீ சேர் மெழுகொப்பாய்
 என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்  
சொன்னோங் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் 
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

பொருள்: 
பெண்ணே! நாங்கள் உனக்கு இதுவரை சொன்னது என்ன கொஞ்சமா? இறைவன் தேவர்கள் பலராலும் நினைத்து பார்க்கவும் அறியன், ஒப்பற்றவன்! பெரும் புகழையுடையவன். விடியற்காலையில் அந்த பெருமானுடைய இசைக் கருவிகளின் ஒலி கேட்டால் உடனே சிவ, சிவா என்று வாய் திறப்பாயே. தென்னா என்று அவர் பெயரை கூறும் முன்னாலேயே நெருப்பிலிட்ட மெழுகு போல் உள்ளம் உருகிப் போவாயே! அத்தகைய உனக்கு இன்று என்ன நேர்ந்தது? இன்னும் உனக்கு விளையாட்டுதானா? நாங்கள் எல்லோரும் சேர்ந்தும், தனித் தனியாகவும், "என் தலைவனே!, என் அரசனே! இனிய அமுதனே" என்று பலவாறாகவும் பாடும்   பொழுதும் கொடிய மனமுடையவள் போல பேசாமல் கிடக்கின்றாயே! உன் உறக்கத்தின் தன்மைதான் என்னே!





சனி, 20 டிசம்பர், 2014

திருப்பாவை - 6





 
திருப்பாவை 6 

புள்ளும் சிலம்பினகாண் புள் அரையன் கோயில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு

கன்னச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

 
பொருள்....

பெண்ணே! பறவைகள் விழித்தெழுந்து ஒலி எழுப்புகின்றன. கருடாழ்வாரின் இறைவனாகிய நாராயணனின் கோவிலில் இருந்து ஒலிக்கின்ற வெண்சங்கின் ஒலியை நீ கேட்கவில்லையா? பூதகி என்ற பேய் மகளின் மார்பில் இருந்து கரந்த விஷப் பாலை உண்டவன். அவளது உயிரையும் குடித்து வண்டி சக்கர வடிவில் வந்த சகடாசூரன் என்ற அரக்கனை உதைத்து கொன்றவன் திருப்பாற்கடலில் பாம்பணையில் துயில் கொண்டு இருக்கும் திருமால் இத்தகைய சிறப்பு மிக்க இறைவனை முனிவர்களும், யோகியர்களும்
 போற்றி வணங்கும் அரி நமோ நாராயணா என கூறும் வாழ்த்தொலி உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறதே எழுந்திரு.



 
  




 
  
திருவெம்பாவை 6

 மானே! நீ நென்னலை நாளை வந்துங்களை
 நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
   தானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளும்
    வானவார் கழல் பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய்
      ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேல் ஓர் எம்பாவாய்
   
பொருள்:

மான் போன்ற மருட்சியுடைய விழிகளையுடைய காரிகையே! நாளை நானே வந்து உங்களையெல்லாம்  எழுப்புவேன் என்று நேற்று சொல்லிய நீ வெட்கமில்லாமல் இன்னும் தூங்குகின்றாயே? அந்த சொல் எந்த திசையில் போயிற்று என்பதை சொல்? இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? தேவர்களும், மனிதர்களும் மற்றுமுள்ள சகல ஜீவராசிகளும் அறிதற்கரியவனான எம்பெருமானின் மேலான திருவடிகள் எளியவர்களான நமக்கு தானாகவே வந்து காத்து ஆட்கொள்வன. அந்த வீரக் கழலணிந்த திருவடிகளை மனமுருகிப் பாடி வந்த எங்களிடம் வாய் திறந்து பேசினாயில்லை! உடல் உருகவில்லை. உனக்குத் தான் இந்நிலை பொருந்தும். நம் அனைவரின் தலைவனாகிய சிவபெருமானை பாட எழுந்து வா கண்ணே



திருப்பாவை 5





மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் வந்து தோன்றும் அணி விளக்கை
 தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய். 
 
பொருள்:
பாற் கடலில் பள்ளி கொண்ட நீலவண்ணன், நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயக்காரன், தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன். ஆயர் குலத்தினில் வந்துதித்த அழகிய விளக்கு. தன்னைப் பெற்ற தாயை என்ன பேறு பெற்றாள் இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்று உலகத்தோர் புகழும்படி செய்த தாமோதரன். அப்படிப்பட்ட அந்தப் பெருமாளை நாம் தூய மனதுடன், நல் மலர்கள் தூவி வாழ்த்தி வணங்குவோம், மனதால் அவனை நினைப்போம். காலையில் மார்கழி நீராடி கண்ணனை பூசை செய்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரக் காத்திருக்கும் பிழைகளும் கூட தீயினில் இட்ட தூசு போல் பொசுங்கிப் போய் விடும். ஆகவே, அந்த தூய பெருமானின் புகழ் பாடுவோம், அவன் குறித்தே பேசுவோம்.. 



திருவெம்பாவை – 5.
அடிமுடி காணமுடியாத அண்ணாமலை
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்று உள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவு அறியான்
கோலமும் நமமை ஆட் கொண்டு அருளிக்
கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே! சிவனேயென்று
 ஓலம் இடினும் உணராய் உணராய் காண்!
ஏலக்குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்!
பொருள்:
மலை போல நீண்ட நெடிய திருமேனியை உடையவன் நம் இறைவன். வராக அவதாரம் எடுத்த திருமாலும், அன்னப்பறவை எடுத்த பிரம்மாவும் கூட அறிய முடியாத திருவடிகளை உடையவன். ஆனால் அப்பேற்பட்டவனையே நம்மால் அறிய முடியும் என்பது போல பேசுகிறாய் நீ.உனது பேச்சு பிறரை மயங்க வைத்து விடும் மாயப் பேச்சு. அப்படி அனைவரும் நம்பும்படியாக பொய்யை பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வந்து கதவைத் திற!

உனக்கு ஒன்று தெரியுமா.. ? எம்பெருமான் விண்ணுலகினராலும், மண்ணுலகினராலும், மற்றும் உள்ள உலகினர் யாராலும் அறிய முடியாத அருமைக்கும், பெருமைக்கும் உரியவன். நம்மைப் போன்ற சிறியவர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் மன்னிக்கும் அருட் குணம் கொண்டவன். தம்முடைய திருக்கோலத்தையும் காட்டி, எளியவர்களான நம்மை ஆட்கொண்டு அருளி சீராட்டுகின்ற திறத்தையும் பாடுகின்றோம்! அப்படிப்பட்ட பரமனை, சிவனே! சிவனே! என்று உள்ளுருகி உன் வாசல் வந்து பாடுகின்றோம். அந்தக் குரல் உனக்குக் கேட்கவில்லையா..?மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுதான் உன் தன்மையா.? 

வியாழன், 18 டிசம்பர், 2014

திருப்பாவை 4






                                                          


ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்


பொருள்:
கடல் போன்ற கருணை உள்ளம் படைத்த தலைவனான வருணப் பகவானே, நீ எங்களுக்கு மட்டும் மழை பொழிந்து குறுகியவனாக இருக்காதே. மாறாக இந்த பூலோகம் முழுவதும் உன் அருளை வாரி வழங்கு. ஆழ்கடல் நீரை அள்ளி எடுத்து, இடிகளை முழக்கி, பின்னர் உனது உடல் நிறத்தை கருமையாக்கி மழை நீரை வாரி வழங்கு. பரந்தாமன் கையில் இருக்கும் சக்கரம் போல மின்னலை ஒளிரச் செய், விஷ்ணுவின் கையில் உள்ள வலம்புரி சங்கு போல அதிர வைக்கும் சத்தத்துடன் முழக்கமிடு, சாரங்கன் விடும் தொடர் அம்புகளைப் போல நிற்காமல் மழையைப் பெய்ய விடு. உலகில் நல்லவர்கள் வாழ உன் மழை உதவட்டும், பெய்யட்டும். நீ இப்படி அருளினால்தான் நாங்களும் மார்கழி மாதத்தில் மனம் மகிழ்ந்து நீராட அந்த மழை உதவும்.



திருவெம்பாவை 4.


ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து
 எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.



பொருள்
எழுப்பும் பெண்கள்: புன்னகை தவழும் முகம் கொண்ட பெண்ணே, இன்னும் உனக்குப் பொழுது புலரவில்லையா?. தூங்கும் பெண்: வண்ணிக் கிளி போல பேசும் பெண்டிர் எல்லாம் வந்தாயிற்றா?.
 
எழுப்பும் பெண்கள்: அனைவரையும் எண்ணிப் பார்த்து விட்டோம். நீ மட்டும்தான் உறக்கத்தில் இருக்கிறாய். இப்படியே நேரத்தை வீணடிக்காதே. தேவர்களை காப்பவராகவும், வேதங்களின் பொருளாகவும், இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. எனவே நேரத்தை வீணாக்க முடியாது. நீயே எழுந்து வந்து அனைவரையும் எண்ணிப்பார்த்துக்கொள். நீ எதிர்பார்க்கும் அளவிற்கு பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் உறங்கு.

புதன், 17 டிசம்பர், 2014

திருப்பாவை 3





ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் லூடு கயலுகள்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: 
வாமனன் ரூபத்தில் தனது ஓரடியால் உலகத்தை அளந்த அந்த திருமாலின் பெயரைச் சொல்லி நாம் புகழ் பாடுவோம். அப்படிப் பாடுவதால் நமக்குக் கிடைக்கும் பலன் என்ன தெரியுமா...மாதம் மும்மாரி மழை பெய்யும். செந்நெல் வயல்களில் பயிர்கள் வளரும், அதன் ஊடாக மீன்கள் துள்ளித் திரியும். நீர் நிலைகளில் குவளை மலர்கள் பூத்துக் குலுங்கும். அதன் மலர்களில் வண்டினங்கள் வந்தமர்ந்து தேன் பருகும், வள்ளல் பசுக்களோ தங்கள் மடியிலிருந்து பாலை அருவியாகப் பொழியும். என்றும் நீங்காத செல்வம் நமக்குக் கிடைத்திடும் பெண்ணே.



திருவெம்பாவை – 3 

முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென் 
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்



பொருள்: 
எழுப்புபவள்: முத்துப் பற்களை உடையவளே, முன்பு நீ எங்களுக்கு முன்பாக வந்து எங்களை எழுப்பி, அப்பனே! ஆனந்தனே! அமுதனே! என்று வாய் இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்ந்து பேசுவாய். ஆனால் இப்போதோ, இப்படி படுக்கையில் கிடப்பதேன்.

உறங்குபவள்: நீங்கள் இறைப் பற்று உடையவர்கள். அந்த இறைவனின் அடியார்கள். நான் ஒரு புதிய அடிமை.எனது செயலை நீங்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாதா..எழுப்புபவள்: உனது அன்பை நாங்கள் அறிவோம் பெண்ணே. இப்படிப்பட்ட அழகிய மனம் உடையவர்கள் எம்பெருமான் சிவபெருமானின் புகழ் பாடாமலிருக்கலாமோ? நீயும் வந்து அவன் புகழ் பாடு



1

செவ்வாய், 16 டிசம்பர், 2014

திருப்பாவை 2





திருப்பாவை 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: 
இந்த பூமியின் வாழ்க்கையை அனுபவிப்பவர்களே பாவை நோன்புக்கு நாம் செய்ய வேண்டிய நல்லவற்றைப் பற்றிக் கேளுங்கள். திருப்பாற்கடலில் துயில் கொண்டுள்ள அந்த அரியின் திருவடிகளை போற்றி பாடுவோம்.நெய் உண்ண மாட்டோம், பால் கலந்த உணவை உண்ண மாட்டோம், அதிகாலையில் துயில் எழுந்து நீராடுவோம். கண்களில் மையிட மாட்டோம். கூந்தலில் மலர் சூட மாட்டோம். செய்யக் கூடாதவற்றை செய்ய மாட்டோம். யாரிடமும், யாரைப் பற்றியும் கோள் சொல்லிப் பேச மாட்டோம். நம்மை நாடி யாசித்து வருவோருக்கு இல்லை எனக் கூற மாட்டோம். இவற்றையெல்லாம் நாம் செய்வது உய்வை அடையும் வழிக்கே என்று நினைத்து பாவை நோன்பை நோற்போம்,


திருவெம்பாவை – 2.
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏலோர் எம்பாவாய்


பொருள்: 
எழுப்பும் பெண் - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம், என் பாசமெல்லாம் அந்த பரஞ்சோதிக்கே என்பாய். அதை மறந்து எப்போதிருந்து இந்த பூப்படுக்கையின்மேல் இத்தனை நேசம் வைத்தாய்!
உறங்கும் பெண் - நான் மட்டுமா நல்ல அணிகலன்களை அணிந்துள்ளேன். நீங்களும் கூடத்தான் அணிந்துள்ளீர்கள். சீ! சீ! சிறிது நேரம் தூங்கியதற்கு தாங்கள் இவ்வளவு இகழ்ந்தா பேசுவது. விளையாட்டாக பழித்துப் பேசும் இடமா இது.
எழுப்பும் பெண் - இறைவன் திருவடியைப் போற்றிப் பாடுவதற்கேற்ற நல்வினை தமக்கில்லையே என தேவர்கள் கூட வெட்கியிருக்க, அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை, நமக்கு அருள் புரிவதற்காகத் தந்தருளும் பொலிவுடைய சிவலோகநாதனும், தில்லையில் நடம் புரியும் ஈசனுமான அவனுக்கு, நாம் எல்லோரும் அன்புடையவர்கள் அல்லவா? அவனது புகழைப் பாட சீக்கிரம் எழுந்து வா பெண்ணே!

திங்கள், 15 டிசம்பர், 2014

திருப் பாவை

(மாதங்களில் மார்கழியாய் ,மலர்களில் தாமரையாய் காட்சி தரும் எம்பிரானை நோக்கி, பாவை நோன்பிருந்து சூடி கொடுத்த சுடர் கொடியாம் ஆண்டாள் அருளியத் திருப்பாவை, தேனினும் இனியதாய் தெவிட்டாத தெள்ளமுதாய் நெஞ்சங்களை நிறைக்கும். சன்மார்க்க நெறி நின்று இறைவனை அடைந்த மாணிக்கவாசகர், ஆண்டாள் ஆகியோர் அருளியப் பாடல்கள் படிக்க படிக்க இன்பம் தருபவை. மார்கழியில் மட்டுமல்ல தினந்தோறும் படித்து இறைவனது அருளைப் பெறச் செய்யும் அற்புதப் பதிகங்கள்)
*******
திருப்பாவை 

மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!


சீர்மிகுந்த ஆயர்பாடிச் செல்வச் சிறுமிகளே, மார்கழி மாதத்தில் பூர்ணச் சந்திரனொளியில் நீராடக் காத்திருக்கும் சிறுமிகளே வாருங்கள். பகைவர்க்கு கூர்வேலைக் கொண்டு கொடுந்தொழில்புரியும் நந்த கோபரின் மகனும், அழகிய  மலரரும்பு போன்ற கண்களையுடைய யசோதையின்  இளஞ்சிங்கம் போன்ற புதல்வன் அவன் கருமையான உடலுடையவன். ஆனால் முகமோ ஒளிவீசும் நிலவையொத்தது.  அப்படிப் பட்ட  நாராயணன் நமக்கு வரங்கள்  தருவான். நாம் அவனைத் துதித்து பாரோர் புகழும் வண்ணம்    வணங்குவோம். 



 
திருவெம்பாவை


( திருவெம்பாவை ஞானவிளக்கேற்ற வந்த நால்வரில் ஒருவராம் மாணிக்கவாசகரால் அருளப்பட்டது. தேனினும் இனிய திருவாசகத்தின் ஒரு பகுதியாய் அமைந்துள்ளது.. பாவைப் பாடல் வடிவத்தை மாணிக்கவாசகர்,ஆண்டாள் ஆகிய இருவர்மட்டுமே அருளியிருக்கிறார்கள். இருவரும் சன்மார்க்க நெறி நின்று இறைவனை அடைந்தவர்கள். திருவாசகத்தில் அமைந்துள்ள இதரப் பதிகங்களைப் போலவே திருவெம்பாவையும் உள்ளொளிப் பெருக்கி உலப்பிலாஆனந்தம் தருகின்ற அற்புதப் பதிகங்களாய் அமைந்திருக்கின்றன  )




ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடம்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாத்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசுஏலோர் எம்பாவாய்

பொருள்......

ஒளி பொருந்திய அகன்ற வாள் போன்ற கண்களை உடைய பெண்ணே ஆரம்பமும முடிவும் இல்லாதவன் சிவபெருமான். அருட்பெரும் ஜோதி வடிவானவன். அவன் மகிமையை பாடுகிறோம். அதை கேட்ட பின்னும் நீ தூங்குகிறாயே? உன் காதுகள் கேட்கும் சக்தியற்று போனதா? மகாதேவனின் நெடிய சிலம்பணிந்த திருவடிகளை தெருவில் நின்று நாங்கள் பாடுகிறோம். அதை கேட்டதும் பக்தி நிறைந்த பெண் ஒருத்தி விம்மி விம்மி புரண்டு விழுந்து இந்த நிலத்தில் தன்னை மறந்து கிடந்தாள். இதுவன்றோ பக்தியின் உச்ச நிலை. ஆனால் நீ இன்னும் உறங்கி கொண்டு இருக்கிறாயே? இது என்ன விந்தை? எழுந்து வா