செவ்வாய், 7 ஜூன், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-5

த்வைதம்,வஷிஷ்டாத்வைதம்,அத்வைதம்

தர்ஷ்னாக்களின் நீட்சியாக, பிரம்மம், ஆன்மா மற்றும் பிரபஞ்சம் இவ்ற்றிற்கு இடையேயான தொடர்புகுறித்து மூன்று முக்கிய தத்துவங்களையும் நாம் அறிந்தாக வேண்டும்.

த்வைதம்:

மத்துவாச்சாரியாரால் அருளப்பட்டதே த்வைத கோட்பாடாகும். இதன்படி இறைவன் மற்றும் ஆன்மா இவை இரண்டுமே உண்மையானவை. இறைவன் என்பவன் படைத்து காத்து, அழிப்பவன்.கடவுள் பரிபூரணமானவன். அப்பழுக்கற்றவன்.ஆன்மா தனது விடாத முயற்ச்சியினால் இறைவனை அடையலாம். ஆன்மா ஒவ்வொரு பிறவியிலும் தான் செய்கின்ற பாவங்களுக்கான தண்டனையை அடுத்து வரும் பிறவிகளில் அனுபவித்து, தன்னை மறைத்திருக்கும் குற்றங்கலிலிருந்து முற்றிலுமாய் நீங்கி இறைவனை அடைகிறது என்பதே த்வைத கோட்பாட்டின் சுருக்கமாகும்.

வஷிஷ்டாத்வைதம்,

ராமானுஜரால் அருளப்பட்டது வஷிஷ்டாத்வைதம். இது மேம்படுத்தப்பட்ட அத்வைத கோட்பாடு என்று கூட அழைக்கப்படுகிறது. த்வைதத்தை மறுக்கும் இக்கோட்பாடு, நாம் எதை காண்கிறோமோ, கவனிக்கிறோமோ அவை யாவுமே இறைவன்தான் என கூறுகிறது.கடவுளே அனைத்து படைப்பிற்கும் காரணம்.ஒவ்வொரு உயிரினமும் ஒரு உடலையும், ஒரு ஆன்மாவையும் கொண்டுள்ளன. அது போலவே பிரபஞ்சமே உடலாகவும், அனைத்து ஆன்மாகளின் ஆன்மாவாக இறைவனும் திகழ்கிறார் என்பதே இதன் முக்கிய கோட்பாடாகும். இதன் மூலம் பிரபஞ்சம், இறைவன் என இரண்டு மூல கூறுகள் உண்டாயினும், ஆன்மாவும் இறைவனும் வேறில்லை என எடுத்து காட்டுகிறது. இறைவன் என்னும் ஆரம்பமும் முடிவுமற்ற ஆன்மாவின் அங்கங்களே மற்ற ஆன்மாக்கள் என்பது வஷிஷ்டாத்வைதத்தின் மைய கருத்தாகும்.

அத்வைதம்

வேதாந்தத் தத்துவங்களின் நீட்சியே ஆதிசங்கரரால் வடிவமைக்கப்பட்ட அத்வைத கோட்பாடாகும்.உபநிஷத்துகளின் பல்வேறு கோணங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதே அத்வைதமாகும்.

உபநிஷத்களில் மகா வாக்கியம் என்றழைக்கப்படும் சண்டொக்யா உபநிஷத்தில் காணப்படும் தத்துவமசி (நீயே அதுவாகிறாய்), ப்ரிஹடர்ண்யகா உபநிஷத்தில் காணப்படும் அஹம் ப்ரம்மாஸ்மி(நானே கடவுள்)போன்ற வாக்கியங்களின் தத்துவ விளக்கமே அத்வைதமாகும்.

மற்ற தத்துவங்கள் போல் இல்லாமல் , ப்ரம்மம் என்று சொல்லப்படும் முழுமுதற் பொருள் ஒன்றே உண்மையானது மற்றவை யாவும் மாயை என்கிறது அத்வைதம். இது ஞான யோக கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. அத்வைதம் ஏகத்வம் எனவும், மாயா வாதம் எனவும், சங்கரா தத்துவம் எனவும் அழைக்கப்படுகிறது.

அத்வைதத்தின் முக்கிய அம்சங்கள்

அத்வைத தத்துவத்தின்படி நம்முள் இருக்கும் ஆன்மா ஒன்றே உணரவும், அறியவும்,பார்க்கவும் சக்தியுடையதாய் இருக்கிறது. ப்ரம்மமும் ஆன்மாவும் இரண்டல்ல ஒன்றேதான். ப்ரம்மம் ஒன்றுதான் அதுவே நம் அனைவரிடமும் பிரிக்கப்பட்டுள்ளது. ப்ரம்மம் மட்டுமே உண்மையானது. ப்ரம்மம் ஒன்றுதான். . ஆனால் மாயை காரணமாக நமக்கு பலவாக தோற்றமளிக்கிறது. நாம் என்று நாம் எதை நினைத்து கொண்டிருக்கிறோமோ அது நாமல்ல. நம்முள் இருக்கும் ப்ரம்மமே நாம். பிரபஞ்சத்தை முழுமையாக ஆக்ரமித்திருக்கும் ப்ரம்மத்தின் ஒரு பகுதியே நாம்.

சற்குண மற்றும் நிர்குண ப்ரம்மம்

உப நிஷத்துக்கள் ப்ரம்மத்தை இயல்பற்றது என குறிக்கின்றன. இதுவே நிர்குண ப்ரம்மம் என்றழைக்கப்படுகிறது. ப்ரம்மத்தின் இயல்புகளை வார்த்தைகளால் வருணிக்க இயலாது. ஆனால் மனிதன் தனது அறியாமையின் காரணமாக ப்ரம்மத்திற்கு பலவகையான இயல்புகளையும் , குணங்களையும் கற்ப்பிக்கிறான். இதன் காரணமாகவே ப்ரம்மம் சற்குண ப்ரம்மம் என்றும் அழைக்கப்படுகிறது. சற்குண ப்ரம்மமே ஈஸ்வரனாக நம்மால் அறியப்படுகிறது. ப்ரம்மமே படைபுகளுக்கு காரணமாயினும் , அது எந்த மாற்றத்தையும் அடைவதில்லை. இதனால் அது மட்டுமே உண்மையானது, அழிவற்றது என்பது புலனாகும்.

அத்வைதம் நம்மை நாம் அறிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது. இது ஒரு ஞான யோகப்பயிற்சியாகும். நாம் த்யானிக்கும் போது, பயம், துக்கம், இன்பம், துன்பம், மற்றும் நம்மைப் பற்றி ஒரு பொதுவான உணர்வு ஏற்படும். இந்த உணர்வுதான் நம்முடைய ஆன்மாவா என்றால் நிச்சயமாக இல்லை. நம்மால் கவனிக்கப்படும் எதுவும் ஆன்மாவல்ல. எது கவனிக்கிறதோ அதுவே ஆன்மா என்கிறது அத்வைதம். உயிர்கள் அனைத்தும் ப்ரம்மத்தின் அம்ஸம் என்பதால் அவற்றுள் எவ்வித வேறுபாடும் கிடையாது என்பதே அத்வைதம் நமக்கு தரும் உன்னத உபதேசமாகும்.