செவ்வாய், 3 மார்ச், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் -1


"விகட கவி' சிறு வயதில் அநேகமாக நாம் அனைவருமே இந்த சொல்லை கடந்து வந்திருப்போம். இடமிருந்து படித்தாலும் வலமிருந்து படித்தாலும் ஒரே பொருள் தருகின்ற ஒரு சொல்.  இது போல் இன்னொரு சொல்லை உருவாக்க முயன்று நம்மில் பலர் தோல்வியும் அடைந்திருக்கலாம். ஆனால் இருபத்திரண்டு வரிகளுடன் கூடிய ஒரு பதிகத்தை ஒவ்வொரு இரண்டு வரிகளும் இடமிருந்து படித்தாலும் வலமிருந்து படித்தாலும் ஒரே பொருள் தருவதோடு அதனையும் ஒரு ராகத்தின் கீழ் அமைப்பது என்பது எளிதான காரியமா?தனது மூன்றாவது வயதில் உமை அம்மையினால் ஞானப்பால் அருளப் பெற்று திருக் கடைகாப்பு என்னும் அற்புதப் பதிகங்களை அள்ளி வழங்கிய ஆளுடை பிள்ளையாம் திரு ஞானசம்பந்தர் தான் அந்த அற்புதப் பதிகத்தை அருளியுள்ளார். அவருடைய மற்றப் பதிகங்களைப் போலவே இதிலும் எட்டாவது பதிகத்தில் இராவணன் கைலாயத்தை தூக்க முயன்று இறைவனால் தண்டிக்கப்பட்ட வரலாற்றையும், ஒன்பதாவது பதிகத்தில் திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய வரலாற்றையும் பத்தாவது பதிகத்தில் புத்த சமண் மாசு அறுக்கும் வண்ணமுமாகவும் இந்த பதிகம் படைக்கப்பட்டிருப்பது வியற்பிற்குறியதன்றோ?இறையருள் இன்றி இப்படியொரு பதிகம் படைக்க இயலுமா?

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.



குறிப்புரை

யாம் - ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால். ஆமா - அதுபொருந்துமா? நீ - நீயே கடவுளென்றால். ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும். மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே. காமா - யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே. காண் - காணுமாறு பூண்ட.  நாகா - பாம்புகளை யுடையவனே. காணாகாமா - கை, கால் முதலிய அவயவங்கள் காணாதனவாச் செய்தகாமனையுடையவனே. சினைவினை முதன்மேல் நின்றது. காழீயா - சீகாழிப்பதியில் எழுந்தருளியிருப்பவனே. மாமாயா - இலக்குமிக்குக் கணவனான திருமாலாகவும் வருபவனே மா - கரியதாகிய. மாயா - மாயைமுதலிய மலங்களினின்றும். நீ - எம்மை விடுவிப்பாயாக. மலம்கரியதென்பதை  என்னும் திருவருட்பயனாலறிக. மாயா - வடசொல், உபலட்சணம்

யாகா - யாகசொரூபியே. யாழீ - யாழ்வாசிப்பவனே. காயா - அடியாருக்கு அருள வருகையில் உருவத்திருமேனி கொள்பவனே. காதா - சங்காரகருத்தாவே. காதுதல் - கொல்லுதல். வடசொல். யார் ஆர் - எவரெவருக்கும். ஆ - (பெற்றவள்) ஆகும். தாய் ஆயாய் - தாயானவனே. (ஆ + தாய் = வினைத்தொகை) ஆயா - ஆராய முடியாத. தார் - மாலை. ஆர் ஆயா - ஆத்திப்பூவாகக் கொண்டவனே. (சிவனுக்குரிய மாலைகளில் திருவாத்தியும் ஒன்று) தாக ஆயா - காதல் கொண்ட முனிபத்தினிகளாகிய மகளிர்கூட்டத்தை யுடையவனே (தாக ஆயன் குளாம்பல், மராடி என்பது போற்கொள்க) காழீயா ! யா - துன்பங்கள் எவற்றினின்றும் கா - எம்மைக் காப்பாயாக.

தாவா - அழியாத. மூவா - மூப்பில்லாத (என்றும் இளமையாய் உள்ள) தாசா - தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. காழீநாதா - சீகாழிக்குத்தலைவனே! நீ - எவரும் சஞ்சரிப்பதற்கு அஞ்சி நீக்குகின்ற, யாமா - நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனே. மா - பெருமை வாய்ந்தவனே! (பண்பாகு பெயர்) மா - ஐராவணமாகிய யானையின்மேல், யா நீ - ஏறி வருபவனே! தானாழி - (தான + ஆழி) = கொடையில் கடல் போன்றவனே. சா - சாவதினின்றும். கா - காப்பாற்றுவாயாக. காசா - இரத்தினம் போன்ற ஒளியை உடையனே! தா - கேட்டவரங்களை எல்லாம் தருவாயாக. வா - என் முன் எழுந்தருள்வாயாக. மூ - எவற்றினும் முன்னே தோன்றிய. வாதா - காற்று முதலாக உள்ள ஐம்பூத வடிவாய் உள்ள. தாவா மூவா இத்தொடர்க் கருத்து. \\\\\\"சாவா மூவாச் சிங்கமே\\\\\\" எனச் சிறிது மாறி அப்பர் வாக்கில் வருவது காண்க. தசகாரியமாவது:- தத்துவரூபம்; தத்துவதரிசனம்; தத்துவ நீக்கம்; ஆன்மரூபம்; ஆன்மதரிசனம்; ஆன்மநீக்கம்; சிவரூபம்; சிவதரிசனம்; சிவயோகம்; சிவபோகம் என்பன. (சுத்திக்கு நீக்கம் என்று கொண்டார் இக்குறிப்புரை எழுதினவர்.) யாநம் - வடசொல். மா - இங்கு இரண்டாயிரம் கொம்புகளை உடைய ஐராவணத்தைக் குறித்தது. தான + ஆழி - தீர்க்கசந்தி. கருணைக்கடல் என்றது போல் கொடைக்கடல் என்றார். காசா:- `மழபாடியுள் மாணிக்கமே\\\\\\' என்ற சுந்தரமூர்த்திகள் வாக்கால் அறிக. வாதம் - காற்று. உப இலக்கணத்தால் ஏனைய பூதங்களையும் தழுவிற்று. இலக்கணக்குறிப்பு : மூவாத்தாசா என்று மிக வேண்டியது இயல் பாயிற்று. காரணம் வருமொழித் தகரம் வடமொழியின் மெல்லோசை உடைத்து ஆதலின். தாசன் - தத்திதாந்த பதம்.

நீவா - என்றும் மாறாத. வாயா - உண்மைப் பொருளானவனே. கா - தாங்கிய. யாழீ - வீணையினையுடையவனே. வான்நோவாராமே - கொடிய பிறவித் துயரம் எம்மை எய்தாமல், காவா - (காகா) வந்து காத்தருள்வாயாக, வான் - தேவர்கள். நோவாவா - துன்பமடையாவாறு. மேரா - மேரு மலையை ஏந்தியவனே. காழீயா - சீகாழிப் பதியுள் எழுந்தருளியுள்ளவனே. காயா - ஆகாய சொரூபியே. வாவா நீ - நீ விரைந்து வருவாயாக. வாய் - உண்மை. காயாழி - வினைத்தொகை. வான் நோ நல்ல பாம்பு என்பதைப்போல. வான் - கொடுமையின் மிகுதி என்னும் பொருளில் வந்தது. காயா - முதற்குறை. வாவா - அடுக்கு; விரைவுப் பொருட்டு.

யா - எவையும் வணங்கத்தக்க. யா - எவற்றிற்கும். காலா - கால வடிவமாக உள்ளவனே. மேயா - எவற்றினுள்ளும் எள்ளில் எண்ணெய் போல் வியாபித்து இருப்பவனே. மேதாவீ - அறிவில் மேம்பட்டவனே. தாய் ஆவி - எவ்வுயிருக்கும் தாயாகவும் உயிராகவும் உள்ளவனே. வீயாதா - என்றும் அழிவில்லாதவனே. வீ - கின்னரம் முதலிய பறவைகள் (தாம் - அசை) மே - தன்னருகில் வந்து விழும்படியாக. யாழீ - வீணைவாசிப்பவனே. யாம் - நாங்கள் மேல் - மேற்கொண்டு. ஆகு - ஆவனவற்றிற்கு. ஆயா - ஆயாதவாறு. கா - எம்மைக் காப்பாயாக (இலக்கணக்குறிப்பு) காலதத்துவமாக உள்ளவன் சிவபெருமானே என்பது \\\\\\"காலமே உனை என்று கொல் காண்பதே\\\\\\" (திருவாசகம்) ஆயா - ஈறு கெட்ட எதிர் மறைவினை எச்சம். ஈற்றுத் தொடரில் ஆய்தலாவது. \\\\\\"மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கேபுகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ\\\\\\" என்பது (திருவாசகக்(தி.8) கருத்து) வீதாமேயாழி - யாழிசையிற் பறவைகள் வந்து வீழ்வதைக் காந்தருவதத்தையார் இலம்பகத்தாலும் அறிக. யாழீ - என்பதற்கு \\\\\\"குழலன்கோட்டன்\\\\\\" என்ற திருமுருகாற்றுப் படை(தி.11)க்கு நச்சினார்க்கினியர் உரைத்தது உரைக்க.

மேலேபோகாமே - மார்க்கண்டேயர் மீது எமன் போகாமல். தேழீ - கடுங்குரலால் உரப்பினவனாய். காலாலே - காலினாலே. கால் ஆனாயே - (அவ்வெமனுக்கு) காலன் ஆனவனே. ஏல் - பொருந்திய. நால் - சனகர் முதலிய நால்வருக்கும். ஆகி - குருவாகிய. ஆல் - கல்லால மரத்தில். ஏலா - ஏற்றவனே. காழீதே - சீகாழியிலுள்ள தெய்வமே. மேகா - (திருமால் மேகவடிவங்கொண்டு வாகனமாகி நிற்க) அந்த மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவனே. போலேமே - யாங்கள் உமது பல்கணத்தில் ஒருவராக எண்ணப்படுதற்கு அத்திருமாலை ஒத்திலோமோ?

நீயா - (உம்மை) நீங்குதல் அறியாத மாநீ (மானீ) - உமா தேவியை உடையவனே. ஏயா - ஒப்பற்ற. மாதா - தாயே. ஏழீ - ஏழிசை வடிவாய் உள்ளவனே. காநீதானே - நீயே வலியவந்து என்னைக் காப்பாயாக. நே - அன்பார்ந்த இடத்தை. தாநீ - இடமாக உடையவனே. காழிவேதா - சீகாழியில் எழுந்தருளியுள்ள வேத சொரூபியே. மாய் - எம்மைக்கொல்லும். ஆநீ - துன்பங்களை. நீ மாயாயே - நீ கொல்ல மாட்டாயா? மான் - மானைப்போன்றவர். மாநீ - மானை உடையவன். ஏழீ - ஏழ்தொகைக் குறிப்பாக இசையை உணர்த்தியது. \\\\\\"ஏழிசையாய் இசைப்பயனாய்\\\\\\" சுந்தரமூர்த்திகளின் வாக்கினாலும் அறிக. காநீதானே - `அழையாமே அருள் நல்குமே\\\\\\' என்னும் திருவோத்தூர்த் திருப்பதிகத்தில் நம் அடிகளார் கூறினமை காண்க. தாநீ - தானத்தை (இடத்தை உடையவனே) எங்களைக் கொல்லும் துன்பத்தை நீ கொல்லமாட்டாயா? என்பது ஓர் நயம்.

நேணவராவிழயாசைழியே, நே, அணவர், ஆ, விழ, யா, ஆசை, இழியே. நே அணவர் - (உமது திருவடியில்) நேயம் பொருந்தும் அடியவராம், ஆ - பசுக்கள். விழ - தன் வயமற்றுக் கிடக்க. யா - (யாத்த) கட்டிய, ஆசை - ஆசையாகிய கயிற்றை. இழியே - அவிழ்த்து விடுபவனே. அடியவரைப் பசுவென்று, ஆசையைக் கயிறென்னாமையால் ஏகதேச உருவகம். நேணவர் - நே + அணவர் எனவும், யாசைழியே - யா, அசை, இழியே எனவும் பதம் பிரித்துக் கொள்க. யா + ஆசை = வினைத்தொகை; நேணவர் - யாசைழியே இல்விரு தொடரும் மரூஉ முடிபின. வேகதளேரியளாயுழிகா - வேக(ம்) அதரி ஏரி, அளாய உழி, கா. வேகம் - விலங்குகளில் வேகமாய் ஓடவல்ல மானின், அதள் தோலையணிந்த, ஏரி - அழகனே. (ஏர் - அழகு, இகர விகுதி.) அளாய உழி - துன்பங்கள் எம்மைச் சூழ்ந்தவிடத்து. கா - காப்பாற்றுவாயாக. அளாய என்பற்கு வினை முதல் வருவித்து உரைக்கப்பட்டது. காழியு(ள்)ளாய்! அரிளேதகவே. அரு, இளவு, ஏது, அகவே. ஏதம் - குற்றம். அது கடைக் குறைந்து ஏது என நின்றது. இளவு - சிறுமைத் தன்மை. இளப்பம், இளந்தலை, இளக்காரம், எனவும் வழங்கும். உகரம் - பண்புப்பெயர் விகுதி. அஃகவே என்பது அகவே என நின்றது. அருஏதம் - மன்னித்தற்கரிய குற்றங்கள். இளவு - (எமது) சிறுமைத் தன்மையால் செய்தனவாதலின், அஃகவே - அவை மன்னிக்கத்தக்கன ஆகுக. (அஃகுதல் - சுருங்குதல் இங்குக் குறைந்து மன்னிக்கற்பாலது என்னும் பொருளில் வந்தது). ஏழிசை இராவணனே - ஏழிசை பாடிய இராவணனுமல்லவா பெரும் பிழையும் மன்னிக்கப் பெற்றுத் திருவருளுக்குப் பாத்திரமாயினான். யா - முன்னிலையசை. செருக்கினால் செய்த பெரும் பிழையை மன்னித்த கருணை, சிறுமையாற் செய்த பிழைகளை மன்னிக்கவும் தகும் என மன்றாடியவாறு.

காலே - காற்றாகி யெங்கும் கலந்தவனே. மாலே - எவற்றிற்கும் மாயம் செய்பவனே. மால் - மயக்கம். மாயம் - மாயனென்னும் திருமாலுக்கும் மாயம்செய்பவனாகையினால் சிவ பெருமானுக்கு மாயனென்றொருபெயர் \\\\\\"மறவனை யன்று பன்றிப் பின்சென்ற மாயனை\\\\\\' என்னும் சுந்தர மூர்த்தி நாயனார் திரு நள்ளாற்றுப் பதிகத்தாலும் \\\\\\"மாயனே மறிகடல் விடமுண்ட வானவா\\\\\\" என்னும் திருவாசகம் செத்திலாப் பத்தானும் அறிக. மே - சிறந்த. பூ - மலர்ந்த. பூ மேல் ஏ(ய்) - பிரமனும். மாலே - மாலும். காலே - திருவடியையும். மேலே - திருமுடியையும். காண் - காணலை. நீ - ஒழித்த. காழீ - வைரத்தன்மையனே. காழீ! காண் - கடைக்கணி. கால் ஈ - திருவடியைத் தருக. கா:-

வேரி - மணம். ஏண் - பெருமை. நவம் - புதுமை. காழியாயே:- ஏனை - துன்பத்தையும். நீள்நேம் - மிக்க அன்பையும். அடு - முறையே ஒழி(த்தலும்) அள் - அள்ளிக்கொள்ளுதலுமாகிய செய்கை. ஓகரது ஏ - யோகிகளுடைய செய்கையே. தேரகளோடு - தேரர்களின் உபதேசங்களோடு. அமணே - அமணர்களின் உபதேசங்களையும். நினை - நினைத்தலையும். ஏய் - அவரோடு பொருந்துதலையும். ஒழி - ஒழிப்பீராக. காவணமே - அந்நெறிகளிற் சேராமற்காக்கும் திறம். உரிவே - உமக்கு உரியவேயாகும். உரிவே - உரியவே என்பதன் மரூஉ.

நேர் - நேர்மையை. அகழ் ஆம் - கல்லியெறிவதாகிய. இதய ஆசு - மனத்துக் கண் எழும் (காம வெகுளி மயக்கம் என்னும்) முக் குற்றங்களையும். அழி - அழிக்கவல்லவனே. அழீ என்பதன் குறுக்கல்விகாரம். தாய் ஏல் நன் நீயே - உலகுக்கெல்லாம் தாயாந் தன்மையை யேற்கத்தக்கவன் நீ ஒருவனே. \\\\\\"மூவேழுலகுக்கும் தாயே\\\\\\" என்ற திருவாசகத்தும் அறிக. (தி.8 புணர்ச்சிப்பத்து) வாழ் + ந் + அன் = வாணன் என்றாகியதுபோல ஏல் + ந + அன் = ஏனன் என்றாகியது. நல் - நன்மை புரிவதில். நீள் - மிக்கோனே. நீள் முதனிலைத் தொழிற்பெயராய் ஆகுபெயர்ப் பொருளில் நின்று குறுக்கல் விகார முற்ற விளிவேற்றுமை. ஆய் உழிகா - தளர்ந்த இடத்துக் காப்பாயாக. தமிழாகரன் - தமிழே உடம்பாக உடைய திருஞானசம்பந்தனே. காழியுளானின் - சீகாழிப் பதியானைப்பற்றிய. நையே - கேட்டோர் மனம் குழைப்பதாகிய இப்பாடல்களை. நினையே - நினைத்துப் பாடவே. தாழ்(வு). குறைவும் - இசையா - உண்டாகா.


கௌசிகப் பண்ணில் அமைந்த இம்மாலை மாற்றுப்பதிகம் போல் இயற்ற வேறு சில புலவர்கள் முயன்றிருந்தாலும் அருளினால் விளந்த இப்பதிகத்தின் தனிச் சிறப்பை அவர்களால் எட்ட முடியவில்லை என்பதே உண்மை!