புதன், 29 ஏப்ரல், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள்-7


ஜாதக தோஷங்களையும் இன்ன பிற இன்னல்களையும் களையும் பதிகம்

திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டிலிருந்து மதுரை செல்ல எண்ணிய போது உடனிருந்த அப்பர் பெருமான் தற்பொழுது நாளும் கோளும் நன்மை பயக்கும் வகையில் இல்லை.அதனால் பின்னர் செல்லலாம் என அருளினார். சம்பந்தர் இறைவனிடம் பூரண சரணாகதி அடைந்தவர்களுக்கு நாளும் கோளும் நன்மையே  செய்யும் என உணர்த்த இப்பதிகத்தை அருளினார். இறைவனிடம் பூரண சரணாகதி அடைபவர்களுக்கு நாளும் கோளும் மட்டுமல்ல அனைத்துமே நன்மையைத்தான் செய்யும் என அகிலத்திற்கு உணர்த்தவே அப்பரிடமிருந்து வினாவினையும் சம்பந்தரிடமிருந்து விடையினையும் பெறச்செய்தான் இறைவன்.இப்பதிகத்தை தொடர்ந்து தினமும் ஓதி வருபவர்கள் ஜாதகத்தினால் வரும் இன்னல்கள் மட்டுமின்றி வேறு வகையான இன்னல்களிலிருந்தும் விடுபடலாம் என்பது பல்லாண்டு காலமாக பக்தர்கள் அனுபவித்து வரும் உண்மையாகும்.


வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

வாள்வரிய தளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே
  
  
  
  
  
  
  

திங்கள், 27 ஏப்ரல், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 6பிணிகள் தீர்க்கும் பதிகம்

திருஞானசம்பந்தர் திருமடத்தில் சமணர்கள் தீவைத்த செய்தி மதுரை மாநகர் முழுதும் பரவியது. அதனைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மிகவும் மன நடுக்கம் உற்றனர். . திருமடத்திலிடப்பட்ட தீயால் யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாமை கருதி ஆறுதல் உற்றனர். இந்நிலையில் பாண்டி மன்னனை வெப்பு நோய் பற்றி வருத்தியதறிந்து உளம் நடுங்கி மன்னனை அடைந்தார்கள். மருத்துவர்களாலும் சமண முனிவர்களாலும் நோயைக் குணப்படுத்த இயலவில்லை.. 
இந்நிலையில் குலச்சிறையார் அரசனை அணுகி `ஞானசம்பந்தர் திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளது. அவர் வந்தால் நோய் தீரலாம்` என்றார். மன்னன் ஞானசம்பந்தர் என்ற நாம மந்திரத்தைக் கேட்ட அளவில் அயர்வு நீங்கியதை உணர்ந்து `அவரை அழைப்பீராக` என்று கூறினான். சமணர்கள் அரசனிடம் இந்நோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப் பெற்றாலும் தங்களாலேயே தணிந்தது எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் நடுநிலை பிறழேன் என மறுத்தான். குலச்சிறை யாரும் அரசியாரும் ஞானசம்பந்தரைச் சென்று தரிசித்துத் திருமடத் திற்குத் தீயிட்ட செயலுக்கு மிக வருந்தியவர்களாய் மன்னன் வெப்பு நோயால் வாடுவதை விண்ணப்பித்துத் `தாங்கள் எழுந்தருளி நோயைக் குணப்படுத்தினால் உய்வோம்` எனக் கூறி நின்றனர். ஞான சம்பந்தர் சமணர்களோடு செய்யும் வாதில் வென்று `தென்னர் கோனுக்குத் திருநீறு அணிவிப்போம்` எனக் கூறிப் புறப்பட்டுத் திருக் கோயிலை அடைந்து `காட்டு மாவது உரித்து` என்ற திருப்பதிகத்தால் போற்றி இறைவன் திருவுளக் குறிப்பை அறிந்தார். மேலும் சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க `வேத வேள்வியை` என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.ஞானசம்பந்தர் பாண்டியன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளினார். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் அவரோடு உரையாடும் முறையில் `நுமது ஊர் எது` எனக் கேட்கப் `பிரமனூர்` என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார். சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி `உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள்` எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி `மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம்` என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து `அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம்` என்றார். சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் `மந்திரமாவது நீறு` என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப் பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து `யான் உய்ந்தேன்` என்று போற்றினான். திருநீற்றின் பெருமையை உணர்த்தும் இப்பதிகத்தை தொடர்ந்து ஓதி திருநீறு அணிந்தால் பிணிகள் நீங்கும் என்பது நிச்சயம்.

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே


பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே

எயிலது வட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான் திருநீறே

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆலவா யான்திரு நீறே.

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மாலவா யான்திரு நீறே


குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங்கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத்த வர்பணிந் தேத்தும் ஆலவா யான்திரு நீறே

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 5

எதிரிகளிடமிருந்து காக்கும் இறைப்பதிகம்

திருஞானசம்பந்தர் தனது திருத்தல யாத்திரயின் பொருட்டு மதுரை நகருக்கு சென்று ஒரு மடத்தில்  தங்கியிருந்தார்.மதுரை மன்னன் கூன் பாண்டியன் சமண சமயத்தை தழுவியதோடு சமணர்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்சி செய்து வந்தான்.இதனை பயன்படுத்தி சமணர்கள் சைவ சமயத்தை முற்றிலும் அழிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருந்தனர். நாடெங்கிலும் சைவ சமயத்தை திரும்ப தழைத்தோங்க செய்து கொண்டிருக்கும் திருஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கிறார் என தெரிய வந்ததும் அவரை எப்படியேனும் அழித்துவிட என்ணிய சமணர்கள் அவர் தங்கியிருந்த மடத்திற்கு இரவு நேரத்தில் தீ வைத்துவிட்டனர். இதனால் அச்சமுற்ற சம்பந்தரோடு தங்கியிருந்த சைவர்கள் அவரிடம் முறையிட்டனர். இது சமணர்களால்தான் நிகழ்த்தப்பட்டது என இறையருளால் தெரிந்து கொண்ட சம்பந்தர், சமணர்களைப் பற்றி பாண்டிய மன்னனுக்கு புரிய வைக்க வேண்டி இந்தத் தீ மெதுவாக சென்று பாண்டிய மன்னனை பற்றட்டும் என இறைவனை வேண்டி இப்பதிகத்தை அருளினார்.அருளினால் விளைந்தப் பதிகம் அல்லவா?  அந்தத் தீயும் பாண்டிய மன்னன் உடலுக்குள் சென்று வெப்பு நோயை கொடுத்தது. அதன் பிறகு நடந்தவற்றை அடுத்தப் பதிகத்தில் பார்க்கலாம்.எதிரிகள் தரும் இன்னல்கள் நம்மை தீண்டாதிருக்க இப்பதிகத்தை தொடர்ந்து படித்து வந்தால் எதிரிகள் கொடுத்து கொண்டிருக்கும் தொல்லைகளில் இருந்து நிச்சயமாக விடுபடலாம்.

செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
     பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!      

சித்தனே! திரு ஆலவாய் மேவிய
அத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே

தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!

சிட்டனே! திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே! “அஞ்சல்!” என்று அருள்
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!

தஞ்சம்!” என்று உன் சரண் புகுந்தேனையும்,
“அஞ்சல்!” என்று அருள், ஆலவாய் அண்ணலே!
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!  

செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
அங்கணா! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!  


தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! 

தாவினான், அயன்தான் அறியா வகை
மேவினாய்! திரு ஆலவாயாய், அருள்
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே

எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே. 

     
       
வியாழன், 23 ஏப்ரல், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 4


மண வாழ்வு காக்கும் மந்திரம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது  திருமருகல் என்னும் தலம். இத்தலத்தில் தான் திருமணம் செய்ய நினைத்திருந்த வாலிபனை பாம்பு தீண்ட செய்வதறியாது அழுது கொண்டிருந்த நங்கையை கண்ட திருஞானசம்பந்தர் , அவளது நிலை கண்டு இரங்கி இப்பதிகத்தைப் பாடி அவனை உயிர்ப்பித்தார். பின்பு இருவருக்கும் திருமணம் செய்து வாழ்த்தியருளினார்.இறையருளினால் விடந்தீர்த்தம் இப்பதிகம் ஒரு ஆன்மீக அற்புதம் அன்றோ? விடந்தீர்ப்பது மட்டுமன்றி மங்கையரின் மண வாழ்வில் ஏற்படும் இன்னல்களை இப்பதிகம் தீர்ப்பதுடன் மணமாகாதப் பெண்களுக்கு இப்பதிகப் பாராயணம் மிகப் பெரிய நன்மையை அளிக்கிறது என்பது அனுபவ உண்மையாகும்,

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.

சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.

அறையார் கழலும் மழல்வா யரவும்
பிறையார் சடையும் முடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே

ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.

துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்ட முடையாய் மருகல்
  கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே

பலரும் பரவப் படுவாய் சடைமேல்
  மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே

வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே

இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலராக் கினையே.

எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததோர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே

அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே.

வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.செவ்வாய், 21 ஏப்ரல், 2015

கொ.வை.அரங்கநாதனின் ஆன்மிகச் சாலை: அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 3

கொ.வை.அரங்கநாதனின் ஆன்மிகச் சாலை: அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 3: கடல் கடந்தோரின் துயர் நீக்கும் பதிகம் ஞானசம்பந்தர், பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கச் செய்து, சோழ நாட்டில் கொள்ளம்பூதூருக்கு வருகை தந்தபோ...

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 3


கடல் கடந்தோரின் துயர் நீக்கும் பதிகம்

ஞானசம்பந்தர், பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கச் செய்து, சோழ நாட்டில் கொள்ளம்பூதூருக்கு வருகை தந்தபோது முள்ளியாற்றில் வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. ஓடஞ் செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களைக கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர். அங்கு வந்த ஞானசம்பந்தர், அவ் ஓடங்களுள் ஒன்றினை அவிழ்த்து நாவினையே ஓடக் கோலாகக் கொண்டு "கொட்டமே கமழும்" எனத் தொடங்கும் பதிகம் பாடி மறுகரையை அடைந்தார். இறைவன் காட்சிதர, தரிசித்து, ஆலயத்தை அடைந்து போற்றிப் பதிகத்தை நிறைவு செய்து வழிபட்டார். (இவ்வற்புதம் இன்னும் இத்தலத்தில் 'ஓடத் திருவிழா 'வாக ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது)ஒவ்வொரு பதிகத்தின் மூன்றாம் வரியில் செல்ல உந்துக சிந்தையார் தொழ என்ற வரிகள் ஓடத்தை செலுத்தும் துடுப்பின் அசைவாய் அமைந்திருப்பது அற்புதம்.. கடல் கடந்து வாழும் பக்தர்கள் இப்பதிகத்தை தினந்தோறும் உள்ளம் உருக  ஓதும்போது அங்கு ஏற்படும் பிரச்சனைகள் அகல்வதாய் பெரிதும் நம்பப்படுகிறது

கொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

கோட்ட கக்கழ னிக்கொள்ளம் பூதூர்
நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

குவளை கண்மல ருங்கொள்ளம் பூதூர்த்
தவள நீறணி தலைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

கொன்றை பொன்சொரி யுங்கொள்ளம் பூதூர்
நின்ற புன்சடை நிமலனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

ஓடம் வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

ஆறு வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

குரக்கி னம்பயி லுங்கொள்ளம் பூதூர்
அரக்க னைச்செற்ற ஆதியை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பருவ ரால்உக ளுங்கொள்ளம் பூதூர்
இருவர் காண்பரி யான்கழ லுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

நீர கக்கழ னிக்கொள்ளம் பூதூர்த்
தேர மண்செற்ற செல்வனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

கொன்றை சேர்சடை யான்கொள்ளம் பூதூர்
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
இன்றுசொன் மாலைகொண் டேத்த வல்லார்போய்
என்றும் வானவ ரோடிருப் பாரே.

வியாழன், 16 ஏப்ரல், 2015

கொ.வை.அரங்கநாதனின் ஆன்மிகச் சாலை: அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 2

கொ.வை.அரங்கநாதனின் ஆன்மிகச் சாலை: அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 2: யாழ் முறிப் பண் திருஞானசம்பந்தர் திருத்தல யாத்திரை மேற்கொண்டு பதிகங்கள் பாடி வந்த போது, எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்தசி...

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 2


யாழ் முறிப் பண்

திருஞானசம்பந்தர் திருத்தல யாத்திரை மேற்கொண்டு பதிகங்கள் பாடி வந்த போது, எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்தசிவ பக்தரான நீலகண்ட யாழ்ப்பாண நாயனார்   திருஞானசம்பந்தரின் சிவ பணியை அறிந்து அவரும்   அவரது மனைவி மதங்கசூளாமணியும் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும் இனிமையாக யாழ் (ஒரு வகையான இசைக்கருவிஇசைக்கும் திறமை பெற்றிருந்தார்.

அவர்கள் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தருமபுரம் என்ற தளத்திற்கு வந்தபோது, அங்கிருந்த பக்தர்கள் நீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின்  அற்புத வாசிப்பினால்தான் சம்பந்தரின் பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன எனப் பேசிக் கொண்டனர் இதை செவியுற்ற நாயனார் பதைபதைத்துப் போனார். மக்களுக்கு சம்பந்தரின் மேன்மையை விளக்க எண்ணி யாழினில் வாசிக்க இயலாத ஒருப் பதிகத்தை தாங்கள் பாடியருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். சம்பந்தரும் இறைவனை நினைத்து தருமபுரப் பதியில் இப்பதிகத்தைப் பாடியருளினார்.. யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து, தன் உயிரை விடச் சென்றார். அப்போது அவரை தடுத்த திருஞானசம்பந்தர் தொடர்ந்து தனது பதிகங்களுக்கு இசை வாசிக்குமாறு பணித்தருளிணார். பக்தர்களும் உண்மையை உணர்ந்து இருவரையும் வணங்கி மகிழ்ந்தனர். தருமபுரம் சிவனின் அருளால் இப்பதிகம் பாடப் பெற்றதால் அவர் யாழ்முறி நாதர் எனப்போற்றப் பட்டார். எப்பண் வகையிலும் அமையாத இப்பண் யாழ் முறி பண் என்றே அழைக்கப் படுகிறது. இறைவனரூளால் பாடப் பெற்ற அற்புதப் பதிகம் அல்லவா? இப்பதிகத்தின் முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் இங்கு தந்திருக்கிறேன்.படித்துப் பாருங்கள். படிக்கும் போதே தெரியும் இது அருளால் விளைந்தப் பதிகமென்று!.
.
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி 
பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ 
துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்
பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும் 
உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே.