புதன், 31 டிசம்பர், 2014

திருப்பாவை 17அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே

எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்

அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்
பொருள்:

ஆடைகளையும், அன்னத்தையும், குளிர் நீரையும் தானமாக தரும் நந்தகோபனே, எழுந்திராய். கொடியிடை கொண்ட பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே, ஆயர் குல விளக்கே, எம்பெருமாட்டி யசோதையே, நீயும் கூட எழுவாயாக. வானத்தை ஊடுருவி, தனது ஈரடியால் உலகை அளந்த உத்தமனே எழுந்திராய். செம்மையான உனது பாதத்தில் பொற் கழலை அணிந்த செல்வனே, பலராமா, நீயும் உன் தம்பி கண்ணனும் இனியும் உறங்க வேண்டாம், எழுதிருப்பீர்களாகதிருவெம்பாவை - 17
 செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலாதா
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி
செங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடிநலம் திகழ
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்!பொருள்:

நங்கள் சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக் கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர். நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். எளி வந்த கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல். பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக!

செவ்வாய், 30 டிசம்பர், 2014

திருப்பாவை - 16

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
 தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.


 பொருள்:
உலகுக்கெல்லாம் தலைவனாய் நிலைத்திருக்கின்றவனாகிய நந்த கோபனுடைய திருக்கோவிலைக் காப்பவனே! கொடிகள் மற்றும் தோரணங்கள் மேவும் வாயிலைக் காப்பவனே! மணிக் கதவின் தாளைத் திறப்பாய்! கோகுலத்தின் சிறுமியர்களாகிய எங்களுக்கு நோன்பு நிறைவதற்கான பலனை தருவதாக, மாயவன், கருநீல வண்ணன், கண்ணன், நேற்றே வாக்களித்தான்; அந்த எம்பெருமானை துயில் எழுப்ப பாடுவதற்கு, உள்ளும் புறமும் தூயவர்களாக நாங்கள் வந்தோம். உன் வாயாலே, முதன் முதலிலேயே மறுத்து சொல்லிவிடாதே அப்பனே! வாயில் நிலையோடு நேசமாகப் பொருந்தியிருக்கும் கதவை நீ, நீக்கி திறந்து விடு.

 திருவெம்பாவை - 16
முன்இக் கடலைச் சுருக்கியெழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
முன்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நம்தெம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிரா எம்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை ஏலோர் எம்பாவாய்!


பொருள்:
மேகமே! நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து அக் கடலைக் குறைத்து, எங்களை ஆளாக உடைய அம்மை உமா தேவியின் சிற்றிடையைப் போல மின்னிப் பொலிவுற்று, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொற்சிலம்பைப் போல சிலம்பி, அம்மையின் வில்லைப்போன்ற திருப்புருவம் எனும்படி வானில் குலவி , நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப் பிரியாத எம்பெருமான் தன் அன்பர்களுக்கு பொழியும் இனிய அருளைப் போல நீ மழையைப் பொழிவாயாக!திங்கள், 29 டிசம்பர், 2014

திருப்பாவை 15
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில் என்று அழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்ஆனைக் கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

பொருள்:
எழுப்புவோர்: ஏண்டி! இளங்கிளி போல் மிழற்றும் குமரிப் பெண்ணே, இன்னமும் உறங்குகின்றாயே!

தூங்குபவள்: பெண்களே! 'சில்' என்று கத்தி கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்.

எழுப்புவோர்: நீ மிகவும் கெட்டிக்காரி! பசப்பு வார்த்தைக்காரி! உன்னுடைய பேச்சுவன்மையை நாங்கள் முன்பே அறிவோம்! உன் வாயையும் நாங்கள் அறிவோம்!

தூங்குபவள்: கெட்டிக்காரிகள் நீங்களா? நானா? நானே ஆனாலும் சரி.  

எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா! இந்த கெட்டிக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன வைத்திருக்கின்றாய்!

தூங்குபவள்: நம் தோழியர்கள் அனைவரும் வந்து விட்டனரா?

எழுப்புவோர்: வந்து விட்டார்கள்! சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். குவாலயாபீடம் என்ற யானையை கொன்ற கண்ணனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை(வல்லானை) மாயக்கண்ணனின் புகழைப் பாடலாம் சீக்கிரம் வாடி.

திருவெம்பாவை - 15 
ஓரொருகால் எம்பெருமான் என்று என்றே நம்பெருமான்
சீர்ஒருகால் வாய் ஓவாள் சித்தங் களிகூர நீர்
ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான்பணியாள்  
பேரரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆமாறும்
ஆர் ஒருவர் இவ்வண்ணம் அட்கொள்ளும் வித்தகர்தாள்
வார் உருவர் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப் பூம்புனல் பாய்ந்து ஆடு ஏலோ எம்பாவாய்!

பொருள்:  
கச்சை உருவி விடுமாறு கூடிய அழகிய அணிகலன்களைப் பூண்ட மார்புகளை உடைய பெண்களே! இவள் ஒவ்வொரு சமயம் "எம்பெருமானே! எம்பெருமானே! என்று வாய் ஓயாது அரற்றுகின்றாள்; மற்றொரு சமயம் நமது மஹாதேவன் புகழைப் வாய் ஓயாமல் பேசுகின்றாள்; அதனால் ஏற்பட்ட மன மகிழ்ச்சியால் இவள் கண்கள் அருவியைப் போல் கண்ணீரை சுரக்கின்றன. நிலத்தில் விழுந்து எம்பெருமானை வணங்கியவள் அப்படியே தனனை மறந்து அப்படியே கிடக்கின்றாள், சிவபெருமானைத் தவிர மற்ற எந்த தெய்வத்தையும் இவள் வனங்க மாட்டாள்; அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாம் பேரரசனாகிய சிவபெருமானுக்கு பித்தானவர்கள் தன்மை இப்படித்தான் போலும்! இவ்வண்ணம் நம்மை ஆட்கொள்ளும் அந்த ஒருவர் யார்? அவர் ஞானமே வடிவான இறைவனே ஆவான்! அவரது திருவடிகளை வாயாரப்பாடி அழகிய மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்து நீரில் பாய்ந்து மார்கழி நீராடுவோமாக.