சனி, 3 செப்டம்பர், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-11

இந்து மத ஞானிகள்:

ந்து மதத்தில் பல் வேறு ஆன்மீக சக்திகளைக் கொண்ட பல ஞானிகள் பல்வேறு கால காட்டங்களில் அவதரித்துள்ளார்கள்.மக்களை ஆன்மீகப் பாதையில் அழைத்து செல்லவும் மதத்தை காக்கவும் இவர்கள் மேற்கொண்ட முயற்ச்சிகள் அற்புதமானவை. சைவ நாயன்மார்களானாலும், வைஷ்ணவ ஆழ்வார்களானாலும் தமிழகத்தில் இந்து மதம் மறு மலர்ச்சியடைய காரணமாக இருந்தார்கள்.சமய குரவர்கள் என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரும் சைவம் தழைக்க அரும்பாடு பட்டவர்கள்.பொய்கை ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் உள்ளிட்ட பன்னிரண்டு ஆழ்வார்களும் வைணவம் தழைக்க செய்தவர்கள். சாக்த மார்க்கத்தை அபிராமி பட்டர் போன்றவர்களும், கௌமார வழிபாட்டினை அருணகிரிநாதர் போன்ற ஞானிகளும் செழித்து வளர செய்தனர்.

வட இந்தியாவிலும் ராமக்ருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற ஞானிகள் இந்து சமயத்தை செழிக்க செய்தனர். இந்து மதத்தை ஒருங்கிணைத்து தழைக்க செய்த சில ஞானிகளைப் பற்றி இங்கு காண்போம்.

ஆதிசங்கரர்:

கி.பி 9 ஆம் நூற்றாண்டில் கான்சிபுரம் அருகே கலவை என்னும் கிராமத்தில் அவதரித்தர் இந்த மகான். இந்திய முழுவதும் யாத்திரை செய்து பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறல்ல ஒன்றுதான் என்னும் அத்வைத தத்துவத்தை மலர செய்ததுடன், இந்து மதத்தில் பிரிந்து கிடந்த கோட்பாடுகளை ஒன்றிணைத்து இந்து மதத்தை வலிமையாக்கினார். ஆத்ம பேதா,விவேக சூடாமணி,சௌந்தர்ய லஹரி, ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஆன்ம நூல்களை படைத்தார். ப்ரம்ம சூத்திரங்கள், பகவத் கீதை மற்றும் சில உபனிஷத்துக்களுக்கு அவர் அளித்த உரைகள் பெரிதும் போற்றப்படுகின்றன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதவைதத்தை பரப்பிட சங்கர மடங்களை ஸ்தாபித்தார்.

ஷிரடி சாய்பாபா

100 ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிர மா நிலத்தில் அவதரித்தார். எளிமையாக வாழ்ந்து பல அற்புதங்களை அருளியவர். இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் இவருக்கு பக்தர்கள் உண்டு. 19-20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஞானிகளில் இவரும் ஒருவர்.

ரமண மகரிஷி

தமிழ் நாட்டில் திருச் சுழி என்னும் கிராமத்தில் 1879 ஆம் ஆண்டு பிறந்த இவர்,இளம் வயதிலேயே ஞானத்தைத் தேடி திருவண்ணாமலை அடைந்தார். 17 வயதிலேயே அளப்பறிய ஞானம் அடைந்த இவர், ரமண மகரிஷி என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார். பிரபல ஆங்கில நாவலாசிரியர் சோமர்செட்மாம்,அறிஞர் பால் ப்ரண்டன் மகாத்மா காந்தி போன்றவர்கள் எல்லாம் இவரது பக்தர்களாக திகழ்ந்தார்கள்.மனமடக்க இவர் உபேதேசித்த நான் யார் என்னும் விசாரணை உபதேசம் மிகுந்த சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஸ்ரீ ராமானுஜ ஆச்சாரியார்

வஷிஷ்டாத்வைதத்தை அறிமுகம் செய்த ஸ்ரீ ராமானுஜ ஆச்சாரியார் , 16 வயதில் ஞானத்தை தேடத் தொடங்கி ,30 வயதில் சன்னியாசம் ஏற்றார்.ப்ரம்ம சூத்திரத்திற்கு இவர் எழுதிய ஸ்ரீபாஷ்யம் என்னும் உரை போற்றுதற்குரியது.இந்து மதத்தின் ஆன்ம சுடரொளியாக திகழ்ந்தவர் ஸ்ரீ ராமானுஜ ஆச்சாரியார்.

மத்துவாச்சாரியார்.

த்வைத கோட்பாட்டை உருவாக்கிய இவர், 17 வயதில் சன்னியாசம் ஏற்றார். ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு இரண்டுமே உண்மையானவை என்னும் த்வைத தத்துவத்தை அருளியவர்.மிக உயர்ந்த ஞானிகளில் இவரும் ஒருவர்.

ராமக்ருஷ்ண பரமஹ்ம்சர்

1836 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அவதரித்தார். இளம் வயதிலேயே ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு,, யோகப் பயிற்ச்சி செய்து சமாதி நிலை அடைந்தார். இவருக்கு எண்ணற்ற சீடர்கள் உண்டு . அவற்றில் தலையாயவர் சுவாமி விவேகாநந்தர் ஆவார். ராமக்ருஷ்ணரின் மனைவி சாரதா அம்மையாரும் கணவருக்கு துணையாக ஆன்மீகப்பணியில் ஈடுபட்டு இந்து மத மேன்மைக்குவர்பெரிதும் உதவினார்.

சுவாமி விவேகானந்தர்

நரேந்திரன் என்ற பெயர் கொண்ட இவர், இயற்கையிலேயே மிகுந்த தைரியமிக்கவராய் திகழ்ந்தார். இந்திய ஞானிகளின் அடையாளமாய் இன்றுவரை திகழ்கிறார். ராமக்ருஷ்ணரின் தலையாய சீடராய் இருந்து அவரது மறைவிற்குப் பின் அந்த மடத்தின் தலைவரானார். 1893 ஆம் ஆண்டு அமெரிக்க சிக்காகோ நகரில் நடந்த உலக மதங்களின் மாநாட்டில் கலந்து இந்து மதப் பிரதினிதியாய் கலந்து கொண்டு இவர் ஆற்றிய உரை , உலகம் முழுமையும் இந்து மதத்தை நோக்கி திரும்ப பார்க்க செய்தது. இவர் இந்தியா முழுவதும் தனது குரு ராமக்ருஷ்ணரின் பெயரில் மடங்களை நிறுவி கல்வி, மதம் மற்றும் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டார்.இளைஞர்களை மதத்தில் ஆர்வமுற செய்தப் பெருமை இவரையே சாரும்.

ராமலிங்க அடிகளார்

தமிழ் நாட்டில் மருதுர் என்னும் கிராமத்தில் பிறந்த இந்த ஞானி, 9 வயதிலேயே முருகன் மீது தெய்வமணி மாலை என்னும் அற்புதப் பதிகத்தை புனைத்தவர்.தொடக்க காலத்தில் சைவ மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், பின்னர் மதத்தின் பெயரால் செய்யப்படும் மூட நம்பிக்கைகளை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். ஜீவகாருண்யமே சிறந்த ஒழுக்கம் என்னும் புதிய மார்க்கத்தை அறிமுகப்படுத்தினார். உருவ வழிபாட்டினை தவிர்த்து ஜோதி வழி பாட்டினை வலியுறுத்தினார். தனது கொள்கைகளை பரப்புவதற்கு ஏதுவாக வடலுரில் சத்திய ஞான சபையை நிறுவினார். அன்னதானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழ்நாடு எங்கும் நிறுவப்பட்டுள்ள சத்திய ஞான சபைகளில் அன்னதானம் வழங்கி ,அந்தப் பணிகள் இன்றுவரை மேற் கொள்ளப்பட்டு வருவது பெருமைக்குரியது.

எண்ணற்ற இந்து மத ஞானிகளீல் ஒரு சிலரை பற்றி மட்டுமே இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுமைக்கும் விரவி கிடக்கும் ஞானிகளின் வரலாற்றையும் வாக்கினையும் தேடி கற்பது , நிச்ச்யமாய் நம்மை ஆன்மீகத்தில் ஒரு உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும் .