புதன், 27 மே, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 14



அரசாங்கத்தால் மற்றும் எதிரிகளால் விளையும் துன்பம் நீக்கும் பதிகம்

சமணர்களின் பொய்மொழிகளை ஏற்று மன்னன், நாவுக்கரசரை ஒரு கருங்கல்லினோடு கட்டி கடலில் எறிய ஆணையிட்டான் .சமணர்களும் உடனே அதை நிறைவேற்ற, நாவுக்கரசர் கடலில் வீசப்பட்டார். அப்பொழுதும் மனம் தளராத மாறாத நாவுக்கரசர் திரு நீலக்குடி உறையும் சிவனை நோக்கி வேண்ட, கல்லோடு அவரும் கடல் மீது மிதந்து கரை அடைந்தனர். இவ்வதியத்தை கண்ட சமணர்கள் அதிர்ந்து போனார்கள்.திரு நீலைக்குடி இறைவன் தன்னை கரை சேர்த்ததை இப்பதிகத்தில் பதிவு செய்கிறார் அப்பர். இப்பதிகப் பாராயணம் அரசாங்கத்தால் மற்றும் எதிரிகளால் விளையும் துன்பங்களிலிருந்து காக்கும் வல்லமை உடையது..

வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக் குடியர னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே.

செய்ய மேனியன் தேனொடு பால்தயிர்
நெய்ய தாடிய நீலக் குடியரன்
மைய லாய்மற வாமனத் தார்க்கெலாம்
கையி லாமல கக்கனி யொக்குமே

ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு
கூற்றன் மேனியிற் கோலம தாகிய
நீற்றன் நீலக் குடியுடை யானடி
போற்றி னாரிடர் போக்கும் புநிதனே.

நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர்
நீலன் நீலக் குடியுறை நின்மலன்
கால னாருயிர் போக்கிய காலனே.

நேச நீலக் குடியர னேயெனா
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சரம் எய்ய எரிந்துபோய்
நாச மானார் திரிபுர நாதரே.

கொன்றை சூடியைக் குன்ற மகளொடும்
நின்ற நீலக் குடியர னேயெனீர்
என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர்
பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே

கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந் தேனன்றே.

அழகி யோமிளை யோமெனு மாசையால்
ஒழுகி ஆவி யுடல்விடு முன்னமே
நிழல தார்பொழில் நீலக் குடியரன்
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.

கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள் 
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன்
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே.

தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
அரக்க னாருட லாங்கொர் விரலினால்
நெரித்து நீலக் குடியரன் பின்னையும்
இரக்க மாயருள் செய்தன னென்பரே.

வெள்ளி, 22 மே, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 13



விஷம் தீர்க்கும் பதிகம்


பல புண்ணிய தலங்களை தரிசித்து திருப்பழனம் அடுத்துள்ள திங்களூர் வந்தார் திருநாவுக்கரசர். அங்கு  சாலை குளம் கிணறு தண்ணீர் பந்தல் பாடசாலை என அனைத்திற்கும் அவருடைய பெயரை வைத்து  அவரையே சதா நினைத்து பக்தி செய்து கொண்டிருந்தார் அப்பூதியார்   அப்பூதியாரிடம் நீர் அமைத்த அறச்சாலை முதலியவற்றிற்கு உங்கள் பேர் வைக்காமல் வேறொரு பேர் வைத்தது ஏனோ? என்று வினவினார்.திருநாவுக்கரசர்.அது கேட்ட அப்பூதியடிகள் சிவபெருமானின்   திருவருள் முழுதும் பெற்ற  திருநாவுக்கரசரின் பேர்  அன்றி வேறொரு பேரோ?  அவரை அறியாதார் யாருளர்?நீர் யார்? என்று சிறிது கோபத்துடன் கேட்டார் .வாகீசர் இறைவரால் சூலைவலி தந்து சமண சமயத்தில் இருந்து வந்த அடியேன்தான் திருநாவுக்கரசன்.  என்று கூறினார்.அதுகேட்ட அப்பூதியார் அளவில்லா ஆனந்தம் அடைந்து குடும்பத்துடன்  வணங்கி  அவரை தன மனையில் உணவு செய்யுமாறு வேண்டினார்.நாவுக்கரசர் சம்மதிக்க  .விருந்துக்கு வாழை இலை பறித்து வர தனது மூத்த மகன் மூத்த திருநாவுக்கரசை பணித்தார். சிறுவனும் மகிழ்ந்து தோட்டத்தில் வாழை இலை பறிக்கும்போது கொடியநாகம் தீண்டியது. தாயிடம் இலையைக்கொடுத்து விடம் தீண்டியதை சொல்லாமல் இறந்து போனான். அதுகண்ட அப்பூதியடிகளும் அவர்தம் மனைவியாரும் திருநாவுக்கரசர்.அமுதுசெய்ய  தடையாகுமே என்று மகனின் உடலை மறைத்து மலர்ந்த முகத்துடன் வாகீசரை அமுது செய்ய அழைத்தனர்.திருநாவுக்கரசர் தமது உள்ளத்தில் திருவருளால் தடுமாற்றம் ஏற்பட மூத்த திருநாவுக்கரசு எங்கே?என்று வினவினார்.அப்பூதியார் அவன் இப்போது இங்கு வரமாட்டான் என்றார் .நாயனார் உள்ளதை சொல்லுங்கள் என வற்புறுத்த அப்பூதியார் நிகழ்ந்ததை உரைத்தார்.நன்று செய்தீர் இங்ஙனம் யார் செய்வார் என்று கருணைகூர்ந்து மகனது சவத்தை திருக்கோயிலின் முன் கொணரச் செய்து இத்திருப்பதிகத்தைப் பாட  திருவருளால் மைந்தன் உயிர்பெற்றான்.இறை அருளினால் விளைந்த இவ்வற்புதப் பதிகம் விஷம் தீர்க்கும் தன்மையுடையதாம்.



ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.


இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவர் எய்தின தாமே.


மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.


நாலுகொ லாமவர் தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை பாடின தாமே.


அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்
அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை
அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே.


ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.


ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன
ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்
ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள்
ஏழுகொ லாமிசை யாக்கின தாமே.


எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.


ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடந் தானே.


பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.


வியாழன், 21 மே, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 12



அச்சம் தீர்க்கும் பதிகம்

திருநாவுக்கரசர் சமண மதத்தை நீங்கி மீண்டும் சைவ மதத்தில் இணைந்ததைப் பொறுக்காத சமணர்கள்  இவர் தனது சகோதரியின் அறிவுறையால் சமண மதத்தை விட்டு சைவத்தில் இணைந்து விட்டார். இவரை தண்டித்து ஆக வேண்டும் என அரசனிடம் முறையிடுகின்றனர். என்ன தண்டனை அளிக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என அரசன் தெரிவிக்க மரண தண்டனைதான் இதற்கு சரியான தீர்வு என உரைத்தனர்.அரசனும் காவலர்களை அனுப்பி நாவுக்கரசரை அழைத்து வர பணித்தான்.அழைக்க சென்ற காவலர்களிடம் நான் யாருக்கும் அடிமை அல்ல.சிவ்னைத் தொழுபவன்..அதனால் வர இயலாது எனத்தெரிவிக்கும் நாமார்க்கும் குடியல்லோம் எனும் மறுமாற்றத் திருத்தாண்டகப் பதிகத்தை அருளினார். இறையருளால் சைவத்தின்பால் ஈர்க்கப்பட்டவரின் மொழிகள் அல்லவா? இப்பதிகத்தை பாராயணம் செய்பவர்கள் எவ்வித அச்சத்திற்கும் ஆளாகமாட்டார்கள் என்பது அனுபவ வாயிலாக அறிந்த உண்மையாகும். 

நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
        நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்; 
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
             இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை; 
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன்,
                 நல் சங்க வெண்குழை ஓர் காதின் 
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க்
      கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.

அகலிடமே இடம் ஆக ஊர்கள் தோறும் அட்டு
        உண்பார், இட்டு உண்பார், விலக்கார், ஐயம்; 
புகல் இடம் ஆம் அம்பலங்கள்; பூமிதேவி உடன்
      கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே; 
இகல் உடைய விடை உடையான் ஏன்று கொண்டான்;
  இனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்; 
துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும்
    சொல் கேட்கக் கடவோமோ? துரிசு அற்றோமே

வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்;
              “மாதேவா! மாதேவா!” என்று வாழ்த்தி, 
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்; நீறு
              அணியும் கோலமே நிகழப் பெற்றோம்; 
கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக் கல்
           மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்; 
பார் ஆண்டு பகடு ஏறித் திரிவார் சொல்லும் பணி
           கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே.


உறவு ஆவார், உருத்திர பல் கணத்தினோர்கள்;
  உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே; 
செறு வாரும் செற மாட்டார்; தீமை தானும் நன்மை
            ஆய்ச் சிறப்பதே; பிறப்பில் செல்லோம்; 
நறவு ஆர் பொன் இதழி நறுந் தாரோன் சீர் ஆர்
          நமச்சிவாயம் சொல்ல வல்லோம், நாவால்; 
சுறவு ஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட சுடர்
         நயனச் சோதியையே தொடர்வு உற்றோமே.

என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்;
    இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை; 
சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்;
       சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்; 
ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே;
  உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்; 
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னிப்
    புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே.

மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன
              மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர்- 
"தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
        செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும் 
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
       நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன 
காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்;
                 கடுமையொடு களவு அற்றோமே.

நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும்,
      நெருப்பினொடு, காற்று ஆகி, நெடு வான் ஆகி, 
அற்பமொடு பெருமையும் ஆய், அருமை ஆகி, அன்பு
   உடையார்க்கு எளிமையது ஆய், அளக்கல் ஆகாத் 
தற்பரம் ஆய், சதாசிவம் ஆய், தானும் யானும்
             ஆகின்ற தன்மையனை நன்மையோடும் 
பொற்பு உடைய பேசக் கடவோம்; பேயர் பேசுவன
                   பேசுதுமோ? பிழை அற்றோமே.

ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன் தன்னை,
       இமையவர் தம் பெருமானை, எரி ஆய் மிக்க 
தேசனை, செம்மேனி வெண் நீற்றானை, சிலம்பு
         அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற 
நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்; நின்று
              உண்பார் எம்மை நினையச் சொன்ன 
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே; வந்தீர் ஆர்?
                மன்னவன் ஆவான் தான் ஆரே?.

சடை உடையான்; சங்கக் குழை ஓர் காதன்;
               சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி, 
விடை உடையான்; வேங்கை அதள் மேல் ஆடை,
  வெள்ளி போல் புள்ளி உழை- மான்தோல் சார்ந்த 
உடை, உடையான்; நம்மை உடையான் கண்டீர்;
                உம்மோடு மற்றும் உளராய் நின்ற 
படை உடையான் பணி கேட்கும் பணியோம்
    அல்லோம்; பாசம் அற வீசும் படியோம், நாமே.

நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்; நாண்
             அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்; 
“ஆவா!” என்று எமை ஆள்வான், அமரர் நாதன்,
  அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட 
தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து
        இருந்தான்; தென் திசைக்கோன் தானே வந்து, 
கோ ஆடி, “குற்றேவல் செய்கு” என்றாலும், குணம்
       ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே.
   

செவ்வாய், 12 மே, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 11



குடல் மற்றும் வயிற்று நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் பதிகம்

திருநாவுக்கரசர்  தருமசேனர் என்ற பெயருடன் சமண மதத்தை தழுவியிருந்தார். இது குறித்து கவலையுற்றிருந்த அவரது தமக்கைய்ம் சிவனருளாளருமான திலகவதி அம்மையார் இறைவனிடம் முறையிட முன் வினையின் காரணமாக இது நிகழுந்துள்ளதெனவும் நாவுக்கரசருக்கு சூலை நோய் அளித்து அவரைஆட்கொள்ள இருப்பதாகவும்   இறைவன் கனவில் தோன்றி தெரிவித்தார்.  அதைப் போலவே நாவுக்கரசரை சூலை நோய் பிடிக்க தாங்கொண்ணா வயிற்று வலியால் அவதியுற்றார், திலகவதியார் சிவனை சிந்தித்தலே இதற்கு ஒரே தீர்வு என சகோதரனிடம் தெரிவிக்க அவரும் மனம் மாறி சைவ சமயத்தை தழுவி வீராட்டானம் திருத்தலத்திற்கு சென்று இப்பதிகத்தை பாடியருளினார்.அவ்வாலயத்தின் திருநீற்றை திலகவதியார் நாவுக்கரசரின் வயிற்றில் தடவ சூலை அவரை விட்டு அகன்றது. இதுவே நாவுக்கரசர் பாடிய முதல் திருப்பதிகம் ஆகும். இப்பதிகப் பாராயணம் வயிறு தொடர்பான நோய்களை களைய வல்லது என்பது பக்தர்கள் அனுபவத்தால் உணர்ந்தது.

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்
வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

: : :
:
 : :
:
:.

வியாழன், 7 மே, 2015

அருளினால் விளந்த அற்புதப் பதிகங்கள் 10



பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்க்கும் பதிகம்

திரு ஞானசம்பந்தர் திருவாவடுதுரை தலத்தில் இருந்தபோது அவருடைய தந்தையார் சிவபாத இருதயர் அவரை சந்தித்து சிவனடியார் வேள்வி ஆற்ற பொருள் வேண்டி நின்றார். சம்பந்தர் ஆவடுதுறை இறைவனை நோக்கி இப்பதிகம் பாட ஆயிரம் பொற்காசுகள் கொண்டபொற்கிழி ஆலய வாயிலில் தோன்றியது. இந்நிதி எடுக்க எடுக்க குறையா உலவா கிழி என்றும், ஆனால் இதனை வேறு காரியங்களுக்கு பயன்படுத்தினால் உடன் மறைந்து விடும் எனவும் அசரீரியும் ஒலித்தது அதனை தனது தந்தையாரிடம் அளித்த சமப்ந்தர் ,வேள்வி ஆற்ற அளிக்கப்பட்ட இந்நிதி எடுக்க எடுக்க குறையா உலவா கிழி என்றும், ஆனால் இதனை வேறு காரியங்களுக்கு பயன்படுத்தினால் உடன் மறைந்து விடும் எனவும் தெரிவித்தார்.அருளினால் விளைந்த இவ்வற்புதப் பதிகத்தை தொடர்ந்து ஓதி வருபவர்களின் பொருளாதார சிக்கல்கள் உடன் தீரும் என்பது அனுபவத்தால் பலர் கண்ட உண்மையாகும்.


இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

வெப்பொடு விரவியோர் வினைவரினும் 
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே 

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார் 
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

திங்கள், 4 மே, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள்-9



குளிர் காய்ச்சல்போன்ற நோய்கள், பழ வினைகள், பில்லி சூனிய,செய்வினை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும் பதிகம்

திருஞானசம்பந்தர் திருச்செங்கோடு எனத் தற்காலத்தில் அழைக்கப்படும் கொடிமாட செங்குன்றூர் சென்ற போது அங்கிருந்த மக்கள் குளிர் காய்ச்சலால் அவதிப்படுவதை கண்டு அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டி இப்பதிகத்தை அருளினார். திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டு பாடியிருக்கும் இப்பதிகப் பாராயணம் இக்கால நோய்களிலிருந்தும் விடுதலை அளிப்பது திண்ணம்.முன் பிறவியில் செய்த பாவங்களும் நம்மை தீண்டாதிருக்க செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம் என வேண்டுகிறார் சம்பந்தர். செய்வினை என முற்பிறவி வினையினை சம்பந்தர் குறிப்பிட்டிருந்தாலும், பில்லி சூனியம் செய்வினை என மக்களால் நம்பப்படும் மந்திர ஏவல்களிலிருந்தும் இப்பதிகப் பாராயணம் காக்கும் என பக்தர்களால் பெரிதும் நம்பப்படுகிறது.

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமையாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.

வெள்ளி, 1 மே, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள்...8


இடர் (துன்பம்) மற்றும் பாவம் தீர்க்கும் பதிகம்

திருஞானசம்பந்தர் நெடுங்களம் என்னும் பதியில் உறையும் எம்பெருமானிடம் பக்தர்களின் துன்பங்களை போக்க கோரி பாடியப் பதிகம். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பக்தர்களின் துன்பத்தைப் போக்க வேண்டுகிறார். அம்மையிடம் ஞானப்பால் அருந்திய செல்வர்  அளித்த அற்புதப் பதிகம்அல்லவா? இப்பதிகத்தை தொடர்ந்து பாடுபவர்களுக்கு துன்பங்கள் மட்டுமல்ல பாவமும் விலகும் என்பது ஆன்றோர்..வாக்கு. பலரும் ஓதி பயன் பெற்று வரும் அற்புதப் பதிகங்களில் இதுவும் ஒன்று.


மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ்
நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்
நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே
.
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.

:
:
:
 :