செவ்வாய், 30 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 26நோய்களிலிருந்து நிவாரணம் பெறவும் பிறவித் தவிர்க்கவும் உதவும் பாசுரம்

நம்மாழ்வார் அருளிய இத்திருவாய்மொழிப் பாராயணம் பிணிகளின்றி வாழவும் பிறவிப் பெருங்கடல் நீந்தவும் உதவும் என்பது ஆன்றோர் வாக்குபிறவித்துயர் அற ஞானத்துள் நின்று 
துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்வார் 
அறவனை ஆழிப்படை அந்தணனை 
மறவியை இன்றி மனத்து வைப்பாரே   
 
வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினைத் 
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன் 
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து 
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே   

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் 
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை 
தூய அமுதைப் பருகிப் பருகி என் 
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே     
 
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை 
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை 
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் 
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ?   

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை 
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள் 
விடவே செய்து விழிக்கும் பிரானையே?     
 
பிரா அன் பெரு நிலம் கீண்டவன் பின்னும் 
விரா அய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் 
மராமரம் எய்த மாயவன் என்னுள் 
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?   

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் 
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து 
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல் 
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?   
 
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம் 
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி 
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை 
முன்னை அமரர் முழுமுதல் தானே       

அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை 
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை 
அமர அழும்பத் துழாவி என் ஆவி 
அமரத் தழுவிற்று இனி அகலும்மோ?     
 
அகலில் அகலும் அணுகில் அணுகும் 
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான் 
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் 
பகலும் இரவும் படிந்து குடைந்தே   

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை 
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன் 
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து 
உடைந்து நோய்களை ஓடுவிக்குமே     

ஞாயிறு, 28 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 25
வாழ்வில் வரும் துயரம் போக்கும் பாசுரம்

நாராயணின் பக்தர்களுக்கு வரும் துயர் நீக்கும் உபாயாமாக பெரியாழ்வார் அருளிய அற்புதப் பாசுரம் இது. இதனைத் தினம் ஓதி வரும் துயர்களுக்கு விடை கொடுக்கலாம் என்பது திண்ணம்

ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் 
      பேச்சும் அலந்தலையாய்ச் 
செய்ய நூலின் சிற்றாடை செப்பன் 
      உடுக்கவும் வல்லள் அல்லள் 
கையினில் சிறுதூதை யோடு இவள் 
      முற்றில் பிரிந்தும் இலள் 
பை அரவணைப் பள்ளியானொடு 
      கைவைத்து இவள்வருமே             

வாயிற் பல்லும் எழுந்தில மயி
      ரும் முடி கூடிற்றில 
சாய்வு இலாத குறுந்தலைச் சில 
      பிள்ளைகளோடு இணங்கி 
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் 
      தன் அன்ன செம்மை சொல்லி 
மாயன் மா மணிவண்ணன்மேல் இவள் 
      மால் உறுகின்றாளே             
 
பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் 
      முற்றத்து இழைக்கலுறில் 
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் 
      அல்லது இழைக்கலுறாள் 
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில 
      கோவிந்தனோடு இவளைச் 
சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும் 
      தட்டுளுப்பு ஆகின்றதே             
 
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் 
      பெண்மகளை எள்கி 
தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த 
      சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் 
ஆழியான் என்னும் ஆழ மோழையில் 
      பாய்ச்சி அகப்படுத்தி 
மூழை உப்பு அறியாது என்னும் 
      மூதுரையும் இலளே             
 
நாடும் ஊரும் அறியவே போய் 
      நல்ல துழாய் அலங்கல் 
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் 
      சோதித்து உழிதர்கின்றாள் 
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் 
      கேசவனோடு இவளைப் 
பாடிகாவல் இடுமின் என்று என்று 
      பார் தடுமாறினதே             

பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் 
      பாடகமும் சிலம்பும் 
இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு 
      என்னோடு இருக்கலுறாள் 
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள் 
      பூவைப் பூவண்ணா என்னும் 
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் 
      மால் உறுகின்றாளே  
           
பேசவும் தரியாத பெண்மையின் 
      பேதையேன் பேதை இவள் 
கூசமின்றி நின்றார்கள் தம் எதிர் 
      கோல் கழிந்தான் மூழையாய் 
கேசவா என்றும் கேடிலீ என்றும் 
      கிஞ்சுக வாய் மொழியாள் 
வாச வார்குழல் மங்கைமீர் இவள் 
      மால் உறுகின்றாளே 

காறை பூணும் கண்ணாடி காணும் தன் 
      கையில் வளை குலுக்கும் 
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் 
      கொவ்வைச் செவ்வாய் திருத்தும் 
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் 
      தேவன் திறம் பிதற்றும் 
மாறில் மா மணிவண்ணன்மேல் இவள் 
      மால் உறுகின்றாளே             
 

கைத்தலத்து உள்ள மாடு அழியக் 
      கண்ணாலங்கள் செய்து இவளை- 
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்? 
      நம்மை வடுப்படுத்தும்- 
செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன் 
      செய்வன செய்துகொள்ள 
மைத் தடமுகில் வண்ணன் பக்கல் 
      வளர விடுமின்களே             
 

பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து 
      பேணி நம் இல்லத்துள்ளே 
இருத்துவான் எண்ணி நாம் இருக்க 
      இவளும் ஒன்று எண்ணுகின்றாள் 
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் 
      வார்த்தை படுவதன்முன் 
ஒருப்படுத்து இடுமின் இவளை 
      உலகளந்தான் இடைக்கே             
 

ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில் 
      நாராயணனுக்கு இவள் 
மாலதாகி மகிழ்ந்தனள் என்று 
      தாய் உரை செய்ததனை 
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன் 
      விட்டுசித்தன் சொன்ன 
மாலை பத்தும் வல்லவர்கட்கு 
      இல்லை வரு துயரே             

வெள்ளி, 26 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 24உலகம் மெச்ச வாழ வைக்கும் பாசுரம்

நாரயணனின் அருளை முழுமையாகப் பெற்றவரும் நம்மாழ்வார் என பக்தர்களால் போற்றப்பட்டவருமான சடகோபரின் இந்த திருவேங்கடப் பாசுரத்தை பக்தியுடன் ஓதுபவர்கள் உலகம் மெச்ச வாழும் வாழ்க்கைப் பேற்றினை அடைவார்கள் என்பது திண்ணம். 


ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே

எந்தைதந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து
அந்தமில் புகழ்க் காரெழில் அண்ணலே

அண்ணல் மாயன் அணிகொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
தெண்ணிறைச் சுனை நீர் திரு வேங்கடத்து
என்ணில்தொல் புகழ் வானவ ரிசனே

ஈசன் வானவர்க் கென்பனென்றால் அது
தேசமோ திரு வேங்கடத்தானுக்கு
நீசனே நினைவொன்றுமிலேன் எங்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே

சோதியாகி யெல்லா வுலகும் தொழும்
ஆதி மூர்த்தி யென்றா லளவாகுமோ
வேதியர் முழு வேதத்த முதத்தை
தீதில்சீர்த் திரு வேங்கடத்தானையே

வேங்கடங்கள் மெய்ம் மேல் வினைமுற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத் துறைவாருக்கு நமவென்ன
லாங்கடமை அது சுமந்தார்கட்கே

சுமந்து  மாமலர் நீர்சுடர் தீபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவ்ர் கோனொடும்
நமன் றெழும் திரு வேங்கடம் நங்கட்கு
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே

குன்ற மேந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே

ஓயு மூப்புப் பிறப்பிறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்
தாயன் நான் மலராமடித் தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே

வைத்த நாள் வரை எல்லை குறுகிச்சென்று
எய்த்திளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்தன் பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய்ப் பூந்தடம் தாழ்வாரே

தால் பரப்பி மண் வதாவிய ஈசனை
நீள் பொழில்குரு கூர்ச் சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்திப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே

புதன், 24 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 23


  கல்வி மேம்பட உதவும் பாசுரம்

நம்மாழ்வார் என பக்தர்களால் அழைக்கப்படும் சடகோபரால் அருளப்பட்ட இவ்வற்புதப் பாசுர பாராயணம் கல்வியில் சிறந்து விளங்க அருள் செய்யும் என்பது அடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கைஆகும். நம்மாழ்வார்  இறையருளால் பாடிய பாசுரம் அன்றோ?

பெருமாள் நீள் படையாழி சங்கத்தோடு
திருமால் நீள் கழல் ஏழுலகம் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கமென் கண்ணுளதாமே

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
என்னிலும் வருமென்னினி வேண்டுவம்
மண்ணும் நீரு மெரியும் நல்வாயுவும்
விண்ணுமாய் விரியு மெம்பிரானையே

எம்பிரானையெந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை தன் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனியென்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும்போதும் விடாது தொடர்க் கண்டாய்

கண்டாயே நெஞ்சமே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகமேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே

நீயும் நானுமிந் நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்க்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமா யிவ்வுலகினில்
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே

எந்தையென்று மெம்பெருமானென்று
சிந்தையுள் வைப்பன்  சொல்லுவன் பாவியேன்
எந்தையெம்பெருமானென்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே

செல்வ நாரணனென்ற சொல்கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும்நன் பகலு மிடைவீடின்றி
நல்கியென்னை விடான்நம்பி நம்பியே

நம்பியைத்தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனேத் திகழும் திருமூர்த்தியை
உம்பர்வானவ ராதியஞ்சோதியை
எம்பிரானை யென் சொல்லி மறப்பனோ

மறப்பும் ஞானமும் நானொன்று ணர்ந்திலேன்
மறக்குமென்று செந்தாமரைக் கண்ணொடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை
மறப்பனோவினி யானென்மணியையே

மணியைவானவர் கண்ணனைத்தன்னதோர்
அணியை தென்குரு கூர்ச்சடகோபன் சொல்
பணிசெயாயிரத் துல்ளி வைபத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே

செவ்வாய், 23 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 22


மனத் துயர் நீக்கும் பாசுரம்

சைவர்களுக்கு தேவாரம் திருவாசகம் போன்றதே வைணவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம். இறையருள் பெற்ற ஆழ்வார்களால் பாடப் பெர்ற இப்பாசுரங்கள் அளப்பறிய சக்தியுடையவை. பெரியதிருமொழி  பத்தாம் பத்தில் எட்டாவதாக அமையப்பெற்ற இப்பாசுரத்தை தொடர்ந்து ஓதி வருபவர்கள் மன அமைதியையும் வாழ்வில் நிம்மதியையும் பெறுவார்கள் என்பது திண்ணம்..

காதிலே கடுப்பிட்டு கலிங்கம் உடுத்து
தாதுநல்ல  தன்ணந் துழாய் கொடணிந்து
போது மறுத்துப் புறமே  வந்து நின்றீர்
ஏதுக்கு இதுவென் இதுவென் இதுவென்னோ

துவராடை உடுத்து ஒருசெண்டு சிலுப்பி
கவராக முடித்து கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர்
இவரார் இதுவென் இதுவென் இதுவென்னோ

கருகக் கொடி ஒன்றுடையீர் தனிப்பாகீர்
உருளச் சகடம் அது உறக்கில் நிமிர்ந்தீர்
மருளைக் கொடுபாடி வந்துஇல்லம் புகுந்தீர்
இருளத்து இதுவென் இதுவென் இதுவென்னோ

நாமம் பலவும் உடை நாரணன் நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமெனனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இதுவென் இதுவென் இதுவென்னோ

சுற்றும் குழல்தாழச் சரிகை அணைந்து
மற்றும் பல மாமணி பொன்கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இதுவென் இதுவென் இதுவென்னோ

ஆனாயரும் ஆனிரையும் அங்கொழியக்
கூனாயதோர் கொற்ற வில்லொன்று கையேந்திப்
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்
ஏனோர்கள் முன்னென்  இதுவென் இதுவென்னோ

மல்லே பொருத திரள்தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை
சொல்லாது ஒழியிர் சொன்னபோதினால் வாரீர்
எல்லே இதுவென் இதுவென் இதுவென்னோ

புக்காடரவம் பிடித்தாட்டும் புனிதீர்
இக்காலங்கள் உமக்கு யாம் ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர்
எக்கே இதுவென் இதுவென் இதுவென்னோ

ஆடி அசைந்து ஆய்மடவாரோடு நீ போய்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திருமாமகள் மண்மகள் நிற்ப
ஏடி இதுவென் இதுவென் இதுவென்னோ

அல்லிக் கமலக் கன்ணனை அங்கு ஓராய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தை
கல்லின் மலிதோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கம் இலரே


ஞாயிறு, 21 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 21வாழ்வை மேன்மையுரச் செய்யும் பதிகம்

இதுவரை மூவர் தேவாரத்திலிருந்து சில அற்புதப் பதிகங்கள் கண்டோம்.தேவாரம் முழுமையுமே இறையருளால்  அருளப்பட்டதே என்றாலும் பக்தர்களுக்கு எளிமையாக்கும் விதத்தில் சில பதிகங்களை இங்கு பார்த்தோம்.இதன் மூலம் தேவாரம் முழுமையும் கற்கும் ஆர்வம் பெருகும் என நம்புகிறேன். இதனைப் போலவே திருவாசகப் பாடல்களும் இறைவனை அடையச் செய்யும் வல்லமை உடையவையே. நெஞ்சம் உருக தினமும் திருவாசகம் ஓதினால் வாழ்வு வளமாகும் நிச்சயம்.முழு திருவாசகமும் ஓதுதல் நன்றாயினும் , இயலாதவர்கள் சிவ புராணத்தையாவது நாளும் ஒரு முறையாவது ஓதி இறையருளைப் பெற வேண்டும்.

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான் 
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே! நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே! தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து


வெள்ளி, 19 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 20உணவு பொன் பொருள் தடையின்றி கிடைக்க உதவும் பதிகம்

சுந்தரர், பரவைநாச்சியார் பங்குனி உத்திரத் திருநாளில் செய்யும் தானதருமங்களுக்குப் பொருள் பெற எண்ணித் திருவாரூரிலிருந்து திருப்புகலூர் சென்று தொழுது கோயிலின் முன்புறம் செங்கற்களைத் தலைக்கு உயரமாக வைத்து இறையருளால் துயின்றார். துயிலெழுந்தபோது செங்கற்கள் பொன்னாகியிருப்பதைக் கண்டு இறையருளை எண்ணி வியந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.இப்பதிகப் பாராயணம் உணவு பொன் பொருள் தடையின்றி கிடைக்க உதவும்

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
    சார்வி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதரும் சோறுங் கூறையும்
    ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

மிடுக்கி லாதானை வீம னேவிறல்
    விசய னேவில்லுக் கிவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
    கூறி னுங்கொடுப் பார்இலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேல்அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.        

காணி யேற்பெரி துடைய னேகற்று
    நல்லனே சுற்றம் நற்கிளை
பேணி யேவிருந் தோம்பு மேயென்று
    பேசி னுங்கொடுப் பார்இலை
பூணி பூண்டுழப் புட்சி லம்புந்தண்
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆணி யாய்அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.        

நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல்
    நடுங்கி நிற்கும்இக் கிழவனை
வரைகள் போல்திரள் தோளனேயென்று
    வாழ்த்தி னுங்கொடுப் பார்இலை
புரைவெள் ளேறுடைப் புண்ணி யன்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அரையனாய்அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.       

வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப்
    பாவி யைவழக் கில்லியைப்
பஞ்ச துட்டனைச் சாது வேயென்று
    பாடி னுங்கொடுப் பார்இலை
பொன்செய் செஞ்சடைப் புண்ணி யன்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில் நோயறுத் துஞ்சு போவதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

நலம்இ லாதானை நல்ல னேயென்று
    நரைத்த மாந்தரை இளையனே
குலம்இ லாதானைக் குலவ னேயென்று
    கூறி னுங்கொடுப் பார்இலை
புலமெ லாம்வெறி கமழும் பூம்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அலம ராதமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.        

நோயனைத்தடந் தோள னேயென்று
    நொய்ய மாந்தரை விழுமிய
தாயன் றோபுல வோர்க்கெ லாமென்று
    சாற்றி னுங்கொடுப் பார்இலை
போயு ழன்றுகண் குழியாதேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆயம் இன்றிப்போய் அண்டம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.        

எள்வி ழுந்திடம் பார்க்கும் ஆகிலும்
    ஈக்கும் ஈகிலன் ஆகிலும்
வள்ள லேயெங்கள் மைந்த னேயென்று
    வாழ்த்தி னுங்கொடுப் பார்இலை
புள்ளெ லாஞ்சென்று சேரும்பூம்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
அள்ளற் பட்டழுந் தாதுபோவதற்
    கியாதும் ஐயுற வில்லையே.        

கற்றி லாதானைக் கற்று நல்லனே
    காம தேவனை ஒக்குமே
முற்றி லாதானை முற்ற னேயென்று
    மொழியி னுங்கொடுப் பார்இலை
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
அத்தனாய்அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.  

தைய லாருக்கோர் காமனேயென்றும்
    சால நல்வழக் குடையனே
கையு லாவிய வேல னேயென்று
    கழறி னுங்கொடுப் பார்இலை
பொய்கை ஆவியின் மேதி பாய்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
ஐயனாய் அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.        

செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென்
    புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவலூரன்
    வனப்பகை யப்பன் சடையன்றன்
சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய
    பாடல் பத்திவை வல்லவர்
அறவனார்அடி சென்று சேர்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.         

புதன், 17 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள்-19


(குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கவும் பிணி போக்கவும் உதவும் பதிகம்)

சுந்தர மூர்த்தி நாயனார் சிவத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு ஒவ்வொரு தலமாக சென்று கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட இந்த தலத்தின் வழியாகவும் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த ஊரின் தெருவொன்றில், ஒரு வீட்டில் சிறுவனுக்கு முப்புரிநூல் (உபநயனம்) அணிவிக்கும் மங்கல விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்னொரு வீட்டில் இறப்பு நிகழ்ந்ததற்கான அழுகை ஓலம் கேட்டுக் கொண்டிருந்தது.சுந்தரர் அத்தெருவில் இருந்தோரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டறிந்தார். அதற்கு
அங்கிருந்தவர்கள், ‘பூணூல் அணிவிக்கும் எதிர்வீட்டுச் சிறுவனின் வயதினை ஒத்த குழந்தையை, முதலை ஒன்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கி விட்டது. அக்குழந்தை இருந்திருந்தால் அதற்கும் இதுபோல பூணூல் அணிவிக்கும் விழா நடைபெற்றிருக்குமே என்று எண்ணி பிள்ளையை இழந்த சோகத்தை பெற்றோர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தனர்.அந்தசமயம் சுந்தரர் அங்கு வருகை தந்ததை அறிந்து, இறந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் கண்ணீரைத் துடைத்து சோகத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், சுந்தரரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரை வரவேற்றனர். உண்மையை உள்ளத்தால் உணர்ந்து கொண்ட சுந்தரர், அந்தத் தாய் – தந்தையரின் துன்பத்தைத் துடைக்கத் திருவுள்ளம் கொண்டார். குழந்தையை பறிகொடுத்தவர்களிடம், ‘இறைவன் கருணை மிக்கவன். அவன் பேரருளால் எல்லா அற்புதங்களும் நடக்கும். கவலையை விடுங்கள்’ என்று கனிவுடன் கூறி, முன்பு சிறுவனை, முதலை விழுங்கிய குளக்கரைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு குளக்கரை வறண்டு போய் இருந்தது. தண்ணீரே இல்லாத குளத்தில் முதலையை எங்கு என்று தேடுவது.. எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம் பெருமானையே உற்றாய் என்றுன்னையே
உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால் புற்றா டரவப் புக்கொளி யூரவி நாசியே பற்றாக வாழ்வேன் பசுபதி யெம் பர மேட்டியே’* என்ற குறிஞ்சிப் பண்ணிலமைந்த தேவாரப் பதிகத்தைப் பாடத் தொடங்கிய சுந்தரர்,‘கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே’ என்று சிவனிடம் உருகி
வேண்டினார். பத்து பதிகங்களைப் பக்திப் பரவசத்துடன் அவர் பாடி டித்ததும்,
அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சிவனருளால் வறண்டிருந்த குளத்தில் நீர் நிரம்பியது. நீருக்குள்ளிருந்து முதலை வெளிப்பட்டது. முதலை வாயைத் திறக்க அதனுள்ளிருந்து மூன்றாண்டுகட்கு முன்பு விழுங்கிய சிறுவன், இளைய வயது கொண்ட வளர்ச்சியுடன் வெளிப்பட்டான்.பிள்ளையின் பெற்றோரும், மற்றோரும் அளவிலா ஆனந்தம் கொண்டனர். அவர்கள் இறைவனின் கருணையையும், சுந்தரரின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்து, கை தொழுதனர்.எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாய் என்றுன்னையே உள்குகின் றேன்உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.

வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன் னைக்கிறி செய்ததே.

எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.

உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.

அரங்காவ தெல்லா மாயிடு காடது அன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே.

நாத்தா னும்உனைப் பாடல்அன் றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே.

மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
சந்திகள் தோறுஞ்சலபுட்பம் இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.

பேணா தொழிந்தேன் உன்னைஅல் லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியே
காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே.

நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.

நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே.

சனி, 13 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 18

வளமான வாழ்வு தரும் பதிகம


இறைவனின் அணுக்கத் தொண்டரும் நண்பருமாய் விளங்கிய சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் வாழ்விற்குத் தேவையான பொருள் வேண்டி நாகை காரோணத்தாரிடம் விண்ணப்பித்து "பத்தூர்புக் கிரந்துண்டு" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியருளினார். இப்பதிகத்தை தொடர்ந்து ஓதி வருபவர்கள் தங்கள் பொருளாதர நிலைமை மேன்மை அடைவதுடன் வாழ்விற்குரிய வசதிகள் யாவும் பெறுவர் என்பது திண்ணம். 

பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள்  இரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி
விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்
பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்
பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்
திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்
கடல் நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பூண்பதோர் இளவாமை பொருவிடைஒன் றேறிப்
பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்
பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்
பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்
வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்
வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பினிய மணிமாட நிறைந்தநெடு வீதிக்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்
சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்
மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
கட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து
வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்
சுந்தரனே கந்தமுதல் ஆடைஆ பரணம்
பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்
பண்டுதான் பிரமாண மொன்றுண்டே நும்மைக்
கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்
இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது
பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்
பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ
உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட
உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே
கலவமயி லியலவர்கள் நடமாடுஞ் செல்வக்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்
திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீர்இன் றெனக்கருள வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீ ரிருந்தீர்
வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு
ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர்
அணியாரூர் புகப்பெய்த வருநிதிய மதனில்
தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டுந்
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்
காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன் றறியான்
எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர்
திண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரே யாகில்
திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

மறியேறு கரதலத்தீர் மாதிமையே லுடையீர்
மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்
கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்
கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்
கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரென்
றண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே

புதன், 10 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 17


பொன் பொருள் கிடைக்கவும் இழந்தப் பொருளை மீட்கவும் உதவும் பதிகம்

சுந்தரர் திருமுதுகுன்றத்திறைவரை வணங்கி "நஞ்சியிடை" என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி இறைவன்பால் பொருள் பெறும் மனக்குறிப்புடன் "மெய்யில் வெண்பொடி" எனத்  தொடங்கித் திருப்பதிகம் பாடினார். திருமுதுகுன்றத்திறைவர் நம்பியாரூரர்க்குப் பன்னீராயிரம் பொன்னைப் பரிசிலாக வழங்கியருளினார். பொன் பெற்ற சுந்தரர் மீண்டும் இறைவனைப் பணிந்து தேவரீர் தந்தருளிய இப் பொன்னைத் திருவாரூரில் உள்ளோர் வியக்கும் வண்ணம் அங்கே வரும்படிச் செய்தல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்பொழுது 'இப்பொன்னெல்லாவற்றையும் மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்க' என்றதோர் அருள் வாக்கு எழுந்தது. அம் மொழியைச் செவிமடுத்த சுந்தரர் தாம் பெற்ற பொன்னின் மாற்றறிதற்காக மச்சம் வெட்டி வைத்துக் கொண்டு பொன்னனைத்தையும் மணிமுத்தாற்றில் புகவிட்டு  என்னை வலிய ஆட்கொண்ட திருவருளை இதிலறிவேன் என்று கூறித் தில்லையை நோக்கிப் புறப்பட்டார். வழியில் கடம்பூரைத் தரிசித்துத் தில்லையம்பதியை அடைந்தார். பின்னர் பல தலங்களை தரிசித்துவிட்டு திருவாரூரை யடைந்து பூங்கோயிற் பெருமானைத் தொழுது பரவையாருடன் இனிதிருந்தார்.இங்ஙனம் இருந்து வரும் நாளில் ஒருநாள் பரவையாரை நோக்கி "முதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் புகவிட்டோம். அப்பொன்னை இந்நகரத் திருக்குளத்தில் எடுத்து வருவோம் வருக" என அழைத்தார். பரவையாரும் வியப்பெய்தி உடன் சென்றார். நம்பியாரூரர் பெருமானை வணங்கிக் கோயிலை வலம் வந்து கோயிலின் மேல்பால் உள்ள திருக்குளத்தின் வடகீழ்க்கரையில் பரவையாரை நிற்கச் செய்து தாம் இறங்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரர் தம் செந்தமிழ்ப் பதிகம் கேட்கும் விருப்பினால் இறைவன் பொன்னை விரைவில் தோன்றாதவாறு செய்தருளினார். இந்நிலையில் பரவையார் ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடும் நிலையை எண்ணி நகைத் துரைத்தார். அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த பெருமானே! 'பரவை நகைத்துரையாதவாறு முன்னுரைத்தபடி செம்பொன்னைத் தந்தருளுக' எனப் "பொன்செய்த மேனியினீர்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடல் முடிந்த பின்னரும் பொன் கிடைக்கவில்லை. ஒன்பதாந் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்திரள் சுந்தரர் கைக்குள் கிடைத்தது. பொன்னை எடுத்த சுந்தரர் அதனையும் தாம் முன்னே மாற்றறிவதற்காக வெட்டி வைத்த மச்சத்தையும் உரையிட்டுப்பார்த்தார். எடுத்தபொன் உரையில் தாழ்ந்துகாணப்பட்டது. அதைக்கண்ட சுந்தரர் மீண்டும் திருப்பதிகம்பாடி மாற்றுயரப்பெற்றார். பொற்குவையைப் பரவையார் மாளிகைக்கு அனுப்பிவிட்டுப் பூங்கோயில் சென்று இறைவனை வணங்கிப் பரவையாருடன் திருமாளிகை சென்று இறையருளை எண்ணி மகிழந்திருந்தார். இப்பதிகப் பாராயணம் பொன் பொருள் அளிக்க வல்லதோடு இழந்த பொருளை மீட்கும் வலிமை கொண்டதாம்.

பொன்செய்த மேனியினீர்
    புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும்
    எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள்
    பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள்
    அடியேனிட் டளங்கெடவே.

உம்பரும் வானவரும்
    உடனேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித்
    திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள்
    பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மான்அருளீர்
    அடியேன்இட் டளங்கெடவே.

பத்தா பத்தர்களுக்
    கருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே
    முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண்
     பரவையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய்
    அடியேன்இட் டளங்கெடவே.

மங்கையோர் கூறமர்ந்தீர்
    மறைநான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர் 
      திகழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை
    குணங்கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய்
    அடியேன்இட் டளங்கெடவே.

மையா ரும்மிடற்றாய்
    மருவார்புரம் மூன்றெரித்த
செய்யார் மேனியனே
    திகழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே
    ரல்குலாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய்
    அடியேன்இட் டளங்கெடவே.

நெடியான் நான்முகனும்
    இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச
    முதுகுன்றம் அமர்ந்தவனே
படியா ரும்மியலாள்
    பரவையிவள் தன்முகப்பே
அடிகேள் தந்தருளாய்
    அடியேன்இட் டளங்கெடவே.

கொந்தண வும்பொழில்சூழ்
    குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர்
    சடைமாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள்
     பரவையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய்
    அடியேன்இட் டளங்கெடவே.

பரசா ருங்கரவா
    பதினெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர
     முதுகுன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள்
    பரவையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய்
    அடியேன்இட் டளங்கெடவே.

ஏத்தா திருந்தறியேன்
    இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம்
    முதுகுன்றம் அமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள்
    பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய்
    கொடியேன்இட் டளங்கெடவே. .

பிறையா ருஞ்சடைஎம்
    பெருமான் அருளாய்என்று
முறையால் வந்தமரர்
    வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில்
    வயல்நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க்
    கெளிதாஞ்சிவ லோகமதே.

திங்கள், 8 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 16


கண் நோய் பார்வை குறைபாடு நீக்கும் பதிகம்

வன் தொண்டர் என பக்தர்களால் அழைக்கப்பட்ட சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் திருவொற்றியூர் திருத்தலத்தில் இறையருளால் சங்கிலியாரை மணம் புரிகிறார் .அப்பொழுது இனி உன்னை நான் என்றும் பிரியமாட்டேன் என இறைவன் முன் சபதம் செய்கிறார்.ஆனால் சில நாட்களுக்குப் பிறகு  திருவாரூர் தியாகேசனை தரிசிக்க உணர்வு மேலிட திருவொற்றியூரை நீங்க நினைக்கிறார். சபதத்தை மீறிய அவர் செயலின் காரணமாக இறைவன் திருவிளையாடலின் காரணமாக இரண்டு கண்களையும் இழக்கிறார்.இதனால் துக்கமுறும் ஸ்வாமிகள் இறைவனிடம் தொடர்ந்து வேண்ட அவரது இடது கண் பார்வையை மட்டும் திரும்ப அளிக்கிறார்.திருவாரூர் தியாகேசனை தரிசிக்க தனது வலது கண் பார்வையையும் அளிக்க இப்பதிகத்தின் மூலம் வேண்ட, இறைவனும் திருவருள் கொண்டு பார்வையை அளிக்கிறான். இறைவன் திருவருளினால் பாடப்பெற்ற இப்பதிகப் பாராயணம் கண் தொடர்பான நோய்களை நீக்கும் வல்லமை உடையதாம்.

     மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
       பிறரை வேண்டாதே    
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
       முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
       அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
       வாழ்ந்து போதீரே.

விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
       விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஓன்றுஞ் செய்த தில்லை
      *கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண்கொண்டீர்
       நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
       வாழ்ந்து போதீரே.

அன்றில் முட்டா தடையுஞ் சோலை
       ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
      காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
      தங்கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால்
       வாழ்ந்து போதீரே.

துருத்தி உறைவீர் பழனம் பதியாச்
       சோற்றுத் துறஆள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர்
      மனமே எனவேண்டா
அருத்தி யுடைய அடியார் தங்கள்
      அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால்
       வாழ்ந்து போதீரே.

செந்தண் பவளந் திகழுஞ் சோலை
       இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமா(று)
      உமக்காட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார்
     தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ வென்றால்
       வாழ்ந்து போதீரே.

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
       சேருந் திருவாரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல்
       மாலைப் புரிபுன் சடையீரே
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து
       தங்கண் காணாது
மனத்தால் வாடிஅடியார் இருந்தால்
       வாழ்ந்து போதீரே.

ஆயம் பேடை அடையுஞ் சோலை
       ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமா
      றுமக்காட் பட்டோர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி
      மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
       வாழ்ந்து போதீரே.

கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
       கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
            இகழா தேத்துவோம்
பழிதான் ஆவ தறியீர் அடிகேள்
      பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால்
       வாழ்ந்து போதீரே.

பேயோ டேனும் பிரிவொன் றின்னா
       தென்பர் பிறரெல்லாங்
காய்தான் வேண்டிற் கனிதான் அன்றோ
     கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
   உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
       வாழ்ந்து போதீரே.

செருந்தி செம்பொன் மலருஞ் சோலை
       இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லத்தா னம்மே
     இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை
             இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
       வாழ்ந்து போதீரே.

காரூர் கண்டத் தெண்டோள் முக்கண்
      கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லத்தா னத்தே
     அடிப்பே ராரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர்
    நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
       வாழ்ந்து போதீரே.