இந்து மதத்தின் அடிப்படை நம்பிகைகள்:
இந்து மதத்தின் நம்பிக்கைகள் பெரும்பாலும் மற்ற மதங்களின் நம்பிக்கைகளைவிட வேறுபாடானது.இந்து மதத்தில் பல்வகையான தத்துவங்கள் இருப்பினும் , கீழ் காணும் அடிப்படையான நம்பிக்கைகள் மிகவும் முக்கியமானவையாகும்.
இந்து மதம் கடவுள் ஒருவனே என்பதைத்தான் சொல்கிறது என்றாலும் அக்கடவுளை எந்த உருவத்தில் வேண்டுமானலும் வணங்கலாம் என்பது இந்து மதத்தின் அடிப்படையான நம்பிக்கையாகும்.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலர் வாக்கு." நீங்கள் எந்த உருவத்தில் என்னை த்யானிக்கிறீர்களோ அதே உருவத்திலேயே நான் உங்களுக்கு அருளுகிறேன் என்பது பகவானால் பகவத் கீதையில் சொல்லப்படுகிறது.
இறைவன் எப்படிபட்டவன் என்பதை விவரிக்க இயலாது என்று நம்பும் இந்து மதம், அவன் உருவாய், அருவாய், உளதாய், இலதாய், ஆணாய், பெண்ணாய், அலியாய் எப்படிப்பட்டவனாகவும் இருக்கலாம். எனினும் இறைவனை ஒருமுகமாய் த்யானிக்க ஏதுவாக விக்கிரக வழிபாட்டினை பரிந்துரை செய்கிறது.இதற்கு ஆலய வழிபாட்டினையையும் அவசியமாக்குகிறது.
உடல்தான் அழியக்கூடியது. ஆன்மா அழிவற்றது. அது மீண்டும், மீண்டும் பிறப்பெடுப்பதாக இந்து மதம் நம்புகிறது. மறுபிறவி தத்துவத்தை அது வலியுறுத்தி சொல்கிறது. ஆன்மா தன்னை பிடித்திருக்கும் மலங்களிலிருந்து விடுபட்டு இறைவனை அடைகிறது. இவ்வாறு இறைவனை அடைவதற்கு பல வகையான வழி முறைகளை இந்து மதம் அறிவுறுத்துகிறது. இறைவனைப் பற்றியும், ஆன்மாவைப் பற்றியும்,பிரபஞ்சத்தைப் பற்றியும் தொடர் சிந்தனையால் ஞானம் பெறுபவர்கள் இறைவனை அடையலாம்.
ஞானிகளின் வழிகாட்டல்படி தியான முறைகளை பின்பற்றுபவர்களும் இறைவனை அடையலாம்.இறைவன் மீது கொண்ட பக்தியால் முழுமையான சரணாகதி அடைவதாலும் இறைவனை அடையலாம்.இவ்ற்றில் எவற்றையும் செய்ய இயலாதவர்கள் , தங்களுக்கு இவ்வுலகில் விதிக்கப்பட்ட கடமைகளை செவ்வனே செய்து வந்தால் அதன் மூலமும் இறைவனை அடையலாம்.
உயிரினங்கள் இப்பிறவியில் அனுபவிக்கும் அனைத்து இன்ப துன்பங்களுக்கும் அவை தங்கள் முற்பிறவியில் செய்த வினைகளே காரணம் என்றும் கூறுகிறது இந்து மதம்.இது தான் கர்மா என்று அழைக்கப் படுகிறது.
முதன் முதலாக ஒரு ஆணும், பெண்ணும் படைக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே மனித குலம் உருவானது என்ற தத்துவத்தை இந்து மதம் ஏற்பதில்லை.பூமிபடைக்கப்பட்டு,நீர்படைக்கப்பட்டு,தாவரங்கள் படைக்கப்பட்டு,உணவுப் பொருட்கள் படைக்கப்பட்டு, அதன் வழியாகவே அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டதாக இந்து மதம் கருதுகிறது.
இறைவனை அடைய வழி சொல்லும் அத்தனை மார்க்கங்களுமே மதிக்கப் படவேண்டும் என்றே இந்து மதம் வலியுறுத்துகிறது.
நான் என்ற அகங்காரம் முற்றிலும் அழிக்கப்படவேண்டும். அகங்காரம் உள்ளவர்கள் இறைவனின் அருள் பெற இயலாது.
நல்லவர்களை காப்பாற்றவும், கெட்டவர்களை அழிக்கவும் இறைவனின் அவதாரங்கள் நிகழ்த்தப் படுகிறது என இந்துமதம் நம்புகிறது.
இந்த உலகம் 43,20,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை அழிக்கப்பட்டு மீண்டும் படைக்கப்படுகிறது.இந்த கால அளவு நான்கு யுகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.சத்ய யுகம் 172,8000ஆம் ஆண்டுகள்,த்ரேதா யுகம்12,96,000ஆம் ஆண்டுகளும்,த்வாபர யுகம் 8,64,000 ஆம் ஆண்டுகளும் கலியுகம் 4,32,000 ஆம் ஆண்டுகளாகவும் கணிக்கப்பட்டுள்ளது.இதில் கலியுகம் பாதி முடிவதற்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டு பின்னர் புதிய படைப்புகள் இறைவனால் உருவாக்கப்படும் என்று இந்து மதம் கூறுகிறது.
மேற் சொன்ன எல்லாவற்றிலும் நம்பிக்கை கொண்டிருப்பவர்களானாலும் சரி, சில வற்றில் நம்பிக்கை உள்ளவர்களானாலும் சரி, எதையும் நம்பாதவர்களாயிருந்தாலும் சரி, இந்து மதம் அவர்களை புறக்கணிப்பதில்லை.நாத்திகத்தைகூட ஒரு தத்துவமாக இந்து மதம் ஏற்கிறது.இதை டாக்டர் ராதகிருஷ்ணன் அவர்கள்"உலகில் உள்ள எவராயினும் அவர்கள் ஹிந்துக்கள்தான். அவர்கள் இறைவனை நம்பலாம்,நாத்திகராக இருக்கலாம், எந்த மதத்தை சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களது உயிர் என்பது ஒரு தனிப் பட்ட ஆன்மா. அது இறைவனிடமிருந்து மாயைகளின் காரணமாக வேறுபட்டு நிற்கிறது. அது என்றாவது ஒரு நாள் இறைவனை சேர வேண்டும் என்பதே இந்து மதத்தின் அடிப்படையான நம்பிக்கையாகும்" என்று கூறுகிறார்.