வியாழன், 10 பிப்ரவரி, 2011

இந்து மதம் ஓர் அறிமுகம் -1


தோற்றம்:

இந்து மதத்தை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்காக எழுதப்படுவது அல்ல இது.இந்து மதத்தைப் பற்றி இந்துகளுக்கே அறிமுகம் செய்கின்ற சின்ன முயற்சிதான் இது.இந்து மதம் மிகப் பெரிய கடல்.பல்வகையான தத்துவங்களைத் தன்னுள் அடக்கியது.இந்த மதத்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் இதனை ஒரு குழப்பம் நிறைந்த மதமாகவே கருதுவார்கள்.ஏன் என்றால் இந்து மதம் இதை செய், இதை செய்யாதே என்று எதையும் வலியுறுத்துவது கிடையாது.இதை செய்தால் நன்மை பயக்கும், இதை செய்தால் தீமை விளையும் என்று மட்டுமே எடுத்துகாட்டும். அதனை அவரவர் அனுபவங்களுக்கு ஏற்ப ஏற்று நடந்திட அனைத்து உரிமைகளையும் இந்து மதம் வழங்குகிறது.

பரிணாம வளர்ச்சியில் மனிதன், மனிதனாக வாழத் தொடங்கியப் பின்னர், தங்கள் எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள தனித்தனி குழுக்களாக வாழ ஆரம்பித்தான்.இக் குழுக்களுக்குத் தலைவர்களும் உருவானார்கள். தங்களின் தலைவனின் தலைமையில் எதிரிகளுடன் போராடவும் அவர்களை அழிப்பதும் அவர்களது இயல்பானது.ஆனால் அவர்களுக்கு மனிதர்கள் அல்லாத எதிரிகளாலும் ஆபத்து உருவாக ஆரம்பித்தது. இடி,மழை, மின்னல், வெள்ளம், புயல், கடல் சீற்றம்,தீ,பூகம்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளுடன், விஷ ஜந்துக்களாலும், கொடிய மிருகங்களாலும் அவர்களுக்கு பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. இவைகளிடமிருந்து எப்படி தப்புவது என்பது அவனுக்கு பெரிய கேள்விக் குறியானது.எனவே அவைகளை எப்படி எதிர் கொள்வது எனத் தெரியாமல் அவற்றை வணங்க ஆரம்பித்தான்.இயற்கை இடர்பாடுகளாகட்டும், விஷ ஜந்துகளாகட்டும், கொடிய மிருகங்களாகட்டும் இவை எவையும் தங்களுக்கு கட்டுப் பட்டவை அல்ல என்பதை உணர ஆரம்பித்தான்.எனவே அவற்றை எதிர்க்க வழித் தெரியாமல் அவைகளிடம் எங்களை விட்டுவிடுங்கள் என கெஞ்ச ஆரம்பித்தான். அதுவே பின்னர் வணக்க வழிபாடானது. அதன் பின்னர், அச்சமூட்டுபவற்றை மட்டுமின்றி அழகானவற்றையும் வணங்க ஆரம்பித்தான்.சூரியன், நட்சத்திரம், கிரகங்கள், பூக்கள், பற்வைகள் இப்படி அவன் அதிசயித்த அத்தனையையும் வணங்க ஆரம்பித்தான்.இதன் காரணமாகவே உலகில் தோன்றிய பழமையான மதங்களில் கிரகங்களும், கொடிய மிருகங்களும்,வல்லுறுகளும், நாகங்களும் இன்னும் பலவும் வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.மனிதனது நாகரிகம் வளர வளர,உலகில் உள்ள அனைத்தும் ஒரு பரம்பொருளினால்தான் இயக்கப்படுகிறது என்ற ஞானம் ஏற்பட்டது. இந்த பரம்பொருள்தான் பிரபஞ்சத்தை இயக்க செய்கிறது என உணர ஆரம்பித்தான்.இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பல் வேறு மதங்கள் தோன்றின.இருப்பினும் ஆதியில் தோன்றிய அச்சமும் அதன் காரணமாக ஏற்பட்ட வழிபாடு முறைகளும் உலகின் தொன்மையான மதங்களில் இன்னும் காணக்கிடக்கிறது. உலகின் தொன்மையான மதங்களில் ஒன்றான இந்து மதத்திலும் இத்தகைய வழிபாடுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் மூன்றாவது பெரிய மதமாக இந்து மதம் திகழ்கிறது. இந்து மதம் தொன்மையான மதமாக இருந்தாலும் அதற்கு இந்து மதம் என்று பெயரிடப்பட்டது சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான். "ஹிந்து" என்ற சொல் பலர் நினைத்து கொண்டிருப்பதுபோல் சமஸ்கிருத சொல் அல்ல. சிந்து சமவெளியில் வசித்து வந்த மக்களை, கிரேக்க மற்றும் பெர்சிய இன மக்கள்தான் முதன் முதலாக ஹிந்துக்கள் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.அப்பொழுது அந்த சொல் ஒரு மதத்தின் அடையாளமாக இல்லாமல் ஒரு சமுதாயத்தின் அடையாளாமாகவே அறியப்பட்டது. இந்த நிகழ்வு ஏறத்தாழ பதினாறாம் நூற்றாண்டில் ஏற்பட்டது.இதன் பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றிய போது , முஸ்லிம்களைப் போன்று இல்லாமலும், கிருத்துவர்களைப் போன்றும் இல்லாமலும், வேறு வகையான வணக்க வழிபாடுகளை கொண்டிருந்த நம் மக்களை ஹிந்துக்கள் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.அதன் பின்னர்தான் இந்து என்ற சொல் ஒரு மதத்தை குறிக்கும் சொல்லாக மாறியது.இந்து மதத்தை மதம் என்று சொல்வதைவிட ஒரு வாழ்க்கை முறை என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். எனவேதான் அது சனாதன தர்மம், வைதீக தர்மம் என்ற பெயர்களில் அழைக்கப் பட்டு வந்தது இந்து மதத்தின் தோற்றம் பற்றி பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.ஆரியர்கள் இந்தியாவின் மீது கீ.மு.1500 ஆம் ஆண்டு படையெடுத்து வந்தபோதுதான்,இப்பொழுது இந்து மதம் என்று அழைக்கப் படும் வேத மதத்தை இங்கு கொண்டு வந்த்தாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.இந்த கருத்து 19ஆம் நூற்றாண்டில் கிருத்துவ அறிஞர்களாலும் வலியுறுத்தப்பட்டது.ஆனால் அதன் பின்னர் நடத்தப் பட்ட பல்வேறு ஆய்வுகளில் இந்த கருத்து தவறு என்று நிரூபிக்கப்பட்டது.

ஜிம்ஸ்காலர் மற்றும் டேவிட் பார்லே போன்ற அகழ்வாராய்ச்சி அறிஞர்கள், சிந்து சமவெளி நாகரிகம் என்பது கீ.மு. 3500 ஆம் ஆண்டிற்கும் கீ.மு 1800 ஆம் ஆண்டிற்குமான இடைபட்ட காலம் என்பதை கண்டறிந்தார்கள்.சிந்து சமவெளி நாகரீகம் ஆரியர்களால் அழிக்கப்பட்டது என்ற கருத்தும் தவறானது என்பதையும்,ஆரியர்களின் படையெடுப்பிற்குப் பிறகு இருண்ட காலம் என்று எதுவும் ஏற்படவில்லை என்பதையும் நிரூபித்தார்கள்.எனவே ஆரியர்களின் படையெடுப்பு என்று ஒன்று நிகழவேயில்லை என்பதனால் ஆரியர்களினால் தான் இந்து மதம் இங்கு வந்தது என்ற கருத்து வலுவிழந்தது.சிந்து சமவெளி மக்களால் கடை பிடிக்கப்பட்டு வந்த ஒரு வாழ்க்கை முறையே இந்து மதமாக ஏற்கப்பட்டது. ஆனால் அது எப்பொழுது தோன்றியது என்பதை இதுவரை யாராலும் சரியாக வரையறுத்து சொல்ல இயலவில்லை என்பதே உண்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக