கந்த சஷ்டித் தொடர்பான ஒரு சர்ச்சை எழுந்தபோது அது குறித்து. எழுதுமாறு என்னுடைய நண்பர்கள் சிலர் வலியுறுத்தினர். அனைவரும் உணர்வு வெளிப்பாட்டுடன் இருந்த அந்த நேரத்தில் அது குறித்து எழுதாமல் அவையெல்லாம் ஓரளவு அடங்கிய பின் இதனை எழுதுகிறேன். கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் ஒரு கூறு என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஜனநாயகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையாக எதுவும் இருக்கமுடியாது. ஆனால் அந்த சுதந்திரம் கட்டுப்பாடுடைய சுதந்திரமாக இருத்தல் வேண்டும். வின்சென்ட் சர்ச்சில் ஒரு முறை இவ்வாறு குறிப்பிட்டார்." உன்னுடைய கைத்தடியை எப்படி வேண்டுமானாலும் சுழற்ற உனக்கு இங்கு சுதந்திரம் உண்டு. ஆனால் அது மற்றவரின் மூக்கை காயப்படுத்திவிடக்கூடாது" ஆனால் நம்முடைய நாட்டில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு நடிகரோ, அறிமுகமில்லாத அரசியல்வாதியோ, சமூக ஆர்வலரோ தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவும், தாங்கள் அறிவு ஜீவிகள் என நம்பவைக்கவும். முதலில் கையில் எடுப்பது கடவுள் மறுப்பு என்பதே. அதிலும் இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளை கொச்சைபடுத்தியும் கேலி செய்தும் தாங்கள் பெரிய அறிவாளிகள் என்பதை நிரூபிக்க பார்ப்பார்கள். இது போன்ற சின்ன மதியாளர்களை நாம் புறந் தள்ளிவிட்டு நமக்கு எது சரியென்றுபடுகிறதோ அதன்படி வாழ்வதே நலமாகும்.
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசம் என்று கற்ற்றிந்த எவரும் கூற மாட்டார்கள். சஷ்டி கவசம் ஒரு த்யானப்பாடலாக குண்டலினி சக்தியை மேலெழும்ப செய்யும் ஒரு மந்திரமாக பாடப்பட்டிருக்கிறது் மூலாதாரத்திலிருந்து உச்சந்தலை வரை அமைந்துள்ள ஏழு சக்கரங்களில் மனதை ஒரு நிலைப்படுத்தும் வண்ணமே அது படைக்கப்பட்டிருக்கிறது. அதற்காகத்தான் உடல் உறுப்பு ஒவ்வொன்றின் மீதும் மனதை நிலை நிறுத்தும் வண்ணம,அப்பாடல் வரிகள் அமைந்திருக்கிறது. தேவராயசுவாமிகள் குறிப்பிட்டுள்ளவாறு உடல்தூய்மையுடன் இப்பாடலை தினம் முப்பத்தாறுமுறை சொல்லி வருபவர்கள் அளப்பரிய சக்திகளை அடையப் பெறுவார்கள். ஓரிரு முறை இப்பாடலை உச்சரிப்பதன் மூலம் கூட எண்ணற்ற இடர்களிலிருந்து தாங்கள் காப்பற்றப்பட்டிருப்பதாக பலர் அனுபவ வாயிலாக உணர்ந்திருக்கிறார்கள. இந்து மத பக்தி இலக்கியங்கள் யாவும் பல நூறாண்டுகளாய் பௌத்தம், சமணம், மொகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி என எல்லாவற்றையும் கடந்து இன்னமும் உயிர்ப்புடன் திகழ்கின்றன. அவற்றை இழிவுபடுத்துபவர்கள் அல்லது அழிக்க முயல்பவர்களால் அவை என்றும் முடங்கிப் போனதில்லை. மாறாக அவதூறு செய்யப்படும் பொழுதெல்லாம் அவை மேலும் புத்துணர்வு பெற்று பல மடங்கு பெருகி வளர்வதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். கம்ப ராமாயணம், பெரியபுராணம், ஏன் சமீபத்தில் ஆண்டாள் நாச்சியார் என அவதூறு செய்யப்பட்ட அனைத்தும் முன்னைவிட அதிகமாக மக்களால் நேசிக்கப்படுவதை காண்கிறோம் கந்த சஷ்டி கவசம் இனி அறியாதவர்களால் கூட வாசிக்கப்பட்டு உலகம் முழுவதும் தனது அருட் கரத்தை பரவ்விடப் போகிறது. அந்த அருள் வெள்ளத்தில் இன்று இகழ்ந்தவர்கள் கூட ஒரு நாள் சங்கமிப்பார்கள்