செவ்வாய், 17 மார்ச், 2020

கரோனா வைரஸும் கடவுள் வழிபாடும்


ஒவ்வொருமுறையும் ஏதேனும் இயற்கை இடர்பாடுகள் வரும்பொழுதும் ஒவ்வொரு மதங்களையும் சார்ந்த சிலர் இது தொடர்பாக எங்கள் மதத்தில் சில முன்னறிவிப்பு உள்ளது என மேற்கோள் காட்டுவது இப்பொழுதெல்லாம் வழக்கமாகிவிட்டது. கரோனாவையும் அது விட்டு வைக்கவில்லை. சிலப்பதிகாரத்தில் இல்லாத நான்காவது அத்தியாத்தில் மூன்றாவது பாடலில் கரோனாவைப்பற்றி பாடல் உள்ளது என சிலரும் , போகர் சித்தரின் பாடலில் உள்ளது என சிலரும் சமஸ்கிருத ஸ்லோகத்தில் உள்ளது என சிலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள். தவறான செய்திகளை அளித்து மதத்திற்கு பெருமை சேர்க்க நினைப்பது கேலிக்குத் தான் இடமளிக்கும். உலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அத்தனை நிகழ்வுகளையும் முன்பே அறிவிக்கப்பட்டு உள்ளது எனக் கூறுவது எதார்த்தத்திற்கு புறம்பானதாகத்தான் அமையும். ஆனால் ஒவ்வொரு முறையும் உலகில் ஏதேனும் பாதகங்கள் ஏற்பட்ட பொழுதும் அதனிலிருந்து மக்களின் துன்பங்களை குறைக்கும் வண்ணம்  நம்முடைய ஞானிகள் பல இறைவழிபாடுகளையும் பதிகங்களையும் பாசுரங்களையும் அளித்திருக்கிறார்கள். இறை நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றை கடைபிடித்து இடர்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

ஒரு காலத்தில் திருச்செங்கோடு நகரில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இனம் புரியாத குளிர் வியாதி பரவி பல மக்கள் உயிரை இழந்தனர். திருஞானசம்பந்தர் அவ்வூருக்கு வருகை தந்தபோது பக்தர்கள் இது குறித்து அவரிடம் முறையிட்டனர், . இது முன்வினை பயனே என்று தனது ஞானத்தால் அறிந்த சம்பந்தர் அந்நோய் நீங்கும் வண்ணம் அவ்வினைக்கு என்னும் தொடங்கும் ஒரு பதிகத்தைப் பாடி அருளினார். அப்பதிகப் பயன் காரணமாய் அந்நோய் அவ்வூரிலிருந்து மட்டுமல்ல அந்நாட்டை விட்டே அகன்றது. நம்ம்டைய துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் வேறு யாரும் அல்ல. நம்முடைய செயல்களே காரணம் என்பதை ஞானிகள் உணர்த்தினர். இதைத்தான் பூங்குன்றனாரும் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று குறிப்பிடுகிறார். நாம் செய்கின்ற வினையின் அதாவது செயல்களின் காரணமாகவே நமக்கு துன்பங்கள் ஏற்படுகிறது எனவும் அதனிலிருந்து விடுபட இந்தப் பதிக பாராயணம் பயன் தரும் என்றும் சம்பந்தர் குறிப்பிடுகிறார். எனவே கரோனா போன்ற நோய்களின் பிடியிலிருந்து விடுபட இப்பதிகத்தை நாம் தினமும் சூரிய உதயத்திற்கு முன் ஒருமுறையும், அஸ்தமனத்திற்குப் பிறகு ஒருமுறையும் கேட்டு வருவோமானால் நாம் நிச்சயம் இந்த கொடிய நோயின் பிடியிலிருந்து விடுபடலாம். ஆன்மீகமே நம்பிக்கையின் அடிபடயில் நிகழ்வதுதான். ஏன் நீங்கள் இதை முயன்று பார்க்கக் கூடாது? உங்களால் முடியுமானால் இப்பதிகத்தை நீங்களே மனனம் செய்தோ அல்லது நூலின் துணை கொண்டோ ஓதி வருவீர்களானால் மிகுந்த நன்மை பயக்கும்.

பாடியிருப்பவர் திருத்தணி சுவாமினாதன் அவர்கள்
தொகுப்பு:நலமிகு பதிகங்கள் 40
வெளியீடு  : ஸ்ருதிலயா




படித்துப் பயன்பெற மனனம் செய்து பயனுற பதிக வரிகள் 

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமையாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.


பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக