புனித நூல்கள்
இந்து மதம் வேறு சில மதங்களைப் போல ஒரு நூல்,ஒரு தூதர் அடிப்படையில் அமைந்தது அல்ல.இந்து மதத்தின் அடிப்படையே ஒவ்வொரு தனி மனிதனும அவனது ஆற்றல்களுக்கு ஏற்றாற்போல் அல்லது அவனுக்கு விதிக்கப்பட்டதுபோல் இறைவனை அடையக்கூடிய நிலை ஏற்படும் என்பதாகும்.எனவே தனிமனித அனுபவங்களும் சமூகம் சார்ந்த அனுபவங்களும் பலவிதமான புனித நூல்களை இந்து மதத்திற்குத் தந்திருக்கிறது. இந்து மதத்தின் புனித நூல்கள் இரண்டு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று ஷ்ருதி மற்றொன்று ஸ்மிருதி. ஷ்ருதி வகை நூல்கள் கேட்கப்பட்டவை என்றும் ஸ்ம்ருதி வகை நூல்கள் ஞாபகப்படுத்தப்பட்டவை என்றும் வகைபடுத்தப்படுகிறது. இறைவனால் அருளப்பட்டு மகான்களால் கேட்கப்பட்டவை ஷ்ருதி நூல்கள் என்றும் இறையனுபவங்களின் ஞபாகத்தொகுப்பே ஸ்ம்ருதி நூல்கள் என்றும் கொள்ளலாம். நான்கு வேதங்கள் மற்றும் உப நிஷத் போன்ற நூல்கள் ஷ்ருதி என்று அழைக்கப்படுகிறது.இதிகாசங்கள், பகவத்கீதை, புராணங்கள், தர்ம சாஸ்த்ரா போன்ற நூல்கள் ஸ்ம்ருதி வகை நூலகளாகும் . இவற்றை தவிர உபவேதங்கள்,ஆகமம், தந்த்ரா போன்ற ஏராளமான புனித நூல்கள் இந்து மத்த்தில் உண்டு. இந்தப் புனித நூல்கள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில்தான் உள்ளது என்றாலும், தமிழ், குஜராத்தி, பெங்காலி போன்ற மொழிகளிலும் எண்ணற்றப் புனித நூல்கள் உண்டு. தமிழில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டப் பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருவருட்பா போன்ற எண்ணற்ற புனித நூல்கள் வேதங்களுக்கு இணையாகவே மதிக்கப் படுகின்றன. இம்மாதிரியான புனித நூல்கள் இந்துக்களின் வணக்கத்திற்குறியவையாக உள்ளன. இவற்றை மனனம் செய்வது, ஓதுவது ஆகியவற்றால் இறையருள் கிடைக்கும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்
வேதங்கள்
உலகின் பழமையான நூல்களாக இந்து மத வேதங்கள் ஆராய்ச்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. வேதங்கள் அழிவற்றவை என நம்பப்படுகிறது. வேதங்கள் ஒவ்வொரு யுக ஆரம்பத்திலும் இறைவனால் பூமிக்கு கொண்டு வரப்படுகிறது.உலக மர்மங்களை தன்னிடத்தே கொண்டுள்ள இயற்க்கையை வழி நடத்த மட்டுமல்லாதுஆன்ம அனுபவங்களை அறிவிப்பதற்காகவுமே வேதங்கள் பூமிக்கு அளிக்கப்படுகிறது.மேலான பார்வைக்கு இவை சம்பிரதாயப் பாடல்களாக தோன்றினாலும், பிரபஞ்சத்திலிருந்து சக்தியை பெறும் வகையிலேயே இவை அருளப்பட்டுள்ளது.
வேதங்கள் ரிக்,யஜுர், சாம மற்றும் அதர்வண என நான்காகும்.இவையே சதுர் வேதங்கள் என்று அழைக்கப் படுகின்றன.வேதங்கள் எப்பொழுது படைக்கப் பட்டவை என்பது இன்னும் அறியப்படவில்லை.வேதங்கள் முதன்முதலாக வியாசரால்தான் தொகுக்கப் பட்டன. ஒவ்வொரு வேதத்திலும் நான்கு முக்கியப் பகுதிகள் உண்டு. தேவ மந்திரங்கள் அடங்கியப் பகுதி "சம்ஹிதா" எனவும்,சடங்குகள் பற்றிய விளக்கங்கள் "பிரமணா" பகுதியிலும், த்யானம், யோகம் போன்றவை"ஆரண்யகா"பகுதியிலும், இறைப் பற்றிய தத்துவங்கள்"உப நிஷத்" பகுதியிலும் காணலாம். வேதங்கள் மிகவும் நுண்ணியமாகவும், சூட்ச்சமுமாகப் படைக்கப் பட்டுள்ளதால் ஆழ்ந்த கவனமுடன் படிப்பவர்களே உண்மையானப் பொருளை அறிய முடியும்.
ரிக்வேதம்
ரிக்வேதம் பெரும்பாலும் இறை மந்திரங்கள் அடங்கிய நூலாகும். ரிக் வேத 'சம்ஹிதா" பகுதியில் 1017 அத்தியாயங்கள் உள்ளன. இவை "ஸூக்தா" என்றழைக்கப்படுகிறது. ரிக் வேதத்தில் பல இடங்களில் ஓர் இறை கொள்கை வலியுறுத்தப்பட்டாலும்,உருவ வழிபாட்டினை ஏற்றுகொண்டுள்ளது.
சாம வேதம்.
சாம வேதம் ரிக் வேதத்தின் சுருக்கப்பட்ட வடிவமாகவே படைக்கப்பட்டுள்ளது. சாம வேதம் தனக்கென்று புதிய தத்துவங்களை அறிவிக்காமல் ரிக் வேத தத்துவங்களையே எளிமையாகவும் இசையாகவும் கொடுத்துள்ளது. எனவேதான் வேத நூல் ஆய்வாளர் டேவிட் பார்லே இவ்வாறு கூறுகிறார்.
"ரிக் வேதம் என்பது வார்த்தை என்றால், சாம வேதம் அதன் பாடலாகவும் பொழிப்புரையாகவும் விளங்குகிறது.ரிக் வேதம் ஞானம் என்றால் அதனை எளிமையாக வெளிபடுத்துவது சாம வேதம்"
யஜுர் வேதம்
யஜுர் வேதம் இந்து மத சடங்குகளுக்கான வழிகாட்டி நூல் என்றே சொல்லலாம்.வேத விற்ப்பன்னர்களால் செய்யப்படவேண்டிய வேள்விகள் மற்றும் அதற்கான நடைமுறைகளை இந்த வேதம் விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகிறது.
அதர்வண வேதம்:
இந்த வேதம் மற்ற வேதங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். மந்திர, தந்திரங்களை பற்றி விரிவாக இதில் விளக்கப்படுகிறது. இந்த வேதத்தில்தான், வேத கால சமூகத்தின் வாழ்க்கை முறை சுட்டிகாட்டப்படுகிறது.
உப நிஷத்துக்கள்:
உப நிஷத் என்பதற்க்கான பொருள்"அருகில் அமர்வது "என்பதாம். குருவின் அருகில் அமர்ந்து சிஷ்யர்களால் கற்கப்பட்டவையே உப நிஷத்துகள் என்று அழைக்கப்படுகிறது. வேதத்தின் இறுதி பகுதியாக இவை அமைந்துள்ளதால் "வேதாந்தம் " என்றும் அழைக்கப்படுகிறது. அந்தம் என்ற சமஸ்கிருத சொல் இறுதி என்பதை குறிக்கும். உப நிஷத்துகள் இந்து மதத்தின் தத்துவ மையங்கள் என்றே கூறலாம். உப நிஷத்துகளில் அடங்கிய தத்துவங்களை மிக சிறந்த தத்துவங்களாக நமது நாட்டு அறிஞர்கள் மட்டும் அல்லாது பல வெளி நாட்டு அறிஞர்களும் ஏற்றுகொண்டுள்ளனர். வேதங்களின் காலத்தைப் போலவே உப நிஷத்துகள் காலமும் சரிவர கவனிக்கப்படவில்லை என்றாலும் கி.மு 800 மற்றும் 400 ஆம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலமாக இருக்கலாம் என பல ஆரய்சியாளர்களால் கருதப்படுகிறது. உப நிஷத்துக்கள் 108 க்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளதென்றாலும் கீழ்கண்ட உப நிஷத்துக்கள் அவற்றுள் முக்கியமானவையாக கருதப்படுகிறது.
சந்தோக்க்யா,கேனா,அயித்ரேயா,கதா,முண்டக ,தைத்ரியேக,ப்ரிஹடர்ண்யகா, , ஸ்வேடஸ்வதாரா,ஈஷா,ப்ரசனா,மண்டுக்யா,மைத்ரி போன்றவை சில முக்கியமான உப நிஷத்துக்கள் ஆகும்.
ப்ரிஹடர்ண்யகா உபநிஷத்தில்
"உண்மை அற்றதிலிருந்து என்னை உண்மைக்கு அழைத்து செல்... இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து செல்... இறப்பிலிருந்து என்னை அழிவற்ற தன்மைக்கு அழைத்து செல் " என்று வேண்டப்படுகிறது. இதனை அடைய வேண்டுமானால் ஆன்மா அழிவற்றது அது அனைத்து உயிர்க்கும் ஒன்றுதான் என்பதை உணர்ந்து , உயிர்களிடத்தில் வேறுபாடு இல்லை என்ற ஞானம் வரப்பெறவேண்டும் என்பதைத்தான் உப நிஷத்துக்கள் வலியுறுத்துகின்றன. ஆண்டான், அடிமை, ஏழை, பணக்காரன், மனிதன், மிருகம் இப்படி எவ்வித வேறுபடுமின்றி அனைத்திலும் இருப்பது ஒரே ஆன்மாதான் என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும் என்பதே உப நிஷத்துக்கள் காட்டும் வாழ்க்கை நெறியாகும். இத்தகைய ஒருமைப்பாடுதான் இந்து மத தத்துவ சாரம்சமும் கூட. உப நிஷத்துக்கள் காட்டும் தத்துவங்களை விளக்க முற்படின் அதுவே ஒரு பெரிய நூலாகிவிடும் என்பதால் ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே இங்கு தரப்பட்டது. இந்து மதத்தின் ததுவங்களை விரிவாக அறிய நினைப்பவர்கள் நிச்சயமாக உப நிஷத்துக்களை கற்றாக வேண்டும்.
ஆகமங்கள்
வேதத்திற்கு இணையாக கருதப்படுவை ஆகமங்களாகும்.ஆகமம் என்றால் வரப்பெற்றது என்பது பொருளாகும். இறைவனிடமிருந்து வரப்பெற்றது எனக் கொள்ளலாம். ஆகமம் மற்றும் தந்த்ரா என்பவை அறிவு களஞ்சியங்களாகும்.சைவம்,வைஷ்ணவம் மற்றும் சாக்தம் ஆகிய மூன்று வகை வழிபாடுகளில் ஆகமங்கள் உண்டு.சாக்தம் வழிபாட்டிற்கான ஆகமங்கள் தந்த்ரா என அழைக்கப்படுகிறது. ஆகமங்களில் கீழ்கண்ட பொருள்கள் தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
1) வழிபடும் முறை 2)யோகா 3)யந்த்ரங்கள் 4) மந்த்ரப் ப்ரயோகம் 5) ஆலயம் மற்றும் நகர் வடிவமைத்தல 6) சமூக பழக்க வழ்க்கங்கள் 7) சமூகம் மற்றும் பொது விழாக்கள் 8) புனித தலங்கள் 9) பிரபஞ்சம், படைப்பு மற்றும் அழிப்பு தொடர்பான உண்மைகள் 10) ஆன்ம தத்துவங்கள் 11) ஆசார அனுஷ்டானங்கள் மற்றும் ஆன்மிகம் தொடர்பான இதர விஷய்ங்கள். ஆகமங்கள் மந்த்ரம், தந்த்ரம் மற்றும் யந்த்ரம் என மூன்று பகுதிகள் அடங்கியது.
மந்த்ரம் என்பது கடவுளின் ஒலி வடிவமாக கூறப்படுகிறது.யந்த்ரா என்பது தேவதைகளாக கருதப்படுகிறது.ஒவ்வொரு தேவதைகளுக்கான யந்த்ரங்கள் தயாரிக்கும் வழிவகைகள் பற்றியும் அவற்றில் மந்த்ர உச்சாடனம் மூலம் உருவேற்றி பலன் பெறும் முறைகள் பற்றி குறிப்பிடுகிறது.
தந்த்ரா என்பது மந்த்ர, யந்த்ரங்களை எவ்வாறு கையாளவேண்டும் என்பதை விளக்குகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மந்த்ர யந்த்ரங்கள் ஆன்மிக சக்தியின் ஒருங்கிணைப்பு மையம். தந்த்ரா என்பது அந்த மையத்திலிருந்து சாதகன் பலன் பெறுவதற்கான வழிகாட்டி என கொள்ளலாம்.
ஆகமங்கள் ஞானப் பாதை ,யோகப் பாதை,க்ரியப் பாதை மற்றும் காரியப் பாதை என நான்கு முக்கிய தத்துவங்களை விளக்குகிறது. ஞானப்பாதையில் பிரப ஞ்சத்தின் அமைப்பு, உலகம் இயங்குவதற்க்கான காரணம் மற்றும் படைப்பு மற்றும் அழிப்பு ஆகியவற்றை விளக்குகிறது.சாதகன் முக்தி அடையும் வழிமுறைகளை விளக்கி சொல்கிறது. யோகப் பாதையில், ஞானப் பாதையில் சொல்லப்படும் ஆன்மிக தத்துவங்களை அனுபவ வாயிலாக அறிவதற்கான வழி முறைகளை சொல்கிறது.யோகம் மனிதனது மனத்தினையும்,சிந்தனை மற்றும் செயல்களை தூய்மை படுத்துவதற்க்கான வழி முறைகளை கற்று தருகிறது.குண்டலினி போன்ற யோக முறைகளும் இதில்தான் விரிவாக விளக்கப்படுகிறது.
க்ரியாப் பாதையில் ஆலயம் கட்டுதல், பூஜை முறைகள், யாத்திரைகள் , ஆன்மிக சட்டத்திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்குகிறது. காரியப் பாதை ஆசார அனுஷ்டானங்கள் அதற்கான விதி முறைகள் ஆகியவற்றை விளம்புகிறது.
சைவத்தில் காமிகா,வீரா, பரமேஸ்வரா, ஸ்வயம்புவா போன்று 28 ஆகமங்களும் ஏராளமான உப ஆகமங்களும் உள்ளன.சைவ ஆகமங்கள் சிவனை முழு முதல் கடவுளாக கொள்கின்றன.
வைஷ்ணவத்தில் ஈஸ்வர,அஹிர் புத்னியா,நாரதா போன்று ஏராளமான ஆகமங்கள் உண்டு.வைஷ்ணவ ஆகமங்கள் விஷ்ணுவை முழு முதல் கடவுளாக கொள்கின்றன.சாக்தத்தில் குல வர்ஷா,ருத்ர மாலா, பிரபத் மாலா போன்று 64 ஆகமங்கள் உண்டு. இந்த ஆகமங்கள் சிவ சக்தி உரையாடல்களாய் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சாக்த ஆகமங்கள் சக்தியை முழு முதல் கடவுளாக கொள்கின்றன..
இதிகாசங்கள்:
இந்து மதத்தின் இரண்டு கண்களாய் விளங்குவது இராமாயணமும், மஹா பாரதமும். ராம அவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தையும் சுவை பட கூறும் இந்த இரண்டு நூல்களைப் பற்றியும் அனைவரும் அறிவிர்கள் என்பதால் இவற்றைப் பற்றி இங்கு விரிவாக விளக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் படிக்க வேண்டியவை இந்த இரண்டு இதிகாசங்களும் என்பதை மட்டும் இங்கு வலியுறுத்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்
தர்ம சாஸ்த்ரா
ஸ்ம்ருதி வகை நூலகளில் தர்ம சாஸ்த்ரா என்று அழைக்கப்படும் சட்ட நூல்கள் முக்கியமானவையாகும். தனி நபர் மற்றும் சமுக ஒழுக்கங்களை வலியுறுத்துவதுதான் இந்த தர்ம சாஸ்த்ராக்களின் அடிப்படையாகும். ஒவ்வொரு யுகத்திலும், இம்மாதிரியான சட்ட நூல்களை தருவதற்காக சிலர்
பிறப்பிக்கப்படுவதாகவும், அவர்கள் நடைமுறையில் உள்ள சட்டங்களை ஒழுங்கு படுத்துவதுடன், தேவையற்றவற்றை நீக்கியும், தேவையானவற்றை சேர்த்தும், வேதங்களின் அடிப்படையில் சட்ட நூலகளை உருவாக்குவார்கள் என்று இந்து மதம் நம்புகிறது. அவ்வாறு இயற்றப்பட்ட சட்ட நூல்களில் மனு ஸ்ம்ருதி, யஜ்ன ஸ்ம்ருதி மற்றும் பராசர ஸ்ம்ருதி ஆகியவை முக்கியமானதாக கருதப்படுகிறது. மனு ஸ்ம்ருதி சத்ய யுகத்திற்காகவும், யஜ்ன ஸ்ம்ருதி த்ரேதா யுகத்திற்காகவும்,சாங்கா ஸ்ம்ருதி த்வபர யுகத்திற்காகவும், பராசர ஸ்ம்ருதி கலி யுகத்திற்காகவும் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. மனு ஸ்ம்ருதி நூல்தான் இந்து மத நூல்களிலேயே அதிகமான விமர்சன்ங்களுக்கு ஆளாகும் நூல் என்று சொல்லலாம்.மனுஸ்ம்ருதி 12 அத்தியாயங்களையும் 2694 ஸ்லொகங்களையும் கொண்டது. அக்காரா, வ்யவஹாரா, ப்ராயசித்தா, ராஜ தர்மா என்று நான்கு காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.பிரம்மாவால், பிருகு முனி உள்ளிட்ட முனிவர்களுக்கு அருளப்பட்டதாக கருதப்படுகிறது. வர்ணாஸ்ரம முறையை தீவீரமாக ஆதரிப்பதால் பலத்த விமர்சன்ங்களுக்கு உட்படுத்தப் படுகிறது.
மனு தர்மத்தின் வழியிலேயே ஆட்சி நடத்தப் படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதால், பிராமணர்களை தவிர இதர மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுப்பபடுகிறது.ஆனால் அந்த அளவிற்கு மனு தர்மம் அதிகாரம் செலுத்தியதா இல்லையா என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது. சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தெற்கு மற்றும் வட இந்தியாவில் மனு தர்மத்தை முன் நிறுத்தி ஆட்சிகள் நடைப் பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.மதுராவைப் பற்றி எழுதிய மெகஸ்தனிஸோ அல்லது அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியரோ மனு ஸ்ம்ருதி பற்றி தங்கள் நூல்களில் எதுவும் குறிப்படவில்லை என்பது கவனிக்கதக்கது.
18 ஆம் நூற்றாண்டில் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் மனு ஸ்ம்ருதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட பின்புதான், மனு ஸ்ம்ருதி பற்றி பரவலாக அறியபிபட்டது. இது பற்றி அவாரி என்னும் மேல் நாட்டு ஆய்வாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"மனு தர்மம் இந்தியா முழுவது கடை பிடிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு.வில்லியம் ஜோன்ஸ் மனுதர்மத்தை பற்றியும் அதன் ஆளுமையை பற்றியும் மிகை படுத்தி எழுதிவிட்டார்"
இந்தியாவின் தலித் அறிஞர்களும் பெண்ணுரிமையாளர்களும் மனு தர்மத்தை கடுமையாக எதிர்த்த போதும்,சில மேல் நாட்டு அறிஞர்கள் அதனை வெகுவாக புகழ்கின்றனர். ஜெர்மானிய அறிஞர் ப்ரெட்ரிக் நீச்சே என்பவர் " மனு ஸ்ம்ருதி மிக சிறந்த ஆன்மிக மற்றும் சமுக நூல்" என்று குறிப்பிடுகிறார். ஆனால் டாக்டர் அம்பெத்கர் அவர்கள் " பௌத்த மதம் இந்தியாவில் வளர அரம்பித்தபின், தங்களை காத்துகொள்ள பிராமணர்களால் வரையப் பட்டதுதான் மனு ஸ்ம்ருதி" என்று குறிப்பிடுகிறார். சுவாமி தயானந்த சரஸ்வதி,பக்த வேதாந்த சுவாமி, அன்னி பெஸண்ட் அம்மையார், பண்டுரங்க சாஸ்திரி டாக்டர் ராதகிருஷ்ணன் போன்ற அறிஞர்கள் மனு ஸ்ம்ருதியை வெகுவாக பாராட்டுகிறார்கள்.
மனு ஸ்ம்ருதியை பொருத்தவரை வர்ணாஸ்ரமத்தை வலியுறுத்தியே வரைய பட்டுள்ளது. சில ஸ்லோகங்களில் பெண்களை உயர்வாகவும் சில ஸ்லோகங்களில் அவர்களைத் தாழ்வாகவும் சித்தரிக்கிறது.சில ஸ்லோகங்களில் பெண்கள் வேதம் படிக்க கூடாது என்றும் வேறு சில ஸ்லோகங்களில் படிக்கலாம் என்றும் காணப்படுகிறது. இவ்வாறான் முரண்பாடுகளை காணும்போது ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த நூல் பல சிதைவுகளுக்கு ஆளாகி இருப்பதை அறிய முடிகிறது. பல விமர்சனங்கள் எழுப்பப் பட்டாலும் , பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அப்பொழுதிருந்த சூழ் நிலைக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட ஒரு நூல் தற்பொழுதைய சூழ் நிலைக்கு அப்படியே பொருந்தி வரவேண்டும் என்பது இயலாத காரியம். எனவே அது எழுதப்பட்ட சூழ் நிலை மற்றும் காலம் இவற்றை கொண்டு பார்க்கும் பொழுது தற்காலத்திற்கும் ஏற்ற வகையில் காணப்படும் பல விஷயங்களும் எழுதபட்டிருக்கும் இந்த நூல் ஒரு அற்புதமான நூல் என்றே கூறலாம்.
புராணங்கள்:
இறைவனது அற்புதங்களைப் பற்றி வழிவழியாக சொல்லப்பட்டு வந்த கதைகளின் தொகுப்பே புராணங்கள் ஆகும்.முதன் முதலில் இப்புராணங்களை வியாச முனிவர்தான் தொகுத்தளித்தார்.புராணங்கள் அனேகம் இருந்தாலும் மகா புராணங்கள் என்று சொல்லப்படுகின்ற் பதினெட்டு புராணங்கள் சிறப்புடையதாக கருதப்படுகிறது.சிவ புராணம், பாகவத புராணம், நாரத புராணம், மார்கண்டேய புராணம்,அக்னி புராணம்,பௌஷ்ய புராணம்,பிரம்ம வைவர்த்த புராணம்,லிங்க புராணம்,வராக புராணம்,ஸ்கந்த புராணம்,வாமண புராணம்,குமார புராணம்,மத்ஸ்ய புராணம்,கருட புராணம் மற்றும் பிரம்மனந்த புராணம் ஆகியவை இந்த பதினெட்டு புராணங்கள் ஆகும். அக்னி புராணத்தில்தான் வாஸ்து சாஸ்திரம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.பிரம்மானந்த புராணத்தில்தான், லலிதா சகஸ்ர நாமம் இடம் பெற்றுள்ளது.கருட புராணத்தில் இறப்பிற்கு பின்னான வாழ்வு பற்றி விளக்கப்பட்டுள்ளது.மார்கண்டேய புராணத்தில்தான் தேவி மஹாத்மியம் இடம் பெற்றுள்ளது.இந்த புராணங்களை தவிர உப புராணங்கள், ஸ்தல புராணங்கள், குல புராணங்கள் என்று எண்ணற்ற புராணங்கள் உண்டு.
பகவத் கீதை
பகவத் கீதை மஹா பாரதத்தில் பீஷ்ம பர்வத அத்தியாயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் முதன்மையான புனித நூலாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதிகளுக்குமிடையே நடந்த குருஷேத்திர யுத்ததின் போது , பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கப்பட்டதே பகவத் கீதை ஆகும். எதிரில் நிற்கும் தன் சகோதரர்களை எவ்வாறு எதிர்த்துப் போரிடுவது என அர்ச்சுனன் குழம்பியபோது அவனையும் அவன் வாயிலாக மனித குலத்தையும் தெளிவிக்கவும் ஸ்ரீ கிருஷ்ணரால் உபதேசிக்கப்பட்டது பகவத் கீதையாகும். இது 18 அத்தியாயங்களையும் 700 ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது.பகவத் கீதை, வேதங்கள் மற்றும் உபனிஷத்களின் சாராம்சம் என்று கூட சொல்லலாம். கடவுள், ஆன்மா, பிரபஞ்சம், தர்மா, காலம் இவற்றைப் பற்றி பகவத் கீதை விரிவாகப் பேசுகிறது. ஆன்மா அழிவற்றது என்பதைப் பகவத் கீதை எடுத்து இயம்புகிறது. இறப்பு என்பது உடலுக்குதானே தவிர ஆன்மாவிற்க்கு அல்ல. மனிதர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஒழுக்கமுடன் ஆற்றவேண்டும். கடமையை கால நேரம் பாராமலும் பலனை எதிர் நோக்காது செய்யவேண்டும்.அவ்வாறான வாழ்க்கை அமையும்போதுதான், வாழ்க்கை நிலையானதாகவும், மகிழ்வானதாகவும் அமையும். இறுதியில் ஞானமும் பிறக்கும் என பகவத் கீதை வலியுறுத்துகிறது.இந்த உலகில் அதர்மம் தலை தூக்கி தர்மம் அழியும் நிலைக்கு ஆளாகும்போதெல்லாம் இறைவன் அவதாரம் நிகழ்ந்து நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் எனவும் பகருகிற்து.மிகப் பெரிய தத்துவங்களை உள்ளடக்கிய பகவத் கீதை ஒவ்வொரு இந்துவாலும் கற்கப்படவேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது.
இவ்வாறு இந்து மதப் புனித நூல்கள் எண்ணற்றவையாகும். இவை பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில் இருந்தாலும், இந்தியாவில் பேசப்படும் அத்தனை மொழிகளிலும் இந்துக்களின் புனித நூல்கள் ஏராள்மாய் உள்ளது.
இந்து மதம் வேறு சில மதங்களைப் போல ஒரு நூல்,ஒரு தூதர் அடிப்படையில் அமைந்தது அல்ல
பதிலளிநீக்கு