புதன், 25 மே, 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-4

சாத் தர்ஷனாஸ் - ஆறு தத்துவங்கள்

மதங்கள் உண்மையைத் தேடுவதற்கும் அதனை த்யானித்து அதன் மூலம் பிறவி சுழற்ச்சியிலிருந்து விடுபடுவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டன என இந்து மதம் நம்புகிறது. அறிவை கூர்மையாக்கி ஆன்மாவின் உண்மையான இயல்பு ,கடவுள், பிரபஞ்சத் தோற்றம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக சிந்தித்து உண்மையான ஞானத்தை எடுத்து சொல்லும் வகையில் இந்து மத ஞானிகள் அருமையான, அற்புதமான பல தத்துவங்களை நமக்கு அளித்து விட்டு போயிருக்கிறார்கள்.அவற்றுள் சிறப்பானதாக கருதப்படும் ஆறு தத்துவங்கள் சாத் தர்ஷனாஸ் என்று அழைக்கப்படுகின்றன. வைஷேஷிகா,ந்யாயா, சாங்கியா, யோகா, மீமாம்ஸா மற்றும் வேதாந்தா என்பவையே இந்த தத்துவங்கள் ஆகும். வைஷேஷிக்கா தத்துவம் கனடா முனிவராலும், ந்யாயா தத்துவம் கௌதம முனிவராலும், சாங்கியா தத்துவம் கபில முனிவராலும், யோக தத்துவம் பதஞ்சலி முனிவராலும் மீமாம்ஸ தத்துவம் ஜைமினி முனிவராலும் வேதாந்தம் வியாச முனிவராலும் தொகுத்து அருளப்பட்டது. வேதங்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த ஆறு வகை தத்துவங்களும் அவற்றிற்கு இடையே காணப்படும் சில ஒற்றுமைகளின் காரணமாக மூன்று பிரிவுகளாய் அறிஞர்களால் பிரிக்கப்பட்டுள்ளது.வைஷேஷிகா மற்றும் ந்யாயா இரண்டும் ஒரு வகையாகவும், சங்கியா மற்றும் யோகா ஒரு வகையாகவும் மீமாம்ஸா மற்றும் வேதாந்தா மற்றொரு வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தத்துவங்களின் காலம் சரியாக கணிக்கப்படவில்லை. எழுத்தறிவு தோன்றுவதற்கு முன்னேரே தோன்றிய இந்த தத்துவங்கள் , குரு தன் சீடர்களுக்கு வாய் மொழியாக கற்பித்து வழிவழியாக காப்பற்றப்பட்டு வந்திருக்கின்றன. இதன் காரணமாகவே இந்த சூத்திரங்கள் எளிதில் மனனம் செய்யும் வகையில் மிக சிறியதாக அமைக்கப்பட்டுள்ளன.

வைஷேஷிகா

வைஷேஷிகா ந்யாயாவிற்கு முன்னரே அருளப்பட்டதாகும். எனினும் தற்கால நடைமுறைக்கு மாறுபட்டிருப்பதால் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

ந்யாயா

ந்யாயா என்ற சொல்லுக்கு ஒன்றைப் பற்றி அறிதல் என்பது பொருளாகும்.எந்தவொன்றை பற்றியும் உண்மையான ஞானம் பெற தர்க்க ரீதியாக அணுகுவதே ந்யாயா தத்துவத்தின் சிறப்பாகும். இதன் காரணமாகவே இது தர்க்க வித்யா எனவும் வாத வித்யா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு தத்துவங்களுமே காலம், வெளி, பூமி, மனம், ஆனமா மற்றும் பிரபஞ்சம் இவைகளுக்கான காரணம் இவற்றை பற்றி விரிவாக அறிய முற்படுகின்றன. இரண்டு தத்துவங்களுமே ஒரு முழு முதற் கடவுள், எண்ணற்ற ஆன்மாக்கள் , அணுக்களால் அமைக்கப்பட்டுள்ள பிரபஞ்சம் இவற்றைதான் வலியுறுத்துகின்றன. கடவுளால்தான் உலகம் படைக்கப்பட்டதாக இந்த தத்துவங்கள் அறிவிக்கின்றன.

ஞானம்:

ப்ரேமயா என்றழைக்கப்படும் கீழ் கண்டவற்றை பற்றி உண்மையான ஞானம் பெறுதல் அவசியம் என ந்யாயா வலியுறுத்துகிறது.

1)ஆன்மா 2) உடல் 3)இந்திரியங்கள்4)அர்த்தா எனப்படும் இந்த்ரிய உணர்வுகள் 5)புத்தி 6)மனம் 7) செயல்பாடு 8) தோஷம் 9) மாற்றம் 10) பலன் 11)துக்கம் 12) முக்தி

இவற்றை பற்றிய உண்மையான ஞானத்தை எவ்வாறு பெறுவது?

இவற்றைப் பற்றி மட்டுமல்லாது எந்தவொன்றைப் பற்றி ஞானம் பெற வேண்டுமானால் கண்ணுக்கு நேரே தெரியும் விஷயங்கள்(ப்ரதக்ஷா), அந்த விஷயங்களைப் பற்றி யூகித்து அறிதல்(அனுமானா) , கிடைத்த விஷயங்களைஒப்பிட்டு அறிதல்(உபமானா) வேறு வகையான வாய் மொழி ஆதாரங்கள்(சப்தா) ஆகியவற்றை ஆய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதுதான் இந்து மதத்தின் சிறப்பு என்று கூட சொல்லலாம். எவர் சொல்லுவதையும் அப்படியே ஏற்று கொள்ளாமல் ஒவ்வொருவரும் தங்கள் அறிவு மற்றும் அனுபவ துணை கொண்டு ஞானம் பெற வேண்டும் என்றுதான் இந்து மத தத்துவங்கள் வலியுறுத்துகின்றன.

கடவுள், ஆன்மா மற்றும் பிரப ஞ்சம்

மனிதனுடைய செயல்களே அதற்கேற்ற பலன்களை அவனுக்கு அளிக்கிறது.இதனை அதிர்ஷ்டா என்றழைக்கும் ந்யாயா, இந்த அதிர்ஷ்டா கடவுளின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக தெரிவிக்கிறது. மனிதனை தனது கட்டுப்பாடில் வைத்திருக்கும் அதிர்ஷ்டா,கடவுளின் கட்டளைபடியே இயங்குகிறது.கடவுள் அதிர்ஷ்டாவின் போக்கை மாற்றுவதில்லை.ஆனால் அவன்தான் அதனை இயக்குகிறான்.கடவுளே மனிதனுடைய செயல்களுக்கான பலன்களை அதிர்ஷ்டா மூலம் அளிக்கிறான். கடவுள் நீக்கமற நிறைந்த, உலகை கட்டுபடுத்தும் ஓர் அற்புத சக்தி என ந்யாயா கருதுகிறது. கடவுள் ஒருவனே, அவனே உலகை படைத்து இயக்குவதாக ந்யாயா நம்புகிறது.

ஆன்மா உண்மையானது, அழிவற்றது. நான் என்று எதை குறிப்பிடுகிறோமோ அதுவே ஆன்மா.ஆன்மா என்று ஒன்றில்லாமல் கண்ணால் பார்க்க முடியாது, காதால் கேட்க முடியாது. ஒரு காட்சியை நாம் பர்த்த பின், இரண்டு கண்களும் குருடானாலும், நான் அதை பார்த்தேன் என்ற ஞானம் நம்மில் தேங்கி நிற்கும். அது தேங்கி நிற்குமிடமே ஆன்மா. மூளை என்பது ஆன்மா அல்ல. அது ஆன்மாவின் ஒரு கருவியே.உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவற்றதாக இருக்கும். கடவுள் ஒன்றுதான் ஆனால் ஆன்மா எண்ணற்றவை ஆகும்

பிரபஞ்சம் என்பது நிலைத்து நிற்கக் கூடிய மாற்றம் செய்ய முடியாத காரணங்களற்ற அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பூமி(ப்ரிதிவி), நீர்(அபாஸ்), நெருப்பு(தேஜஸ்).மற்றும் வாயு ஆகியவற்றின் அணுக்களின் சீரமைப்பே பிரபஞ்சம்(பராமனஸ்)

முக்தி அல்லது விடுதலை

தவறான ஞானமே அனைத்து துன்பங்களுக்கும் காரணம். தவறான புரிதல் காரணமாகவே விருப்பு வெறுப்பு உண்டாகிறது.அதன் காரணமாகவே செயல்கள் ஏற்ப்படுகிறது. அந்த செயல்களுக்கு உரிய பாராட்டு அல்லது தண்டனை பெறவே பிறப்பு இறப்பு மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இந்த பிறப்பு இறப்பு காரணமாக எல்லை இல்லா துன்பம் ஏற்படுகிறது.தவறான ஞானம் தவிர்த்து உண்மையான ஞானம் அடையும் பொழுது முக்தி என்னும் விடுதலை கிடைக்கிறது.

உண்மையான ஞானத்தை எவ்வாறு பெறுவது

முதலில் ஞானம் பெற வேண்டிய பொருளைப் பற்றிய சந்தேகம் எழ வேண்டும்.பின்னர் அந்தப் பொருளைப் பற்றி என்ன காரணத்திற்காக அறிய வேண்டும் என்பது குறித்து தீர்மானம் செய்ய வேண்டும். பின்னர் இந்த பொருள் குறித்து முன்னர் உள்ள கருத்துக்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். இந்த பொருள் குறித்து அறிந்த அறிஞர்களுடன் விவாதித்து, பொருளின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்யப்படும் விவாதங்களினால் உண்மையான ஞானம் பிறக்கும்.

அபவர்க்கா என்னும் முக்தி

ஆன்மா ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலில் மறு பிறவி எடுப்பதே , தனது செயல்களுக்கான சந்தோஷத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கத்தான். இத்தகைய துன்பங்களில் இருந்து விடுபடுவதை அபவர்க்கா என்று அழைக்கிறது ந்யாயா. முக்தி என்பது துன்பங்களிலிருந்து விடுபட்டு இன்பத்தை அனுபவிப்பது அல்ல. பற்றிலிருந்து விடுபடுவதே உண்மையான முக்தியாகும். முக்தி அடையும்போது ஆன்மாவிற்கும் மனதிற்குமான தொடர்பு முற்றிலும் அறுந்து போகும்.ந்யாயா தத்துவவாதிகளுக்கு முக்தி என்பது ஓர் அர்த்தமற்ற சொல்.அது ஒருவலியில்லாத நிலை. உணர்வுகளும் ஆர்வமும் இல்லாத கல்லைப் போன்றதோர் நிலை. இதுவே ந்யாயாவின் மைய கருத்தாகும்.

யோகாவும் சாங்கியாவும்

சாங்கியா என்பது பதஞ்சலி முனிவரின் யோகாவின் தத்துவ விளக்கமாகவே அமைந்துள்ளது. எனவேதான் இந்த இரண்டு தத்துவங்களும் ஒன்றாக வகை படுத்தப்படுகிறது. இலக்கை அடைவதர்கான முறையான பயிற்சியே யோகமாகும். சாங்கியா என்பது உண்மையை பகுத்தறிவுடன் ஆராய்வதாகும். பதஞ்சலி முனிவரின் யோகா இன்று உலகளவில் அனேக நாடுகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. யோகாவை ஒரு தகுதியான குருவின் மூலம் பயின்று, முறையான கடுமையான பயிற்சி மூலம் முக்தி அடையலாம். சாங்கியா என்பது யோகாவின் தத்துவ விளக்கமாக அமைந்துள்ளதால் அதனைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

இந்த தத்துவம் நவீன அறிவியலுடன் ஒத்து போவதால் பல மேல் நாட்டுஅறிஞர்களால் பாராட்டப்பெறுகிறது.தன்னைதானே அறியும் ஆன்மா மற்றும் அதனால் அறியப்படும் மற்றவை , இவை மட்டுமே உண்மையானவை. தன்னையறியும் ஆன்மாவை புருஷா எனவும் பிரபஞ்சத்தை தோற்றுவித்த மூலத்தை ப்ரக்ரிதி எனவும் சாங்க்யா குறிப்பிடுகிறது. இவை இரண்டுமே ஆரம்பமும் முடிவும் அற்றவை. இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை அறியாமையினால்தான் பிறப்பு இறப்பு உண்டாகிறது.இவை இரண்டையும் வேறுபடுத்தி அறியும்போது முக்தி உண்டாகிறது.

கடவுள் மறுப்பு

சாங்கியா, நிர் ஈஸ்வர சாங்கியா (கடவுள் இல்லை) என்றும் அழைக்கப்படுகிறது. கடவுள் என்னும் ஒரு படைப்பாளி இருக்கவேண்டிய அவசியத்தை, சாங்கியா நிராகரிக்கிறது. பிரபஞ்ச படைப்புகள் அனைத்தும் ப்ரக்ரிதியிலிருந்து உருவாகியதென்றும்,வேறு எந்த சக்தியுடனும் அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என சாங்கியா ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகம் இயங்குவதற்கு கடவுள் போன்று ஒரு அறிவு ஜீவி தேவை இல்லை எனவும், கண்காணிப்பாளராகக் கூட யாரும் இல்லை என்றும் சாங்கியா கருதுகிறது. ஆனால் இக்கருத்தை வேதாந்தங்கள் ஏற்பதில்லை.

படைப்பும் அழிப்பும்

ஒன்றுமில்லாததிலிருந்து எதையும் உருவாக்க முடியாது. அது போலவே இல்லாத ஒன்றை ஒரு படைப்பாளியால் வெளி கொணர முடியாது. எண்ணை இல்லாத கடலையை செக்கில் இட்டு ஆட்டுவதால் ஒன்றும் நிகழ்வதில்லை. கடலையில் எண்ணை இருப்பதால்தான் அறைக்கும்பொழுது எண்ணை கிடைக்கிறது. ஆட்டும்பொழுது எண்ணை கிடைப்பதால்தான் எண்ணை இருந்தது நிரூபணமாகிறது. அதைபோலவே எண்ணை அந்த கடலையில் இருந்துதான் கிடைத்தது என்பதும் நிரூபணமாகிறது. ஒரு சிறிய விதையிலிருந்து எப்படி ஆலமரம் உருவாகிறதோ அதைபோலத்தான் முன்பிருந்த ஒன்றிலிருந்துதான் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டதாக சாங்கியா வலியுறுத்துகிறது.

ப்ரக்ரிதி என்று அழைக்கப்படும் மூலம்தான் உலகம் தோன்றுவதற்கு முதல் காரணமாய் அமைகிறது. இதுவே அனைத்திற்கும் ஆணிவேர். இதிலிருந்துதான் புத்தி, அகங்காரம் மற்றும் வேறு நுண்ணிய உணர்வுகள் எல்லாம் தோன்றின. இந்த உணர்வுகள் காரணமாக உலகில் மூன்று விதமான துன்பங்கள் ஏற்படுகிறது. அத்யத்மிகா என அழைக்கப்படும் ஜுரம் போன்ற உடல் நோய்கள் காரணமாக ஏற்படும் துன்பங்கள்,அதிதைமிகா என அழைக்கப்படும் இடி,மின்னல், மழை போன்ற இயற்கையினால் வரும் துன்பங்கள், அதிபொடிகா என் அழைக்கப்படும் மிருகங்கள் மற்றும் விஷ ஜந்துகளால் ஏற்படும் துன்பங்கள் இவைகள் எல்லாம் யோக சாதனை செய்து முக்தி அடைவதற்கு இடையூறாக உள்ளவை. எனவே இவை எல்லாவற்றையும் கடந்து யோக சாதனை செய்பவர்கள் முக்தி அடையலாம்

ப்ரக்ரிதி

இதுவே பிரபஞ்ச படைப்பிற்கு மூல காரணம். இது அசைவற்றது. காரணமற்றது. எங்கும் நிறைந்தது. சுயேட்சையானது. தன்னுள் அடங்கிய சத்வ, ரஜஸ், மற்றும் தமஸ் என்னும் மூன்று குணங்களை மட்டுமேசார்ந்துள்ளது. இந்த மூன்று குணங்கள் ஒவ்வொரு உயிரினிலும் அமையப்பெறுகிறது. சத்வ குணம் ஓங்கி நிற்கும்போது மனிதன் அமைதியானவனாகவும் த்யானிப்பவனாகவும் காணப்படுகிறான். ரஜஸ் ஓங்கியிருக்கும்போது உலகாயா காரியங்களில் தன்னை ஈடுபடுத்திகொள்கிறான். தமஸ் மேலொங்கும்போது சோம்பேறியாகவும் செயலற்றவனாகவும் காணப்படுகிறான். இந்த குணங்களைப் பற்றி பகவத் கீதையும் விரிவாகப் பேசுகிறது. ப்ரக்ரிதியில் மாற்றம் ஏற்படும்பொழுது அதன் சமன் நிலை பாதிக்கப்பட்டு ஒரு இயக்கம் உண்டாகிறது. அந்த இயக்கத்தின் காரணமாகவே உலகம் உண்டானது. இறைவன் என்று சொல்லப்படும் எந்தவொரு அறிவு ஜீவியாலும் உலகம் படைக்கப்படவில்லை.

புருஷா என்னும் ஆன்மா

ஆன்மா என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டு, இயற்கையின் தொடர்பு அற்று உள்ளது.ஆன்மாவிற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை. அதற்கென்று தனி அடையாளங்கள் எதுவுமில்லை. ஆன்மா காரியம் ஆற்றுவதில்லை. சாட்சியாக மட்டுமே இருக்கிறது. ஆன்மாவிற்கு வண்ம் இல்லை. அது அழிவற்றது. எவ்வளவு பிறவி எடுத்தாலும் ஆன்மா மாற்றம் அடைவதில்லை. இயற்கையின் நிகழ்வுகளை கவனிப்பது மட்டுமே ஆன்மாவின் செயல். அந்த நிகழ்வில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாது.

மீமாம்ஸா மற்றும் வேதாந்தா

மீமாம்ஸா என்றால் ஆய்ந்து அறிவது என்று பொருள். மீமாம்ஸா வேதத்தின் கர்ம காண்ட சட்ங்குகளைஆராய்கிறது. வேதாந்தம் வேதங்களின் ததுவார்த்தத்தை அறிய முற்படுகிறது. எனவேதான் இவை இரண்டும் ஒன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளது. வேதத்தின் ஆரம்பக்கால ஆய்வினை பூர்வ மீமாம்ஸா எனவும் பிற்கால ஆய்வினை வேதாந்தம் என்றும் அழைக்கிறார்கள்.

வேதாந்தா

உபனிஷத்துக்கள் எனவும் ப்ரம்ம சூத்ராஸ் எனவும் அழைக்கப்படும் வேதாந்தா சாங்கியா தத்துவத்தின் பல கூறுகளை தன்னிடத்தில் கொண்டாலும் பல வேறுபாடுகளையும் கொண்டிருக்கிறது. ஆன்மா என்பது ஒன்றுதான் அது அவித்தையின் காரணமாக பலவாக தோற்றமளிக்கிறது. கடவுள் எல்லையற்றவர். அவன் ஒவ்வொரு உயிரிடத்திலும் ஆன்மாவக உறைகிறான். ஆன்மாவிற்கு பிறப்பு இறப்பு இல்லை. உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆன்மாவை பாதிப்பதில்லை. மனித வாழ்க்கையின் குறிக்கோளே நம்முள் இருக்கும் ஆன்மாவை அறிவதே. இது முடிகின்ற காரியம் மட்டும் அல்ல, தவிர்க்கப்படக்கூடாத காரியமும் ஆகும்.

மாயா தத்துவம்

உயிர்களின் உண்மையான குணமே தெய்வீகமானதுதான். நாம் கடவுளாக மாற வேண்டியது இல்லை. நாமே கடவுள்தான்.ஆனால் நம்முள் இருக்கும் தெய்விக சக்தி நமக்கு ஏன் புலப்படுவதில்லை?நம்முடைய அறிவை அறியாமை என்னும் மாயை மறைத்து கொண்டிருப்பதால்தான் நம்மால் நம்மிடம் உள்ள தெய்விக சக்தியை உணர முடிவதில்லை. ஆன்மா ஒன்று மட்டுமே நிரந்தரமானது. அதன் பின்னணியிலேயே நமது செயல்கள் அனைத்தும் நடைபெறுகிறது, நாம் நம்மை உடல், மனம் மற்றும் தன்முனைப்பு ஆகிய உண்மையில்லதவற்றுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.நம் ஆன்மாவோடு அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இந்தத் தவறான அடையாளப்படுத்துதல் காரணமாகத்தான் நாம் வியாதி,முதுமை இறப்பு போன்றவற்றை கண்டு அஞ்சுகிறோம். தன்முனைப்போடு நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளும் போது விருப்பு, வெறுப்பு கோபம் என பல துயர்களுக்கு ஆளாகிறோம். ஆனால் இது எதுவும் நம்முடைய ஆன்மாவை களங்கப் படுத்துவதில்லை. கதிரவனை மறைக்கும் மேகம் போல் நம்முடைய மாயை என்னும் அறியாமை ஆன்மாவை நம்மிடமிருந்து மறைக்கிறது. மேகம் விலகி கதிரவன் பிரகாசிப்பது போல் மாயை நீங்கினால் நமது ஆன்மா சுடர் விட்டு பரிசுத்தமாக ஜொலிக்கிறது. நம்முடைய உண்மையான தன்மையின்மீது த்யானம் செய்தும்,நல்ல செயல்களை தொடர்ந்து செய்து வரும்போதும் மாயை நீங்கி நம்முடைய ஆன்மாவை நாம் அறிய முடியும். இவ்வாறு ஆன்ம சுத்தி ஏற்படும் பொழுது மாயை என்னும் மேகங்கள் விலகி ஆன்மா சுடர் விட்டு பிரகாசிக்கும் என்பதே வேதாந்தாவின் மைய கருத்தாகும்

கர்மாவும் மறு பிறவியும்

ஏன் நல்லவர்கள் துன்புறுகிறார்கள்?ஏன் தீயவை நிகழ இறைவன் அனுமதிக்கிறான்?இவற்றையெல்லாம் கட்டுபடுத்தும் சக்தியற்றவனா இறைவன் போன்ற கேள்விகள் ஒவ்வொரு ஆன்மீக வாதியிடமும் எழக்கூடும்.. மனிதனுடைய நன்மை தீமைகளுக்கு அவனே காரணமாகிறானே தவிர இவற்றிற்கெல்லாம் இறைவன் காரணமில்லை என வேதாந்தா வாதிடுகிறது. நம்முடைய முற்பிறவியின் செயல்களே , நம்முடைய இந்தப் பிறவியின் பலனாக கிடைக்கிறது. இதுவே கர்ம பலன் என்று குறிப்பிடப்படுகிறது. மனிதன் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதே தன்னுடைய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கவே என வேதாந்தம் சுட்டிகாட்டுகிறது.

ஒருமைப்பாடு

ஒருமைப்பாடே வேதாந்தத்தின் சிறப்பு மிகு தத்துவமாகும். நாம் எதை காண்கிறோமோ எதை அனுபவிக்கிறோமோ அவை அத்தனையும் இறைவனாலேயே படைக்கப்பட்டது.நம்மிடம் உள்ள அதே ஆன்மாதான் அனைத்து உயிரினங்களிலும் இருக்கிறது.அது இல்லாத இடமே இல்லை. எனவே இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவுமில்லை. ஆண்டான் அடிமை என்று எதுவுமில்லை. இந்த தத்துவம் கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறை படுத்துதல் அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. வானம், பூமி, மரம் செடி கொடி இவை அனைத்திலும் நம்மிலும் இருப்பது ஒரே ஆன்மாதான். புழு பூசி போன்று அனைத்து உயிரினங்களில் இருப்பதுவும் அதே ஆன்மாதான். மனிதர்களில் நாம் சிலரை தாழ்த்தியும் சிலரை உயர்த்தியும் பேசுகிறோமே, இவர்கள் அத்தனை பேரிலும் இருப்பதுவும் அதே ஆன்மாதான். இதை நாம் உணர்வோமானால் அத்தனை உயிர்களிடத்தும் அன்பு பிறக்கும். உன்னில் இருப்பதும் என்னில் இருப்பதும் ஒரே ஆன்மா என்ற ஞானம் ஏற்பட்ட பின் அங்கு உயர்வு தாழ்வு எவ்வாறு தோன்றும்?

இதைத்தான் ஈஷா உப நிஷத் " ஆன்மா என்பது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. யார் ஒருவர் அனைத்து உயிரினங்களிலும் தன்னுடைய ஆன்மாவையும்,தன் ஆன்மாவில் அனைத்து உயிரினங்களை காணமுடிகிறதோ அவரால் எப்படி மற்றவர்களை வெறுக்க இயலும்" என வினவுகிறது. நீ வேறு நான் வேறு என்ற நினைவே அனைத்து துன்பங்களுக்கும் காரணமாகிறது. இதைத்தான்" இரண்டாவதிலிருந்து ஏற்படும் அச்சம் "என்று வேதாந்தம் குறிப்பிடுகிறது.நாம் மற்றவர்களை காட்டிலும் சிறிது வேறு பட்டவர்கள் என்ற நினைவே அனைத்து துன்பங்களுக்கும் காரணமாகிவிடுகிறது. அனைத்து உயிரினங்களிலும் ஒரே ஆன்மாதான் உறைகிறது என்ற ஞானம் எற்பட்டால் , இன்பம் மேலோங்கும்.

தர்ஷனாஸ் என்னும் தத்துவங்கள் மிகவும் அற்புதமானவையாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய இந்து ஞானிகள் எவ்வளவு சிந்தனையாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை இவற்றை கொண்டே அறியலாம்.மேலும் இந்து மதத்தில் எந்த கருத்தும் எவர் மீதும் திணிக்கப்படுவதில்லை என்பதற்கும் அவரர் சிந்தனைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிப்பதற்கு முழு உரிமையும் உண்டு என்பதை இந்த தத்துவங்களின் மூலமே அறியலாம். இங்கு அந்த தத்துவங்களின் மைய கருத்துக்களில் சிலவற்றை மட்டுமே தந்திருக்கிறேன். இந்த தத்துவங்களை முழுமையாக விளக்கினால் ஒவ்வொன்றும் ஒரு பெரிய நூலாக விரியும். இங்கு இந்த தத்துவங்களின் அறிமுகம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த தத்துவங்களை முழுமையாக படித்து பயன் பெறலாம். இந்த தத்துவத்தின் சிறப்பினை உணர்ந்தே ஜெர்மானிய மார்க்க அறிஞர் மேக்ஸ் முல்லர் என்பவர் " இந்து மத தத்துவங்கள் அனைத்தும் மாணிக்க கற்கள்" எனப் பாராட்டியிருக்கிறார். இந்துக்களாக பிறந்த நாம் அனைவரும் இந்த தத்துவங்களை கற்பதோடு , இவை நம்முடைய தத்துவங்கள் என்பதில் நிச்ச்யம் பெருமை கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக