செவ்வாய், 21 ஏப்ரல், 2015

கொ.வை.அரங்கநாதனின் ஆன்மிகச் சாலை: அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 3

எதிரிகளிடமிருந்து காக்கும் இறைப்பதிகம்

திருஞானசம்பந்தர் தனது திருத்தல யாத்திரயின் பொருட்டு மதுரை நகருக்கு சென்று ஒரு மடத்தில்  தங்கியிருந்தார்.மதுரை மன்னன் கூன் பாண்டியன் சமண சமயத்தை தழுவியதோடு சமணர்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்சி செய்து வந்தான்.இதனை பயன்படுத்தி சமணர்கள் சைவ சமயத்தை முற்றிலும் அழிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருந்தனர். நாடெங்கிலும் சைவ சமயத்தை திரும்ப தழைத்தோங்க செய்து கொண்டிருக்கும் திருஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கிறார் என தெரிய வந்ததும் அவரை எப்படியேனும் அழித்துவிட என்ணிய சமணர்கள் அவர் தங்கியிருந்த மடத்திற்கு இரவு நேரத்தில் தீ வைத்துவிட்டனர். இதனால் அச்சமுற்ற சம்பந்தரோடு தங்கியிருந்த சைவர்கள் அவரிடம் முறையிட்டனர். இது சமணர்களால்தான் நிகழ்த்தப்பட்டது என இறையருளால் தெரிந்து கொண்ட சம்பந்தர், சமணர்களைப் பற்றி பாண்டிய மன்னனுக்கு புரிய வைக்க வேண்டி இந்தத் தீ மெதுவாக சென்று பாண்டிய மன்னனை பற்றட்டும் என இறைவனை வேண்டி இப்பதிகத்தை அருளினார்.அருளினால் விளைந்தப் பதிகம் அல்லவா?  அந்தத் தீயும் பாண்டிய மன்னன் உடலுக்குள் சென்று வெப்பு நோயை கொடுத்தது. அதன் பிறகு நடந்தவற்றை அடுத்தப் பதிகத்தில் பார்க்கலாம்.எதிரிகள் தரும் இன்னல்கள் நம்மை தீண்டாதிருக்க இப்பதிகத்தை தொடர்ந்து படித்து வந்தால் எதிரிகள் கொடுத்து கொண்டிருக்கும் தொல்லைகளில் இருந்து நிச்சயமாக விடுபடலாம்.

செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
     பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!      

சித்தனே! திரு ஆலவாய் மேவிய
அத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே

தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!

சிட்டனே! திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே! “அஞ்சல்!” என்று அருள்
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!

தஞ்சம்!” என்று உன் சரண் புகுந்தேனையும்,
“அஞ்சல்!” என்று அருள், ஆலவாய் அண்ணலே!
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!  

செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
அங்கணா! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!  


தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! 

தாவினான், அயன்தான் அறியா வகை
மேவினாய்! திரு ஆலவாயாய், அருள்
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே

எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே. 

     
       




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக