வியாழன், 23 ஏப்ரல், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 4


மண வாழ்வு காக்கும் மந்திரம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது  திருமருகல் என்னும் தலம். இத்தலத்தில் தான் திருமணம் செய்ய நினைத்திருந்த வாலிபனை பாம்பு தீண்ட செய்வதறியாது அழுது கொண்டிருந்த நங்கையை கண்ட திருஞானசம்பந்தர் , அவளது நிலை கண்டு இரங்கி இப்பதிகத்தைப் பாடி அவனை உயிர்ப்பித்தார். பின்பு இருவருக்கும் திருமணம் செய்து வாழ்த்தியருளினார்.இறையருளினால் விடந்தீர்த்தம் இப்பதிகம் ஒரு ஆன்மீக அற்புதம் அன்றோ? விடந்தீர்ப்பது மட்டுமன்றி மங்கையரின் மண வாழ்வில் ஏற்படும் இன்னல்களை இப்பதிகம் தீர்ப்பதுடன் மணமாகாதப் பெண்களுக்கு இப்பதிகப் பாராயணம் மிகப் பெரிய நன்மையை அளிக்கிறது என்பது அனுபவ உண்மையாகும்,

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.

சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.

அறையார் கழலும் மழல்வா யரவும்
பிறையார் சடையும் முடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே

ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.

துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்ட முடையாய் மருகல்
  கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே

பலரும் பரவப் படுவாய் சடைமேல்
  மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே

வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே

இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலராக் கினையே.

எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததோர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே

அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே.

வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக