செவ்வாய், 21 ஏப்ரல், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 3


கடல் கடந்தோரின் துயர் நீக்கும் பதிகம்

ஞானசம்பந்தர், பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கச் செய்து, சோழ நாட்டில் கொள்ளம்பூதூருக்கு வருகை தந்தபோது முள்ளியாற்றில் வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. ஓடஞ் செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களைக கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர். அங்கு வந்த ஞானசம்பந்தர், அவ் ஓடங்களுள் ஒன்றினை அவிழ்த்து நாவினையே ஓடக் கோலாகக் கொண்டு "கொட்டமே கமழும்" எனத் தொடங்கும் பதிகம் பாடி மறுகரையை அடைந்தார். இறைவன் காட்சிதர, தரிசித்து, ஆலயத்தை அடைந்து போற்றிப் பதிகத்தை நிறைவு செய்து வழிபட்டார். (இவ்வற்புதம் இன்னும் இத்தலத்தில் 'ஓடத் திருவிழா 'வாக ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது)ஒவ்வொரு பதிகத்தின் மூன்றாம் வரியில் செல்ல உந்துக சிந்தையார் தொழ என்ற வரிகள் ஓடத்தை செலுத்தும் துடுப்பின் அசைவாய் அமைந்திருப்பது அற்புதம்.. கடல் கடந்து வாழும் பக்தர்கள் இப்பதிகத்தை தினந்தோறும் உள்ளம் உருக  ஓதும்போது அங்கு ஏற்படும் பிரச்சனைகள் அகல்வதாய் பெரிதும் நம்பப்படுகிறது

கொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

கோட்ட கக்கழ னிக்கொள்ளம் பூதூர்
நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

குவளை கண்மல ருங்கொள்ளம் பூதூர்த்
தவள நீறணி தலைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


கொன்றை பொன்சொரி யுங்கொள்ளம் பூதூர்
நின்ற புன்சடை நிமலனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

ஓடம் வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


ஆறு வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

குரக்கி னம்பயி லுங்கொள்ளம் பூதூர்
அரக்க னைச்செற்ற ஆதியை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


பருவ ரால்உக ளுங்கொள்ளம் பூதூர்
இருவர் காண்பரி யான்கழ லுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


நீர கக்கழ னிக்கொள்ளம் பூதூர்த்
தேர மண்செற்ற செல்வனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


கொன்றை சேர்சடை யான்கொள்ளம் பூதூர்
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
இன்றுசொன் மாலைகொண் டேத்த வல்லார்போய்
என்றும் வானவ ரோடிருப் பாரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக