செவ்வாய், 7 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 30


உண்மையான பக்தி இல்லையாயினும் இறையருள் பெற்றுத் தரும் பாசுரம்

உண்மையான பக்தி உணர்வு இல்லாதவர்களும்  இறையருள்  பெற வேண்டியும்  பக்தி உணர்வு பெருகி வளரவும் இறையருளால் நம்மாழ்வாரால் பாடப்பெற்றது இப்பாசுரம். இப்பாசுரப் பாராயணம் அனைவருக்கும் அளப்பற்ற நன்மைகளை அளிக்கக் கூடிய வல்லமை உடையதாம்.

கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று 
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி 
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்? 
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே             
 
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே 
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல 
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான் 
வானே மா நிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே             

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி 
வள்ளல் மணிவண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் 
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன் 
வெள்ளத்து அணைக்கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே?             
 
என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் வாசகங்கள் சொல்லியும் 
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து 
நின்கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன் 
என்கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே             
 
கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை 
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு 
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால் 
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே             
 
புறம் அறக் கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும் 
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டொழிந்தேன் 
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக்கண் 
அறம் முயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே             
 
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ் இடத்தான்? யான் ஆர்? 
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் 
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலைபூசல் இட்டே 
மெய்ம் மால் ஆயொழிந்தேன் எம்பிரானும் என் மேலானே             
 
மேலாத் தேவர்களும் நிலத் தேவரும் மேவித் தொழும் 
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார் 
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் 
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே    
 
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும் 
நாவாய் போல் பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க 
தேவு ஆர் கோலத்தொடும் திருச் சக்கரம் சங்கினொடும் 
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே            
 
ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து 
தானே இன் அருள் செய்து என்னை முற்றவும் தான் ஆனான் 
மீன் ஆய் ஆமையும் ஆய் நரசிங்கமும் ஆய் குறள் ஆய் 
கான் ஆர் ஏனமும் ஆய் கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே    
 
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங்கண்ணன் தன்னை 
ஏர் வள ஒண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன 
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும் 
ஆர்வண்ணத்தால் உரைப்பார் அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக