அனைத்தும் நல்கும் அபிராமி அந்தாதி
திருக்கடையூர் அபிராமி அம்மன் மீது அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதி அருள் மழைப் பொழியக்கூடிய அற்புதமாகும். அந்தாதியாகப் பாடிய நூறுப்பாடல்களும் ஒவ்வொன்றும் ஒரு பலனை அளிக்ககூடியதென பக்தர்களின் அனுபவ மொழிகள் எடுத்து சொல்கின்றன. அவற்றில் ஒரு சிலப் பாடல்கள் இங்கு தரப்பட்டுள்ளது அனைத்துப் பாடல்களையும் சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டு மகிழ்வதோடு அம்மன் அருளையும்பெறலாம்.அம்மன் அருளால் விளைந்த இந்த அற்புத அந்தாதியை தினம் ஓதுபவர் வாழ்வு ஒளி பெறும் என்பது திண்ணம்.
பகுதி 1
பிரிந்தவர் ஒன்று கூட
துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
உயர்பதவிகள் பெற
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
மனக் கவலை நீக்க
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.
நல்ல கணவர் அமைய
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
மரணபயம் அகல
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.
மனநோயிலிருந்து விடுபட
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.
கடன் தீர
இல்லாமை சொல்லி ஒருவர் தம் பாற் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்த நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
பிள்ளைகள் நன்கு வளர
தஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அரியாரெனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே
கல்வி செல்வம் ஏனைய நல்லன பெற
தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே
மகப்பேறு உண்டாக
தாமம் கடம்பு படைபஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடிச் செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே
மன அமைதி ஏற்பட
அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ
வருந்தா வகையென் மனத்தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக