செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-10


மரணத்திற்குப் பின்

ரணத்திற்கு பிறகு , குழந்தைகள் மற்றும் சன்னியாசிகளைத் தவிர மற்றவர்களை எரியூட்டுவதே இந்து மதத்தவர் பழ்க்கமாகும். ப ஞ்ச பூதங்களாலான உடலை அவற்றிற்க்கே அளித்துவிட்டு, ஆன்மாவை அதன் உலகுக்கு அனுப்புவதே இதன் நோக்கமாகும்.குடும்பத்தவர் யாரேனும் இறந்துவிட்டால் , அந்த குடும்பத்தை சார்ந்த அத்தனை பேரும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். அவர்கள் இல்லங்களில் அந்த காலத்தில் எவ்விதப் பண்டிகையும் கொண்டாடப்படக்கூடாது. இறந்தவரின் வாரிசுகள் வேதங்களில் சொல்லிய வண்ணம் இறந்தவற்கான கர்ம காரியங்களை தவறாது செய்து வரவேண்டும்.

இந்து மதம் இறப்பை ஒரு பெரிய நிகழ்வாக கருதுவதில்லை.உடல் மட்டுமே அழியக்கூடியது, ஆன்மா அழிவற்றது என்பதை திடமாக நம்பும் இந்து மதம், முக்தி அடையாத ஆன்மாவிற்கு மறு பிறவி நிச்சயம் உண்டு என்று சொல்கிறது.எனவே முக்தி பெறாத ஆன்மாக்களுக்கு இறப்பிற்கு முன்னரும், பின்னருமான வாழ்க்கை தற்காலிகமானதே என்று கருதுகிறது.இறக்கும் வரையில் இந்த உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு இந்த உலக வாழ்க்கை எப்படி தற்காலிகமானதோ அதை போலவே இறந்த பின்னர் மறு பிறவியினை எதிர் நோக்கி இருக்கும் ஆன்மாவிற்கு அவ்வாழ்க்கையும் தற்காலிகமானதே.

பகவத் கீதை இறப்பிற்கு பின்னர் ஆன்மாவிற்கு இரு வழிகள் உண்டு. ஒன்று சூரிய வழி, மற்றொன்று சந்திர வழி. சூரிய வழியில் செல்லும் ஆன்மாக்களுக்கு மறு பிறவி இல்லை . சந்திர வழி செல்லும் ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுக்கின்றன. சூரிய வழியினை மேல் வழி எனவும் சந்திர வழியினை கீழ் வழியெனவும் குறிப்பிடப்படுகிறது.ஒருவன் ஒரு பிறவியில் செய்யும் வினைகளுக்கு ஏற்பவே அவன் மேல் வழிக்கோ கீழ் வழிக்கோ அனுப்பப்படுகிறான். ஒருவன் இறக்கும்போது எதனை நினைத்து கொண்டு இறக்கிறானோ அதனையே அவன் அடைகிறான் என இந்து மதம் எடுத்து காட்டுகிறது. தனது குடும்பத்தியே சதா சர்வ காலமமும் நினைத்து கொண்டிருந்து இறப்பவன் தனது மறு பிறவியில் அதே குடும்பத்தை அடைகிறான். இறைவனை த்யானித்து உயிர் விடுபவன் அவன் தவறுகளெல்லாம் மன்னிக்கப்பட்டு முக்தி அடைகிறான். புனித நாட்களில் உயிர் விடுபவன் சொர்க்கத்தை அடைகிறான்.

" இறைவனை நினைத்து ஓம் என்னும் மந்திரத்தை த்யானித்து, ஐம்புலங்களையும் கட்டுபடுத்தி, சுவாசத்தை உள் நிறுத்தி, யோகம் பயில்பவர்கள் சூரிய வழியை அடைகிறார்கள்" பகவத் கீதை(8.12-13)

இவ்வாறு உடலைவிட்டு நீங்கும் ஆன்மா அதனுடைய அடுத்த கட்டத்தை தாமதமின்றிஅடைய இறந்தவரின் வாரிசுகள் அவருக்குண்டான கர்ம காரியங்களை சரியாக செய்யவேண்டும். இவை யாவும் இந்துக்களால் ஏற்று கொள்ளப்பட்ட நம்பிகைகள் எனினும், ரிக் வேதத்தில் மறு பிறவி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

முக்தி அடையும் ஆன்மா இறைவனை அடைகிறது. அதற்கு மறு பிறவி இல்லை. ஆன்மா இறைவனை அடையும் இடத்தை சைவம் கைலாசம் எனவும், வைஷ்ணவம் வைகுந்தம் எனவும், ப்ரம்மவை வண்ங்குபவர்கள் ப்ரம்ம லோகமெனவும் குறிப்பிடுவார்கள். யமலோகம் என குறிப்பிடப்படுவதே நரகமாகும். இந்துக்களை பொறுத்தவரை சொர்க்கமும் , நரகமும், முக்தி பெறாத ஆன்மாக்களின் தற்காலிக உலகங்கள் ஆகும். உடலில் இருந்து பிரிந்த ஆன்மா அதனடுய வினைகளுக்கேற்ப சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பபடுகிறது. ஆனால் உடலற்ற ஆன்மா சொர்க்கத்தின் மேன்மைகளையோ நரகத்தின் கொடுமைகளையோ அனுபவிப்பதில்லை. அவற்றை உணர மட்டுமே செய்கின்றன.

இந்த உணர்வுகளுடன் மறு பிறவியெடுக்கும் ஆன்மாக்கள் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களின் காரணமாக நல் வழியில் நடந்து முக்தி பெற முயற்சிகின்றன. மாயையால் மறைக்கப்படும் ஆன்மாக்கள் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் மறந்து போய் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அல்லலுறுகின்றன. உடலிலிருந்து நீங்கும் உயரிய ஆன்மாக்கள் தங்கள் உலகை அடையும் வரை ஆவிகளாகவும்,பாவாத்மாக்கள் பேய்களாகவும் திரிகின்றனர்.இவையெல்லாம் வேத காலத்திற்கு பிறகு ஏற்பட்ட நம்பிக்கைகளே எனவும் சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-9


சடங்குகள், பண்டிகைகள் மற்றும் சின்னங்கள்

இந்து மதத்தில் பிறப்பதற்கு முன்பிருந்து இறக்கும் வரை பல்வகையான சடங்குகள் அனுஷ்டிக்கப்படுகின்றன. இவ்வகையான சடங்குகளை சமஸ்கிருதத்தில் "சம்ஸ்கரா" என்று அழைப்பார்கள். இந்த சடங்குகள் மூலம் ஆன்மா உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுவதால், இவ்வகையான சடங்குகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.பொதுவாக எண்ணற்ற சடங்குகள் இந்து மதத்தின் பல பிரிவினரால் கடை பிடிக்கப்பட்டாலும் , மிக பெரும்பான்மையான இந்துக்களால் கீழ் காணும் எட்டு வகையான சடங்குகள் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன.

சீமந்தம்:

கருவுற்ற தாய்க்கு,4 ,6, அல்லது 8 மாதத்தில் கருவும், தாயும் ஆரோக்கியமாக இருக்க செய்யப்படும் சடங்காகும். ஹோமம் வளர்த்து அதற்குரிய மந்திரங்களை சொல்லி , தாயும், சேயும் நலமுற இருக்க செய்யப்படும் சடங்காகும்

நாமகரணம்:

குழந்தை பிறந்து 11 அல்லது 16வது நாளில் பெயர் சூட்டும் சடங்கு நடை பெறுகிறது. தற்கால சூழ் நிலையில் மருத்துவ மனைகளில் அன்றே பெயர் சூட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே அன்றே பெயர் சூட்டிவிட்டு , குறிப்பிட்ட நாட்களில் ஆயுஷ் ஹோமம் போன்ற சடங்குகளை நடத்தி , குழந்தை நலமாக வளர ஆசி வழங்கப்படுகிறது.

முதல் உணவு

குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு முதன் முதலாக திட உணவு ஊட்டப்படுவதும் ஒரு சடங்காக மேற்கொள்ளப்படுகிறது.குழந்தையின் வாழ் நாளில் உணவு தட்டுப்பாடின்றி வாழவும், ஆரோக்கியத்திற்க்காகவும் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.

முடி இறக்குதல்

குழந்தைக்கு முதன் முதலாக முடி இறக்குவதும் ஒரு சடங்காக மேற்கொள்ளப்படுகிறது.முதன் முதலில் வளரும் முடியை இறைவனுக்கு அர்ப்பணித்து , குழந்தை ஆரோக்கியமாக வளர இந்த சடங்கு நடை பெறுகிறது.

வித்யாரம்பம்

குழந்தைகளை முதன் முதலில் கல்வி கற்க அனுப்பப்படும்போது, ஹோமம் வளர்த்து சரஸ்வதி மந்திரங்களை உச்சரித்து, குழந்தை கல்வியில் சிறந்தவனாக வளர பிரார்த்தனை செய்யப்படுகிறது.

திருமணம்:

திருமண வயதை எட்டியவுடன் திருமணம் நடத்தப்படுகிறது.திருமணத்தின் போது பெற்றோர்க்கு பாத பூஜை செய்தல்,மாலை மாற்றுதல்,கன்னிகாதானம்,ஹோமம், ,மாங்கல்யம் சூட்டுதல், அக்னி வலம் வருதல்,அம்மி மிதித்தல்,அருந்ததி பார்த்தல்,மெட்டி அணிவித்தல் போன்று பல சடங்குகள் செய்யப்படுகின்றன.

சிரார்த்தம்

இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய செய்யப்படும் சடங்கு சிரார்த்தம் என அழைக்கப்படுகிறது. இறந்தவர்களுக்குப் பிடித்தமானவற்றை படைத்து இந்த சடங்கு நடத்தப்படுகிறது.

இதுபோன்று எண்னற்ற சடங்குகள் இந்து மதத்தில் உண்டு. அவற்றில் சில மட்டுமே இங்கு எடுத்துகாட்டப்பட்டுள்ளது . இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இந்து மதம் மனிதனின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும், இறைவனுக்கு நன்றி சொல்லும் முகமாகவும், தொடர்ந்து இறையருள் பெற்று வாழவுமே இந்த சடங்குகள் நடத்தப்படுகின்றன.

பண்டிகைகள் மற்றும் சின்னங்கள்

இந்து மதத்தில் ஏராளமான பண்டிகைகள் கொண்டடப்படுகின்றன.இந்தப் பண்டிகைகள் இந்து மக்களை ஒருங்கிணைப்பதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன.இந்தப் பண்டிகைகள் ஆன்மீகம், மதம், தத்துவம்,பண்பாடு, கலாசாரம் இவற்றின் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகின்றன. வீட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள் குடும்பத்தை ஒருங்கிணைக்கவும், ஆலயத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் சமூகத்தை ஒருங்கிணைக்கவும் கொண்டாடப்படுகின்றன.

சிவன் வழிபாட்டின் முக்கிய நிகழ்வாக சிவ ராத்திரியும்,வண்ணங்களின் விழாவாக ஹோலிப்பண்டிகையும்,ஸ்ரீராமரின் பிறந்தனாள் ராம நவமியாகவும்,பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள் ஜன்மாஷ்டமியாகவும், வினாயாகரின் பிறந்த நாள் வினாயக சதுர்த்தியாகவும்,முப்பெரும் தேவியரை வணங்குவதற்கு நவ ராத்திரியும்,தீய சக்திகளின் மீது இறை சக்தியின் வெற்றியினை கொண்டாட தீபாவளியும், அக்னிக்கு செய்யும் பிரார்த்தனையாக கார்த்திகை தீபமும், சூரிய்னை வழிபட மகர சங்க்ராந்தியும் கொண்டாடப்படுகின்றன. இவற்றை தவிர ஒவ்வொரு பிரதேசத்திலும் நிகழ்ந்த சில ஆன்மிக அதிசயங்களின் அடிப்படையிலும் அந்த அந்தப் பிரதேசத்தில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

சின்னங்கள்

ஓம் என்னும் ப்ரணவ மந்திரம்,உருவமும் அருவமும் அற்ற இறைவனை குறிக்கும் சிவ லிங்கம்,வாழ்வு அனித்தியமானது என்பதை எடுத்து காட்டும், விபூதி,திரிபுரம் எரித்த சிவனின் கண்களில் இருந்து தோன்றிய ருத்ராக்ஷம்,விஷ்ணுவின் அடையாளமாக தரிக்கப்படும், நாமங்கள்,புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞை சக்கரத்தை தூண்டும் திலகம், பகவான் கிருஷ்ணரின் கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் சுதர்சன சக்கரம், பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரால் ஒலிக்கப்படும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கும் இவையெல்லம் இந்து மதத்தின் சின்னங்களில் முக்கியமானவையாகும்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-8

வர்ணாஸ்ரமம்

ந்து மதத்தின் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒன்று வர்ணாஸ்ரமமாகும். இந்து மதம் சமூகத்தை தொழில் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரித்து அதனை வர்ணம் எனவும், வாழ்வின் நிலையினை நான்காகப் பிரித்து அதனை ஆஸ்ரமம் எனவும் குறிப்பிடுகிறது. ஆன்மீகத்தில் ஈடுபட்டு,அரசனுக்கும், நாட்டிற்கும், ஆன்மீக வழிகாட்டிகளாக வாழ்பவர்கள் பிராமணர்கள் என அழைக்கப்பட்டார்கள்.நாட்டை ஆளுகின்ற வம்சத்தினர் க்ஷத்திரியர்கள் ஆவார்கள்.பல்வகை வணிகம் செய்து , நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் வைசியர் என அழைக்கப்பட்டர்கள்.அனைத்து துறைகளிலும் பணியாற்றுகின்ற அனைத்து தொழிலாளர்கள் அனைவரும் சூத்திரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களே நான்கு வருணத்தவர் ஆவார்.நான்கு வகை வருணத்தவர்களும் , அவரவர்க்ளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை சரிவர செய்து வந்தால் சமூகம் நல்ல முறையில் இயுங்கும் என இந்து மதம் நம்புகிறது.இப்படி சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட வருண முறை, மனித மன வக்கிரங்களால் , வருணங்களிலிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டது.

இறைவனின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள் எனவும்,மார்பிலிருந்து தோன்றியவர்கள் க்ஷத்திரியர்கள் எனவும், வயிற்றில் இருந்து பிறந்தவர்கள் வைசியர் எனவும், காலில் இருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் எனவும் பேதம் கற்பிக்கப்பட்டது.முதல் இரண்டு பிரிவினரும், மிக உயர்ந்தவர்கள் எனவும், சூத்திரரகள் மிகவும் தாழ்ந்தவர்கள் எனவும் பேதம் கற்பிக்கப்பட்டது. இதன் காரணமாக சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்கள் அடிமைகளாய் நடத்தப்பட்டனர்.ஆனால் இவை எதுவும் இந்து மதத்தால் வலியுறுத்தப்பட்டதல்ல. ஒரு மதத்தவர்ரல் செய்யப்படும் அனைத்தும் மதத்தின் அடிப்படையில் தான் செய்யப்படுகிறது என்பது தவ்றாகும்.

வருணம் தொடர்பான குறிப்புகள் ரிக் வேதத்தில் புருஷ ஷூக்தாவில், மிக சிறிய அளவிலேயேப் பேசப்படுகிறது. அதில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படவில்லை.பகவத் கீதையிலும், வருணம் என்பது பிறப்பின் அடிப்படையில் உருவானது என குறிப்பிடப்படவில்லை.மனிதர்களுக்கு இடையே இயற்கையாய் அமைந்திருக்கும் குங்கள் மற்றும் அவர்கள் செய்கின்ற தொழில் இவற்றின் அடிப்படையிலேயே வருணங்கள் அமைவதாக குறிப்பிடப்படுகிறது. வருணம் என்பது குத்தின் அடிப்படையில் அமைவதுதான் என்பதை ஜபலா உப நிஷத்தில் காணப்படும் இந்த உரையாடல் தெளிவாக குறிப்பிடுகிறது.

கௌதம முனியை சந்திக்க ஒரு இளைஞன் வருகிறான். 'அய்யா, எனக்கு என் தந்தையைப் பற்றி எதுவும் தெரியாது.என் தந்தை பெயர் என்ன? அவர் எந்த வருணத்தை சார்ந்தவர் என்பதை நீங்கள் தான் அறிந்து சொல்லவேண்டும்" " இதனை நீ உன் தாயாரிடம் சென்று கேள்" அவனும் முனிவர் சொன்னது போல் அவன் தாயாரிடம் சென்று கேட்கிறான். அவன் தாய் சொல்லுகிறாள். "மகனே என்னை மன்னித்துவிடு. நமது குடும்ப சூழ் நிலை காரணமாக நான் விபச்சாரம் செய்துதான் வாழ்ந்து வந்தேன்.அதனால் நீ யாருக்கு பிறந்தாய் என்று எப்படி சொல்லுவேன் " என்று சொல்லி அழுகிறாள். அவன் நடந்ததை அப்படியே சென்று கௌதம முனிவரிடம் சொல்லுகிறான். " உன் தந்தை யாரென்று எனக்கு தெரியாது. ஆனால் நீ நிச்சயமாய் பிராமணன்தான். எவன் உண்மையை மறைக்காமல், நேர்மையாய் நடந்து கொள்கிறானோ அவன் நிச்சயமாய் பிராமணன்தான்" என்று சொல்லுகிறார். இதிலிருந்தே குணத்தின் அடிப்படையிலேயே வருணங்கள் தீர்மானிக்கப்பட்டது என்பதை அறியலாம்.

இதைப் போலவே மகாபாரதத்தில் அஸ்வத்தமா பிராமணர் குலத்தில் பிறந்திருந்தாலும்,க்ஷத்திரியனாக மாறி கடுமையான போர்கள் புரிந்து பலரைகொன்று குவித்து பல வெறறிகளை பெறுகிறான். ஆனால் இதற்கு நேர் மாறாக க்ஷத்திரியராகப் பிறந்த விஷ்வாமித்திரர் , பிரமணாராக மாறி ப்ரும்ம ரிஷியானார். இப்படி குணா மற்றும் கடமைகளின் அடிப்படையில் இருந்த வருண முறை பிற்காலத்தில் பிறப்பின் அடிப்படையாக மாற்றப்பட்டது. ஆனால் இந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த வருணாஸ்ரம முறைக்கும், தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஜாதிய முறைக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.வர்ணாஸ்ரம முறை தொழில் அடிப்படையில் அமைக்கப்பட்டது. ஜாதிய அமைப்போ பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வருணாஸ்ரம முறை சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்காக ஏற்பட்ட ஒரு சேவை முறை. ஆனால் ஜாதிய அமைப்போ சிலர் தங்களை உயர்த்திகொண்டு , மற்றவர்களை, சுரண்டுகின்ற நிலையை ஏற்படுத்துகிறது. வருணாஸ்ரம முறையில் தீண்டாமை கிடையாது. ஜாதிய அமைப்பில் தீண்டாமை மிகப் பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது.

ஆஸ்ரமம்:

மனித வாழ்வின் நான்கு நிலைகளே , ஆஸ்ரமமாய் இந்து மதத்தில் சொல்லப்படுகிறது.

ப்ரம்மசரியம்: மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரும் வரை ப்ரம்மச்சரியத்தை கடை பிடித்து, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறது.

க்ரஹஸ்தம்: ப்ரம்மச்சரியத்தின் முடிவில், இல்வாழ்க்கையினை ஏற்படுத்திகொண்டு, தனக்கும் தன்னை சார்ந்த சமூகத்திற்கும், தன்னால் இயன்ற பணிகளை ஆற்றி வர வேண்டும்.இந்த நிலையே க்ரஹஸ்தம் ஆகும். குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, அறங்கள் செய்து,சந்ததியினை வளர்ப்பதே க்ரஹஸ்தனின் கடமையாகும்.

வனப்ரஸ்தம்: க்ரஹஸ்தன் இல்லறத்தில் அதன் கடமைகளை நிறைவேற்றிய பின்னர்,சந்ததிகளுக்கு நல்வாழ்வினை அமைத்து கொடுத்த பின்னர், தம்பதியர், தங்களை தங்கள் குடும்ப பொறுப்புகளிலிருந்து விடுவித்து கொண்டு,எந்த பந்தங்களின்றி காட்டில் வாழ்வது போல், உலக வாழ்விலிருந்து ஒதுங்கியிருத்தல் வனப்ரஸ்தம் ஆகும்.

சன்னியாசம்: வனப்ரஸ்தத்தில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில், உலக வாழ்வினை முற்றிலும் துறந்து முக்தி அடையும் நிலைக்கு பாடுபடுவதே சன்னியாசம் ஆகும்.

ஆஸ்ரமத்தை பற்றி சுருங்க சொல்லின், கல்வி கற்கும் காலத்தில் கல்வி கேள்விகளில் தேர்ந்து, திருமணம் செய்து இல்வாழ்வை மேற்கொண்டு அதற்குரிய கடமைகளை செய்வது,ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் குடும்ப பொறுப்புகளிலிருந்து ஒதுங்கி ஆன்மீக நாட்டமுடையவராகி, இறுதியில் முக்தி அடைவதே ஆகும்

வர்ணாஸ்ரம முறை இந்து மதத்தின் அடிப்படை எனவும், மிக உயர்ந்த தத்துவம் எனவும் மகாத்மா காந்தி, டாக்டர் ராதாக்ருஷ்ணன் போன்றவர்களால் போற்றப்படுகிறது.வர்ணாஸ்ரம முறை சமூகத்தை சீரழிக்கும் ஒன்று என டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களால் சொல்லப்படுகிறது. வர்ணாஸ்ரம முறை , வேதங்களிலோ அல்லது உபநிஷத்துக்களிலோ விரிவாக விவாதிக்கப்படவில்லை எனவும்,இந்து மதம் அதனை வலியுறுத்தவும் இல்லை எனவும், கலிகால தொடக்கத்தில்,இந்து மத நூல்களை எழுதிய ப்ராமணர்கள் தன்களுக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த நிலையை தக்க வைத்து கொள்ளவே இந்த முறை ஏற்படுத்தப்பட்டது என சொல்வோரும் உண்டு.எது எப்படி இருப்பினும், வர்ணாஸ்ரமததை அடிப்படையாகக் கொண்டு தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஜாதிய அமைப்பு, சமூக சீரழ்விற்கே வழி வகுப்பதால் ஒவ்வொரு இந்துவும் அதனை எதிர்க்க வேண்டும்.


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-7

மந்த்ரங்கள்

இந்து மத வழிபாட்டில் மந்த்ரங்களுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.மந்த்ரங்கள் என்பது சில விசேஷ சொற்களின் சேர்க்கையால் பிரபஞ்சத்திலிருந்து சக்தியை பெறுகின்ற முறையாகும்

மந்த்ரங்களை தொடர்ந்து ஜபித்து வரும்போது எண்ணற்ற ஆற்றல்கள் கிடைக்கும் என இந்து மதம் வலியுறுத்தி சொல்கிறது.மந்த்ரங்களை கீழ்காணும் மூன்று வகையாக சொல்லலாம்.

சப்ரி மந்த்ரங்கள்: இந்த வகையான மந்த்ரங்களை தொடர்ந்து ஜபித்து, த்யானம் செய்துவருபவர்கள் அஷ்டமா சித்திகள் என்று சொல்லப்படும் எட்டுவகையான சித்திகளை அடையலாம்.

தந்த்ரா மந்த்ரங்கள்: இந்த வகையான மந்த்ரங்கள் மிகுந்த கவனமுடனும் தவறின்றியும் ஜெபித்து வருவோர்க்கு உயரிய நிலையில் பல சித்திகளை அளிக்கக் கூடிய மந்த்ரங்களாகும்.

வேத மந்த்ரங்கள்: வேதங்களில் சொல்லப்படும் இந்த மந்த்ரங்கள் வெறும் உலக வாழ்க்கைக்கான மந்த்ரங்களாக இல்லாமல் முக்தி அடைவதற்க்கான மந்த்ரங்களாக கருதப்படுகிறது.

குரு மந்த்ரா: எந்த வகையான மந்த்ரங்களாக இருந்தாலும் அவற்றை ஒரு குருவின் மூலம் பெறுவதே சிறந்தது.அவ்வாறு குருவின் கருணையால் சீடர்களுக்கு உபேதேசிக்கப்படும் மந்த்ரங்கள் குரு மந்த்ரங்கள் என்று அழைக்கப்படுகிறது.குருவின் உபதேசத்தின் அடிப்படையில் பெறப்படும் இந்த மந்த்ரங்கள் சாதகர்களுக்கு நிச்சயம் மிகுந்த பலங்களை தரக்கூடியவைஆகும்

பீஜா மந்த்ரங்கள்: பீஜ மந்த்ராவை , குரு மந்த்ராவின் சாரம் என்றே சொல்லலாம். பீஜ் என்றால் சமஸ்கிருதத்தில் விதை என்று பொருள். ஒரு சிறிய விதை எப்படி வளர்ந்து பெரிய மரமாகி அனைவருக்கும், நிழல் தருகிறதோ, அதைப் போலவே, ஓரிரண்டு சொற்களில் அமைந்துள்ள இந்த பீஜா மந்த்ரங்கள் அற்புதமான ஆற்றல் பெற்றவை.க்லீம், ஸ்ரீம், ஐம், கௌம், க்ரிம் போன்ற மந்த்ரங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

த்யான மந்த்ரங்கள்: த்யானத்தில் மனதினை ஒரு நிலை படுத்த பயன்படும் மந்த்ரங்கள் பல உள்ளன. இவை த்யான மந்த்ரங்கள் என்று அழைக்கப்படுகிறது.இம்மந்த்ராக்களின் மூலம் ஞானமும், சமாதி நிலையும், சாத்தியமாகிறது.

குணப்படுத்தும் மந்த்ரங்கள்: சில குறிப்பிட்ட காரியங்களுக்காக பயன்படுத்தப்படும் மந்த்ரங்கள் இவ்வகையை சார்ந்தவை. உதாரணமாக க்ரஹ ப்ரவேசம், திருமணம் போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். இம்மந்த்ராக்களை கொண்டு உடல் நலம் பெறவும், பல் வகையான தோஷ நிவர்த்திகளையும் பெற முடியும்

ப்ரணவ மந்த்ரம்: ஓம் என்னும் மந்த்ரமே ப்ரணவ மந்த்ரம் என்று அழைக்கப்படுகிறது. ஒம் என்னும் மந்த்ரம் இந்து மத்தின் ஆணி வேறாக அமைந்துள்ள மந்த்ரமாகும்.வேத ஸ்லோகங்களின் ஆரம்பத்திலும், முடிவிலும் இதனை அமைத்தே உச்சரிக்கப்படுகிறது.இந்த பிரபஞ்சம் உருவாகும் முன் இருந்த வெளியில் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது ஓம் என்னும் இந்த ஒலி மட்டுமே என்று இந்து மதம் கூறுகிறது.இந்த பிரபஞசம் அழிக்கப்படும் போது ஏற்படும், பிரளயத்திற்கு பிறகு இந்த ஓம் என்னும் ஒலியே எஞ்சி நிற்கும்.

ப்ரணவ மந்த்ரம் அகர, உகர,மகர, பிந்து,மற்றும் நாதம் என்னும் ஐந்து பகுதிகளாக அமைந்துள்ளது.வினாயகரின் உருவமே ஓம் வடிவில் அமைந்திருப்பதை காணலாம்.இதன் காரணமாகவே பிள்ளையார் ப்ரணவ சொருபன் என்று அழைக்கப்படுகிறார். முண்டோக உபனிஷத் முழுமையிலும் ஓங்காரத்தின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. ஸ்கந்த புராணத்தில் , முருகன் தன் தந்தையான சிவனுக்கு ஓங்காரத்தின் பொருள் உரைப்பது குறித்து விரிவாகப் பேசப்படுகிறது. ஓங்கார த்யானத்தின் மூலம் இறைவனை அடைவது எளிது என இந்து மதம் கருதுகிறது. இதனை முண்டோக உப நிஷத் " ஓம் என்பது வில்; ஆன்மாவே அன்பு;இறைவனே அதன் குறி" என அழகக விளக்குகிறது.

ராமகிருஷ்ண பரம ஹம்சரும்" அலைகளின் சப்ததை கொண்டு கடல் இருக்கும் இடத்தை அறிய முடிவது போல், ஓங்கார த்யானத்தின் மூலம் இறைவனை காணலாம்" என குறிப்பிடுகிறார்.பகவான் ரமண மகரிஷியும்" ஓங்காரமே அனைத்து மந்த்ரங்களின் சாரமாகும். இதனைத் தொடர்ந்து த்யானிப்பதால்சமாதி நிலையினையும் அதனைத் தொடர்ந்து மோட்ச்சத்தையும் அடையலாம்" என கூறுகிறார். ஓங்காரம் சேர்த்து சொல்லப்படும் மந்த்ரங்கள் அனைத்தும் வலிமையுடையனவாக மாறுகின்றன.

பஞ்சாக்க்ஷர மந்த்ரா: சிவனுக்கான ஓம் நம சிவாய என்னும் பஞ்சாக்க்ஷர மந்த்ரமும் விஷ்ணுவிற்க்கான ஓம் நமோ நாராயணா என்னும் மந்த்ரமும் மிகவும் முக்கியம் வாய்ந்த மந்த்ரங்களாகும்.இந்த மந்த்ர த்யானத்தின் மூலம் ஞானம் பிறக்கும் என நம்பப்படுகிறது

காயத்ரி மந்த்ரம்: விஸ்வாமித்ரரால் வடிவமைக்கப்பட்ட காயத்ரி மந்த்ரம் மிகுந்த சக்தியுடையதாம். காயத்ரி மந்திரம் தொடர்ந்து ஜபிக்கப்படும்போது வாழ்வின் அத்தனை சௌகரியங்களும் கிடைத்து வெற்றி பெறுவார்கள். ஆனால் மந்த்ரத்தை சரியான முறையில் உச்சரிப்பது அவசியமாகும்.

.ம்ருத்யுஞ்ச மந்த்ரம்: மரணத்தை வெல்லக் கூடிய சிவனுக்கான இம்மந்த்ரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் உடல் நலமுரவும், மரணத்தை வெல்லவும் இயலும். இந்து மந்த்ரங்களில் இதுவும் ஒரு முக்கியமான மந்த்ரமாகும்.

Oom Tryambakam Yajamahey ஓம் த்ரையம்பகம் யஜாமஹே

Sugandhim Pushtivardhanam சுகந்திம் புஷ்டிவர்தனம்

Urvaaruka Meeva Bhandanaath உர்வாருக மீவா பண்டனாத்

Mruthyor Mokshayah Mamrutat ம்ருதுயொய் மோக்ஷயா மம்ருடட்

இந்த மந்த்ரம் ஆங்கிலம் மற்றும் தமிழ் வடிவில் இங்கு கொடுக்கப்பட்டிருந்தாலும், சமஸ்கிருதம் அறிந்த ஒருவர் மூலம் இதன் சரியான உச்சரிப்பை ஜெபித்து வரும்போது உறுதியான பலன்கள் கிடைக்கும்

அன்றாட வாழ்விற்க்குத் தேவையான சில பீஜ மந்த்ரங்கள் , கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இவற்றை உரிய முறையில் ஜெபித்து பயன் பெறலாம்

செல்வம்,வாழ்க்கை வளம் இவற்றைப் பெற ஓம் ஸ்ரீம் ஓம்

மற்றவர்களை கவர்ந்து, பிரபலமாகவும்,

தலைவர்கள் ஆகவும் ஓம் க்ரீம் ஓம்

வியாதிகளிடமிருந்து நிவாரணம் பெற ஓம் க்லீம் ஓம்

கல்வி, தேர்வு, பதவி உயர்வு ஓம் ஐம் ஓம்

பயம்போக்கிட ஓம் ஹம் ஓம்

தாம்பத்ய வாழ்வு சிறக்க ஒம் சாம் ஓம்

மரணத்தை வெல்லும் ம்ருத்யுஞ்செய

மந்த்ரத்தின் பீஜா மந்த்ரம் ஓம் ஜும் சஹா

இது போன்று எண்ணற்ற மந்த்ரங்கள் இந்து மதத்தில் உண்டு. இவற்றை ஜெபித்து பயன் பெற்று வருபவர்கள் ஏராளம்.