வியாழன், 11 ஆகஸ்ட், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-8

வர்ணாஸ்ரமம்

ந்து மதத்தின் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒன்று வர்ணாஸ்ரமமாகும். இந்து மதம் சமூகத்தை தொழில் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரித்து அதனை வர்ணம் எனவும், வாழ்வின் நிலையினை நான்காகப் பிரித்து அதனை ஆஸ்ரமம் எனவும் குறிப்பிடுகிறது. ஆன்மீகத்தில் ஈடுபட்டு,அரசனுக்கும், நாட்டிற்கும், ஆன்மீக வழிகாட்டிகளாக வாழ்பவர்கள் பிராமணர்கள் என அழைக்கப்பட்டார்கள்.நாட்டை ஆளுகின்ற வம்சத்தினர் க்ஷத்திரியர்கள் ஆவார்கள்.பல்வகை வணிகம் செய்து , நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் வைசியர் என அழைக்கப்பட்டர்கள்.அனைத்து துறைகளிலும் பணியாற்றுகின்ற அனைத்து தொழிலாளர்கள் அனைவரும் சூத்திரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களே நான்கு வருணத்தவர் ஆவார்.நான்கு வகை வருணத்தவர்களும் , அவரவர்க்ளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை சரிவர செய்து வந்தால் சமூகம் நல்ல முறையில் இயுங்கும் என இந்து மதம் நம்புகிறது.இப்படி சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட வருண முறை, மனித மன வக்கிரங்களால் , வருணங்களிலிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டது.

இறைவனின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள் எனவும்,மார்பிலிருந்து தோன்றியவர்கள் க்ஷத்திரியர்கள் எனவும், வயிற்றில் இருந்து பிறந்தவர்கள் வைசியர் எனவும், காலில் இருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் எனவும் பேதம் கற்பிக்கப்பட்டது.முதல் இரண்டு பிரிவினரும், மிக உயர்ந்தவர்கள் எனவும், சூத்திரரகள் மிகவும் தாழ்ந்தவர்கள் எனவும் பேதம் கற்பிக்கப்பட்டது. இதன் காரணமாக சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்கள் அடிமைகளாய் நடத்தப்பட்டனர்.ஆனால் இவை எதுவும் இந்து மதத்தால் வலியுறுத்தப்பட்டதல்ல. ஒரு மதத்தவர்ரல் செய்யப்படும் அனைத்தும் மதத்தின் அடிப்படையில் தான் செய்யப்படுகிறது என்பது தவ்றாகும்.

வருணம் தொடர்பான குறிப்புகள் ரிக் வேதத்தில் புருஷ ஷூக்தாவில், மிக சிறிய அளவிலேயேப் பேசப்படுகிறது. அதில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படவில்லை.பகவத் கீதையிலும், வருணம் என்பது பிறப்பின் அடிப்படையில் உருவானது என குறிப்பிடப்படவில்லை.மனிதர்களுக்கு இடையே இயற்கையாய் அமைந்திருக்கும் குங்கள் மற்றும் அவர்கள் செய்கின்ற தொழில் இவற்றின் அடிப்படையிலேயே வருணங்கள் அமைவதாக குறிப்பிடப்படுகிறது. வருணம் என்பது குத்தின் அடிப்படையில் அமைவதுதான் என்பதை ஜபலா உப நிஷத்தில் காணப்படும் இந்த உரையாடல் தெளிவாக குறிப்பிடுகிறது.

கௌதம முனியை சந்திக்க ஒரு இளைஞன் வருகிறான். 'அய்யா, எனக்கு என் தந்தையைப் பற்றி எதுவும் தெரியாது.என் தந்தை பெயர் என்ன? அவர் எந்த வருணத்தை சார்ந்தவர் என்பதை நீங்கள் தான் அறிந்து சொல்லவேண்டும்" " இதனை நீ உன் தாயாரிடம் சென்று கேள்" அவனும் முனிவர் சொன்னது போல் அவன் தாயாரிடம் சென்று கேட்கிறான். அவன் தாய் சொல்லுகிறாள். "மகனே என்னை மன்னித்துவிடு. நமது குடும்ப சூழ் நிலை காரணமாக நான் விபச்சாரம் செய்துதான் வாழ்ந்து வந்தேன்.அதனால் நீ யாருக்கு பிறந்தாய் என்று எப்படி சொல்லுவேன் " என்று சொல்லி அழுகிறாள். அவன் நடந்ததை அப்படியே சென்று கௌதம முனிவரிடம் சொல்லுகிறான். " உன் தந்தை யாரென்று எனக்கு தெரியாது. ஆனால் நீ நிச்சயமாய் பிராமணன்தான். எவன் உண்மையை மறைக்காமல், நேர்மையாய் நடந்து கொள்கிறானோ அவன் நிச்சயமாய் பிராமணன்தான்" என்று சொல்லுகிறார். இதிலிருந்தே குணத்தின் அடிப்படையிலேயே வருணங்கள் தீர்மானிக்கப்பட்டது என்பதை அறியலாம்.

இதைப் போலவே மகாபாரதத்தில் அஸ்வத்தமா பிராமணர் குலத்தில் பிறந்திருந்தாலும்,க்ஷத்திரியனாக மாறி கடுமையான போர்கள் புரிந்து பலரைகொன்று குவித்து பல வெறறிகளை பெறுகிறான். ஆனால் இதற்கு நேர் மாறாக க்ஷத்திரியராகப் பிறந்த விஷ்வாமித்திரர் , பிரமணாராக மாறி ப்ரும்ம ரிஷியானார். இப்படி குணா மற்றும் கடமைகளின் அடிப்படையில் இருந்த வருண முறை பிற்காலத்தில் பிறப்பின் அடிப்படையாக மாற்றப்பட்டது. ஆனால் இந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த வருணாஸ்ரம முறைக்கும், தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஜாதிய முறைக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.வர்ணாஸ்ரம முறை தொழில் அடிப்படையில் அமைக்கப்பட்டது. ஜாதிய அமைப்போ பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வருணாஸ்ரம முறை சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்காக ஏற்பட்ட ஒரு சேவை முறை. ஆனால் ஜாதிய அமைப்போ சிலர் தங்களை உயர்த்திகொண்டு , மற்றவர்களை, சுரண்டுகின்ற நிலையை ஏற்படுத்துகிறது. வருணாஸ்ரம முறையில் தீண்டாமை கிடையாது. ஜாதிய அமைப்பில் தீண்டாமை மிகப் பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது.

ஆஸ்ரமம்:

மனித வாழ்வின் நான்கு நிலைகளே , ஆஸ்ரமமாய் இந்து மதத்தில் சொல்லப்படுகிறது.

ப்ரம்மசரியம்: மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரும் வரை ப்ரம்மச்சரியத்தை கடை பிடித்து, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறது.

க்ரஹஸ்தம்: ப்ரம்மச்சரியத்தின் முடிவில், இல்வாழ்க்கையினை ஏற்படுத்திகொண்டு, தனக்கும் தன்னை சார்ந்த சமூகத்திற்கும், தன்னால் இயன்ற பணிகளை ஆற்றி வர வேண்டும்.இந்த நிலையே க்ரஹஸ்தம் ஆகும். குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, அறங்கள் செய்து,சந்ததியினை வளர்ப்பதே க்ரஹஸ்தனின் கடமையாகும்.

வனப்ரஸ்தம்: க்ரஹஸ்தன் இல்லறத்தில் அதன் கடமைகளை நிறைவேற்றிய பின்னர்,சந்ததிகளுக்கு நல்வாழ்வினை அமைத்து கொடுத்த பின்னர், தம்பதியர், தங்களை தங்கள் குடும்ப பொறுப்புகளிலிருந்து விடுவித்து கொண்டு,எந்த பந்தங்களின்றி காட்டில் வாழ்வது போல், உலக வாழ்விலிருந்து ஒதுங்கியிருத்தல் வனப்ரஸ்தம் ஆகும்.

சன்னியாசம்: வனப்ரஸ்தத்தில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில், உலக வாழ்வினை முற்றிலும் துறந்து முக்தி அடையும் நிலைக்கு பாடுபடுவதே சன்னியாசம் ஆகும்.

ஆஸ்ரமத்தை பற்றி சுருங்க சொல்லின், கல்வி கற்கும் காலத்தில் கல்வி கேள்விகளில் தேர்ந்து, திருமணம் செய்து இல்வாழ்வை மேற்கொண்டு அதற்குரிய கடமைகளை செய்வது,ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் குடும்ப பொறுப்புகளிலிருந்து ஒதுங்கி ஆன்மீக நாட்டமுடையவராகி, இறுதியில் முக்தி அடைவதே ஆகும்

வர்ணாஸ்ரம முறை இந்து மதத்தின் அடிப்படை எனவும், மிக உயர்ந்த தத்துவம் எனவும் மகாத்மா காந்தி, டாக்டர் ராதாக்ருஷ்ணன் போன்றவர்களால் போற்றப்படுகிறது.வர்ணாஸ்ரம முறை சமூகத்தை சீரழிக்கும் ஒன்று என டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களால் சொல்லப்படுகிறது. வர்ணாஸ்ரம முறை , வேதங்களிலோ அல்லது உபநிஷத்துக்களிலோ விரிவாக விவாதிக்கப்படவில்லை எனவும்,இந்து மதம் அதனை வலியுறுத்தவும் இல்லை எனவும், கலிகால தொடக்கத்தில்,இந்து மத நூல்களை எழுதிய ப்ராமணர்கள் தன்களுக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த நிலையை தக்க வைத்து கொள்ளவே இந்த முறை ஏற்படுத்தப்பட்டது என சொல்வோரும் உண்டு.எது எப்படி இருப்பினும், வர்ணாஸ்ரமததை அடிப்படையாகக் கொண்டு தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஜாதிய அமைப்பு, சமூக சீரழ்விற்கே வழி வகுப்பதால் ஒவ்வொரு இந்துவும் அதனை எதிர்க்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக