சடங்குகள், பண்டிகைகள் மற்றும் சின்னங்கள்
இந்து மதத்தில் பிறப்பதற்கு முன்பிருந்து இறக்கும் வரை பல்வகையான சடங்குகள் அனுஷ்டிக்கப்படுகின்றன. இவ்வகையான சடங்குகளை சமஸ்கிருதத்தில் "சம்ஸ்கரா" என்று அழைப்பார்கள். இந்த சடங்குகள் மூலம் ஆன்மா உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுவதால், இவ்வகையான சடங்குகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.பொதுவாக எண்ணற்ற சடங்குகள் இந்து மதத்தின் பல பிரிவினரால் கடை பிடிக்கப்பட்டாலும் , மிக பெரும்பான்மையான இந்துக்களால் கீழ் காணும் எட்டு வகையான சடங்குகள் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன.
சீமந்தம்:
கருவுற்ற தாய்க்கு,4 ,6, அல்லது 8 மாதத்தில் கருவும், தாயும் ஆரோக்கியமாக இருக்க செய்யப்படும் சடங்காகும். ஹோமம் வளர்த்து அதற்குரிய மந்திரங்களை சொல்லி , தாயும், சேயும் நலமுற இருக்க செய்யப்படும் சடங்காகும்
நாமகரணம்:
குழந்தை பிறந்து 11 அல்லது 16வது நாளில் பெயர் சூட்டும் சடங்கு நடை பெறுகிறது. தற்கால சூழ் நிலையில் மருத்துவ மனைகளில் அன்றே பெயர் சூட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே அன்றே பெயர் சூட்டிவிட்டு , குறிப்பிட்ட நாட்களில் ஆயுஷ் ஹோமம் போன்ற சடங்குகளை நடத்தி , குழந்தை நலமாக வளர ஆசி வழங்கப்படுகிறது.
முதல் உணவு
குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு முதன் முதலாக திட உணவு ஊட்டப்படுவதும் ஒரு சடங்காக மேற்கொள்ளப்படுகிறது.குழந்தையின் வாழ் நாளில் உணவு தட்டுப்பாடின்றி வாழவும், ஆரோக்கியத்திற்க்காகவும் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.
முடி இறக்குதல்
குழந்தைக்கு முதன் முதலாக முடி இறக்குவதும் ஒரு சடங்காக மேற்கொள்ளப்படுகிறது.முதன் முதலில் வளரும் முடியை இறைவனுக்கு அர்ப்பணித்து , குழந்தை ஆரோக்கியமாக வளர இந்த சடங்கு நடை பெறுகிறது.
வித்யாரம்பம்
குழந்தைகளை முதன் முதலில் கல்வி கற்க அனுப்பப்படும்போது, ஹோமம் வளர்த்து சரஸ்வதி மந்திரங்களை உச்சரித்து, குழந்தை கல்வியில் சிறந்தவனாக வளர பிரார்த்தனை செய்யப்படுகிறது.
திருமணம்:
திருமண வயதை எட்டியவுடன் திருமணம் நடத்தப்படுகிறது.திருமணத்தின் போது பெற்றோர்க்கு பாத பூஜை செய்தல்,மாலை மாற்றுதல்,கன்னிகாதானம்,ஹோமம், ,மாங்கல்யம் சூட்டுதல், அக்னி வலம் வருதல்,அம்மி மிதித்தல்,அருந்ததி பார்த்தல்,மெட்டி அணிவித்தல் போன்று பல சடங்குகள் செய்யப்படுகின்றன.
சிரார்த்தம்
இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய செய்யப்படும் சடங்கு சிரார்த்தம் என அழைக்கப்படுகிறது. இறந்தவர்களுக்குப் பிடித்தமானவற்றை படைத்து இந்த சடங்கு நடத்தப்படுகிறது.
இதுபோன்று எண்னற்ற சடங்குகள் இந்து மதத்தில் உண்டு. அவற்றில் சில மட்டுமே இங்கு எடுத்துகாட்டப்பட்டுள்ளது . இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இந்து மதம் மனிதனின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும், இறைவனுக்கு நன்றி சொல்லும் முகமாகவும், தொடர்ந்து இறையருள் பெற்று வாழவுமே இந்த சடங்குகள் நடத்தப்படுகின்றன.
இந்து மதத்தில் ஏராளமான பண்டிகைகள் கொண்டடப்படுகின்றன.இந்தப் பண்டிகைகள் இந்து மக்களை ஒருங்கிணைப்பதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன.இந்தப் பண்டிகைகள் ஆன்மீகம், மதம், தத்துவம்,பண்பாடு, கலாசாரம் இவற்றின் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகின்றன. வீட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள் குடும்பத்தை ஒருங்கிணைக்கவும், ஆலயத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் சமூகத்தை ஒருங்கிணைக்கவும் கொண்டாடப்படுகின்றன.
சிவன் வழிபாட்டின் முக்கிய நிகழ்வாக சிவ ராத்திரியும்,வண்ணங்களின் விழாவாக ஹோலிப்பண்டிகையும்,ஸ்ரீராமரின் பிறந்தனாள் ராம நவமியாகவும்,பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள் ஜன்மாஷ்டமியாகவும், வினாயாகரின் பிறந்த நாள் வினாயக சதுர்த்தியாகவும்,முப்பெரும் தேவியரை வணங்குவதற்கு நவ ராத்திரியும்,தீய சக்திகளின் மீது இறை சக்தியின் வெற்றியினை கொண்டாட தீபாவளியும், அக்னிக்கு செய்யும் பிரார்த்தனையாக கார்த்திகை தீபமும், சூரிய்னை வழிபட மகர சங்க்ராந்தியும் கொண்டாடப்படுகின்றன. இவற்றை தவிர ஒவ்வொரு பிரதேசத்திலும் நிகழ்ந்த சில ஆன்மிக அதிசயங்களின் அடிப்படையிலும் அந்த அந்தப் பிரதேசத்தில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
ஓம் என்னும் ப்ரணவ மந்திரம்,உருவமும் அருவமும் அற்ற இறைவனை குறிக்கும் சிவ லிங்கம்,வாழ்வு அனித்தியமானது என்பதை எடுத்து காட்டும், விபூதி,திரிபுரம் எரித்த சிவனின் கண்களில் இருந்து தோன்றிய ருத்ராக்ஷம்,விஷ்ணுவின் அடையாளமாக தரிக்கப்படும், நாமங்கள்,புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞை சக்கரத்தை தூண்டும் திலகம், பகவான் கிருஷ்ணரின் கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் சுதர்சன சக்கரம், பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரால் ஒலிக்கப்படும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கும் இவையெல்லம் இந்து மதத்தின் சின்னங்களில் முக்கியமானவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக