குடல் மற்றும் வயிற்று நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் பதிகம்
திருநாவுக்கரசர் தருமசேனர் என்ற பெயருடன் சமண மதத்தை தழுவியிருந்தார். இது குறித்து கவலையுற்றிருந்த அவரது தமக்கைய்ம் சிவனருளாளருமான திலகவதி அம்மையார் இறைவனிடம் முறையிட முன் வினையின் காரணமாக இது நிகழுந்துள்ளதெனவும் நாவுக்கரசருக்கு சூலை நோய் அளித்து அவரைஆட்கொள்ள இருப்பதாகவும் இறைவன் கனவில் தோன்றி தெரிவித்தார். அதைப் போலவே நாவுக்கரசரை சூலை நோய் பிடிக்க தாங்கொண்ணா வயிற்று வலியால் அவதியுற்றார், திலகவதியார் சிவனை சிந்தித்தலே இதற்கு ஒரே தீர்வு என சகோதரனிடம் தெரிவிக்க அவரும் மனம் மாறி சைவ சமயத்தை தழுவி வீராட்டானம் திருத்தலத்திற்கு சென்று இப்பதிகத்தை பாடியருளினார்.அவ்வாலயத்தின் திருநீற்றை திலகவதியார் நாவுக்கரசரின் வயிற்றில் தடவ சூலை அவரை விட்டு அகன்றது. இதுவே நாவுக்கரசர் பாடிய முதல் திருப்பதிகம் ஆகும். இப்பதிகப் பாராயணம் வயிறு தொடர்பான நோய்களை களைய வல்லது என்பது பக்தர்கள் அனுபவத்தால் உணர்ந்தது.
கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்
வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
: : :
:
: :
:
:.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக