வெள்ளி, 22 மே, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 13



விஷம் தீர்க்கும் பதிகம்


பல புண்ணிய தலங்களை தரிசித்து திருப்பழனம் அடுத்துள்ள திங்களூர் வந்தார் திருநாவுக்கரசர். அங்கு  சாலை குளம் கிணறு தண்ணீர் பந்தல் பாடசாலை என அனைத்திற்கும் அவருடைய பெயரை வைத்து  அவரையே சதா நினைத்து பக்தி செய்து கொண்டிருந்தார் அப்பூதியார்   அப்பூதியாரிடம் நீர் அமைத்த அறச்சாலை முதலியவற்றிற்கு உங்கள் பேர் வைக்காமல் வேறொரு பேர் வைத்தது ஏனோ? என்று வினவினார்.திருநாவுக்கரசர்.அது கேட்ட அப்பூதியடிகள் சிவபெருமானின்   திருவருள் முழுதும் பெற்ற  திருநாவுக்கரசரின் பேர்  அன்றி வேறொரு பேரோ?  அவரை அறியாதார் யாருளர்?நீர் யார்? என்று சிறிது கோபத்துடன் கேட்டார் .வாகீசர் இறைவரால் சூலைவலி தந்து சமண சமயத்தில் இருந்து வந்த அடியேன்தான் திருநாவுக்கரசன்.  என்று கூறினார்.அதுகேட்ட அப்பூதியார் அளவில்லா ஆனந்தம் அடைந்து குடும்பத்துடன்  வணங்கி  அவரை தன மனையில் உணவு செய்யுமாறு வேண்டினார்.நாவுக்கரசர் சம்மதிக்க  .விருந்துக்கு வாழை இலை பறித்து வர தனது மூத்த மகன் மூத்த திருநாவுக்கரசை பணித்தார். சிறுவனும் மகிழ்ந்து தோட்டத்தில் வாழை இலை பறிக்கும்போது கொடியநாகம் தீண்டியது. தாயிடம் இலையைக்கொடுத்து விடம் தீண்டியதை சொல்லாமல் இறந்து போனான். அதுகண்ட அப்பூதியடிகளும் அவர்தம் மனைவியாரும் திருநாவுக்கரசர்.அமுதுசெய்ய  தடையாகுமே என்று மகனின் உடலை மறைத்து மலர்ந்த முகத்துடன் வாகீசரை அமுது செய்ய அழைத்தனர்.திருநாவுக்கரசர் தமது உள்ளத்தில் திருவருளால் தடுமாற்றம் ஏற்பட மூத்த திருநாவுக்கரசு எங்கே?என்று வினவினார்.அப்பூதியார் அவன் இப்போது இங்கு வரமாட்டான் என்றார் .நாயனார் உள்ளதை சொல்லுங்கள் என வற்புறுத்த அப்பூதியார் நிகழ்ந்ததை உரைத்தார்.நன்று செய்தீர் இங்ஙனம் யார் செய்வார் என்று கருணைகூர்ந்து மகனது சவத்தை திருக்கோயிலின் முன் கொணரச் செய்து இத்திருப்பதிகத்தைப் பாட  திருவருளால் மைந்தன் உயிர்பெற்றான்.இறை அருளினால் விளைந்த இவ்வற்புதப் பதிகம் விஷம் தீர்க்கும் தன்மையுடையதாம்.



ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.


இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவர் எய்தின தாமே.


மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.


நாலுகொ லாமவர் தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை பாடின தாமே.


அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்
அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை
அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே.


ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.


ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன
ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்
ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள்
ஏழுகொ லாமிசை யாக்கின தாமே.


எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.


ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடந் தானே.


பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக