வியாழன், 21 மே, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 12



அச்சம் தீர்க்கும் பதிகம்

திருநாவுக்கரசர் சமண மதத்தை நீங்கி மீண்டும் சைவ மதத்தில் இணைந்ததைப் பொறுக்காத சமணர்கள்  இவர் தனது சகோதரியின் அறிவுறையால் சமண மதத்தை விட்டு சைவத்தில் இணைந்து விட்டார். இவரை தண்டித்து ஆக வேண்டும் என அரசனிடம் முறையிடுகின்றனர். என்ன தண்டனை அளிக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என அரசன் தெரிவிக்க மரண தண்டனைதான் இதற்கு சரியான தீர்வு என உரைத்தனர்.அரசனும் காவலர்களை அனுப்பி நாவுக்கரசரை அழைத்து வர பணித்தான்.அழைக்க சென்ற காவலர்களிடம் நான் யாருக்கும் அடிமை அல்ல.சிவ்னைத் தொழுபவன்..அதனால் வர இயலாது எனத்தெரிவிக்கும் நாமார்க்கும் குடியல்லோம் எனும் மறுமாற்றத் திருத்தாண்டகப் பதிகத்தை அருளினார். இறையருளால் சைவத்தின்பால் ஈர்க்கப்பட்டவரின் மொழிகள் அல்லவா? இப்பதிகத்தை பாராயணம் செய்பவர்கள் எவ்வித அச்சத்திற்கும் ஆளாகமாட்டார்கள் என்பது அனுபவ வாயிலாக அறிந்த உண்மையாகும். 

நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
        நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்; 
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
             இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை; 
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன்,
                 நல் சங்க வெண்குழை ஓர் காதின் 
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க்
      கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.

அகலிடமே இடம் ஆக ஊர்கள் தோறும் அட்டு
        உண்பார், இட்டு உண்பார், விலக்கார், ஐயம்; 
புகல் இடம் ஆம் அம்பலங்கள்; பூமிதேவி உடன்
      கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே; 
இகல் உடைய விடை உடையான் ஏன்று கொண்டான்;
  இனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்; 
துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும்
    சொல் கேட்கக் கடவோமோ? துரிசு அற்றோமே

வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்;
              “மாதேவா! மாதேவா!” என்று வாழ்த்தி, 
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்; நீறு
              அணியும் கோலமே நிகழப் பெற்றோம்; 
கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக் கல்
           மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்; 
பார் ஆண்டு பகடு ஏறித் திரிவார் சொல்லும் பணி
           கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே.


உறவு ஆவார், உருத்திர பல் கணத்தினோர்கள்;
  உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே; 
செறு வாரும் செற மாட்டார்; தீமை தானும் நன்மை
            ஆய்ச் சிறப்பதே; பிறப்பில் செல்லோம்; 
நறவு ஆர் பொன் இதழி நறுந் தாரோன் சீர் ஆர்
          நமச்சிவாயம் சொல்ல வல்லோம், நாவால்; 
சுறவு ஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட சுடர்
         நயனச் சோதியையே தொடர்வு உற்றோமே.

என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்;
    இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை; 
சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்;
       சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்; 
ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே;
  உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்; 
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னிப்
    புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே.

மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன
              மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர்- 
"தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
        செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும் 
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
       நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன 
காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்;
                 கடுமையொடு களவு அற்றோமே.

நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும்,
      நெருப்பினொடு, காற்று ஆகி, நெடு வான் ஆகி, 
அற்பமொடு பெருமையும் ஆய், அருமை ஆகி, அன்பு
   உடையார்க்கு எளிமையது ஆய், அளக்கல் ஆகாத் 
தற்பரம் ஆய், சதாசிவம் ஆய், தானும் யானும்
             ஆகின்ற தன்மையனை நன்மையோடும் 
பொற்பு உடைய பேசக் கடவோம்; பேயர் பேசுவன
                   பேசுதுமோ? பிழை அற்றோமே.

ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன் தன்னை,
       இமையவர் தம் பெருமானை, எரி ஆய் மிக்க 
தேசனை, செம்மேனி வெண் நீற்றானை, சிலம்பு
         அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற 
நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்; நின்று
              உண்பார் எம்மை நினையச் சொன்ன 
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே; வந்தீர் ஆர்?
                மன்னவன் ஆவான் தான் ஆரே?.

சடை உடையான்; சங்கக் குழை ஓர் காதன்;
               சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி, 
விடை உடையான்; வேங்கை அதள் மேல் ஆடை,
  வெள்ளி போல் புள்ளி உழை- மான்தோல் சார்ந்த 
உடை, உடையான்; நம்மை உடையான் கண்டீர்;
                உம்மோடு மற்றும் உளராய் நின்ற 
படை உடையான் பணி கேட்கும் பணியோம்
    அல்லோம்; பாசம் அற வீசும் படியோம், நாமே.

நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்; நாண்
             அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்; 
“ஆவா!” என்று எமை ஆள்வான், அமரர் நாதன்,
  அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட 
தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து
        இருந்தான்; தென் திசைக்கோன் தானே வந்து, 
கோ ஆடி, “குற்றேவல் செய்கு” என்றாலும், குணம்
       ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக