புதன், 27 மே, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 14



அரசாங்கத்தால் மற்றும் எதிரிகளால் விளையும் துன்பம் நீக்கும் பதிகம்

சமணர்களின் பொய்மொழிகளை ஏற்று மன்னன், நாவுக்கரசரை ஒரு கருங்கல்லினோடு கட்டி கடலில் எறிய ஆணையிட்டான் .சமணர்களும் உடனே அதை நிறைவேற்ற, நாவுக்கரசர் கடலில் வீசப்பட்டார். அப்பொழுதும் மனம் தளராத மாறாத நாவுக்கரசர் திரு நீலக்குடி உறையும் சிவனை நோக்கி வேண்ட, கல்லோடு அவரும் கடல் மீது மிதந்து கரை அடைந்தனர். இவ்வதியத்தை கண்ட சமணர்கள் அதிர்ந்து போனார்கள்.திரு நீலைக்குடி இறைவன் தன்னை கரை சேர்த்ததை இப்பதிகத்தில் பதிவு செய்கிறார் அப்பர். இப்பதிகப் பாராயணம் அரசாங்கத்தால் மற்றும் எதிரிகளால் விளையும் துன்பங்களிலிருந்து காக்கும் வல்லமை உடையது..

வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக் குடியர னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே.

செய்ய மேனியன் தேனொடு பால்தயிர்
நெய்ய தாடிய நீலக் குடியரன்
மைய லாய்மற வாமனத் தார்க்கெலாம்
கையி லாமல கக்கனி யொக்குமே

ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு
கூற்றன் மேனியிற் கோலம தாகிய
நீற்றன் நீலக் குடியுடை யானடி
போற்றி னாரிடர் போக்கும் புநிதனே.

நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர்
நீலன் நீலக் குடியுறை நின்மலன்
கால னாருயிர் போக்கிய காலனே.

நேச நீலக் குடியர னேயெனா
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சரம் எய்ய எரிந்துபோய்
நாச மானார் திரிபுர நாதரே.

கொன்றை சூடியைக் குன்ற மகளொடும்
நின்ற நீலக் குடியர னேயெனீர்
என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர்
பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே

கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந் தேனன்றே.

அழகி யோமிளை யோமெனு மாசையால்
ஒழுகி ஆவி யுடல்விடு முன்னமே
நிழல தார்பொழில் நீலக் குடியரன்
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.

கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள் 
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன்
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே.

தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
அரக்க னாருட லாங்கொர் விரலினால்
நெரித்து நீலக் குடியரன் பின்னையும்
இரக்க மாயருள் செய்தன னென்பரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக