செவ்வாய், 13 ஜனவரி, 2015

திருப்பாவை 30




வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்குஅப் பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


பொருள்:
திருப்பாற்கடலை கடைந்த மாதவனாம், கேசவனாம் எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை, அழகான பெண்கள் எல்லாம் சென்று மனமுருக வேண்டி அவனது அருளைப் பெற்றனர். அதேபோல வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வாரின் செல்ல மகளான ஆண்டாள் நாச்சியார் நல்கிய இந்த முப்பது பாவைப் பாடல்களையும் பாடி வருபவர்கள், சிவந்த கண்களையும், அழகு பொருந்திய முகத்தையும், நீண்ட தோளினையும் உடைய திருமாலின் அருள் பெற்று, இந்தப் பிறவி மட்டுமல்லாமல் அடுத்த பிறவியையும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.


திருப்பள்ளி எழுச்சி – 10 –


புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்குகின்றோம் அவ மேயிந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்ற நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்த மெய்க் கருணை நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தருளாயே

பொருள்:

நாம் போய் பூமியில் பிறக்கவில்லையே என்று திருமாலும், பிரம்மனும் ஆசைப்பட்டனர், ஏக்கப்பட்டனர். காரணம், பூமியில் பிறந்த அனைவருமே திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானால் ஆட்கொள்ளப்படுவதால்தான். அப்படிப்பட்ட அமுதனே, உனது பரந்து விரிந்த இந்தப் பெருந்தன்மையால், எங்களையும் ஆட்கொள்வாயாக. கருணைக் கடலே, உனது நித்திரையிலிருந்து எழுந்து வந்து எம்மை ஆட்கொள்வாயாக.







திருப்பாவை 29





சிற்றஞ்சிறுகாலே வந்துனைச் சேவித்து, உன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றெம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப்றை கொள்வானென்று காண் கோவிந்தா
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பொருள்:
அதிகாலையில் வந்து, உனது பாதங்களைப் பணிந்து நிற்பதன் பயனைக் கேட்பாயாக. பசுக் கூட்டத்தை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ, நாங்கள் உனக்கு செய்யும் திருப்பணிகளை ஏற்றுக் கொள்ளாமல் எங்களைக் கைவிடுவது முறையாகாது. இன்று கொடுக்கப்படும் பறையை மட்டும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி நாங்கள் வரவில்லை. காலம் உள்ளவரை, ஏழேழு பிறவிகளுக்கும் உன்னோடு நாங்கள் இப்போது இருப்பதைப் போன்ற அதே அன்போடும், உறவோடும் இருக்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். அதை மட்டுமே எங்களுக்கு அளித்து அருள் புரிவாயாக.

திருப்பள்ளி எழுச்சி – 9 –


 வின்னக தேவரும் நன்னவு மாட்டா
விழுப் பொருளே உன தொழுப்பாடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழ செய்தானே
வன் திருப்பெருந்துரையை வழி அடியோம்
கண்ணகத்தே நின்று களி தரு தேனே
கடலமுதே, கரும்பே விரும்படியார்
என்னகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய்
எம் பெருமா பள்ளி எழுந்தருளாயே.


பொருள்:
கடவுள்களால் கூட அறிய முடியாத, அடைய முடியாத கடவுளே, நாங்கள் உங்கள் பாதங்களில் வீழ்ந்து கிடக்கும் அடிமைகள். எங்களுக்காக இந்த மண்ணில் இறங்கி வந்து எங்களுக்கு அருள் புரிந்து வாழ வழி செய்தவனே. வளமிக்க திருப்பெருந்துறையில் வாழும் கடவுளே, எங்களை மகிழ்விக்கும் களி தரும் தேன் நீ. பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதம் நீ, தித்திக்கும் கட்டிக் கரும்பு நீ. பக்தர்களின் சிந்தனையெல்லாம் நீயே, உலகுக்கு உயிர் ஆக திகழும் எம்பெருமானே, பள்ளி எழுந்தருளாய்.




ஞாயிறு, 11 ஜனவரி, 2015

திருப்பாவை 28




கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறு பேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்


பொருள்:

இடையர்குல மக்களாகிய நாங்கள் எல்லாம் கறவைப் பசுக்களின் பின்னாலேயே சென்று காட்டுக்குச் சென்று அங்கு உண்போம். கண்ணா, கள்ளம் கபடம் இல்லாத ஆயர்குலத்தில் வந்து பிறந்தாய் நீ. நீயே எங்களுக்குத் தலைவனாக வந்து சேர்நததை எண்ணி நாங்கள் புண்ணியமடைந்தோம். உனக்கும், எங்களுக்குமான உறவு பிரிக்க முடியாதது. உனது பெயரைச் சொல்லி அழைக்கிறோமேஎன்று சீறி எழாதே. நாங்கள் அறியாத சிறு பிள்ளைகள். அதற்காகக் கோபம் கொள்ளாமல், இறைவா உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக.
திருப்பள்ளி எழுச்சி – 8



முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலார் யாவர்மற்றறிவர்
பந்தணை விரலியும் நீயும் உன் அடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டி
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதும் காட்டிவந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே

பொருள்:
முதல் பொருள், இடைப் பொருள் மற்றும் நடுப் பொருளான இறைவா. உன்னை அந்த மும்மூர்த்திகளைத்தவிர வேறு யார் முழுமையாக அறிய முடியும். நீயும், உன் உமையும் அடியார் வீடு தோறும் எழுந்திருளி காட்சி தந்தீர்கள். செந்தழல் போன்ற உனது திருமேனியை அடியார்களுக்குக் காட்டி அருட் செய்தாய்.திருப்பெருந்துறை கோவிலையும் காட்டினாய். அந்தணன் வேடத்தில் வந்து என்னையும் ஆட்கொண்டாய். அமுதம் போன்ற என் சிவபெருமானே, படுக்கையிலிருந்து துயில் நீங்கி எழுந்து வந்து எனக்கருள்வாய்.




சனி, 10 ஜனவரி, 2015

திருப்பாவை 27





கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சன்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந் தேலோர் எம்பாவாய்.

பொருள்: 
பகைவரை வென்று சீருடன் விளங்கும் கோவிந்தா, உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து, வேண்டும் பறையைப் பெற்று நாடு புகழும்படியான ஆடை, ஆபரணங்களையும், அணிமணிகளையும் சன்மானமாகக் கேட்பதே நாங்கள் பெறும் பயன்களாகும். ஆடைகளையம், வளைகளையும், செவிப்பூக்களையும், பலவித அணிகளன்களையும் அணிந்து மகிழ்வோம். சர்க்கரைப் பொங்கலாக தித்திக்கும் பால் சோறு மறையும் அளவுக்கு அதில் நெய் ஊற்றி சேர்த்து உண்போம். அனைவரும் கூடி அதை சாப்பிடும்போது எங்கள் முழங்கை வரை நெய் ஒழுகும். அதை நீ கண்டு மனம் குளிர வேண்டும்.

திருப்பள்ளி எழுச்சி – 7 

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தரகோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: 
தேன் சோலைகள் நிறைந்திருக்கும் திரு உத்தரகோச மங்கை திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பெருமானே, திருப்பெருந்துறை உறை மன்னனே, சிவானந்தம் என்பது பழத்தின் சுவை போன்றது, அமுதத்தை ஒத்தது, அறிவதற்கு அரியது என சிவனடியார்கள் கூறுகிறார்கள். சிவானந்தத்தை இதுதான் என்று காட்ட முடியாது. அதை அனுபவித்து, உணரத்தான் முடியும். ஆனால் எங்களது பரம்பொருளாகிய உன்னை நீ இப்படித்தான் இருப்பாய், இதுதான் நீ என்று சொல்லும் அளவுக்கு அதை எங்களுக்கு உணர்த்தினாய். அப்படி நீ உணர்த்துவதற்கு உரிய வகையில், உன்னை உணரும் வகையில், உன் கட்டளைப்படி நாங்கள் நடக்கிறோம். எழுந்து வா பெருமானே.




திருப்பாவை 26







 மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

பொருள்:
காண்போர் மயங்கும் வண்ணம் பேரழகைக் கொண்டவனே, நீலமணிவண்ணனே, கண்ணனே, முன்னோர் எல்லாம், வழி வழியாக அனுஷ்டித்து வந்த பாவை நோண்புக்கு தேவையான பொருள்களை எல்லாம் கூறுவாயாக. உலகமே நடுநடுங்க வைக்கும் பால் நிறம் கொண்ட உன்னுடைய பாஞ்சஜன்யத்தைப் போன்ற சங்குகள், தோல் கருவியாக பெரும் பறை, பல்லாண்டு பாரும் பாராயண கோஷ்டியினர், மங்கல தீபங்கள், கொடிகள், மேல் விதானத்தை தந்து அருள்வாயாக. ஆலிலையில் துயில்பவனே, நாங்கள் கேட்பதை தந்து அருள் புரிவாயாக.

திருப்பள்ளி எழுச்சி – 6



பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே.

பொருள்:
உமையின் மணாளனே, குளிர்பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறைந்திருக்கும் சிவனே, பரபரப்பான இந்த உலகின் சிந்தனையின்றி, பற்று, பாசங்களை விட்டு விட்டு உன்னை மட்டுமே சிந்திக்கின்ற ஞானியர் பலரும், உன்னிடம் அன்பு காட்டுவதே கடமை என கருதும் மைக்கண்ணியர் பலரும் உன்னை வணங்கி நிற்கிறார்கள். ஆனால், நாங்கள் சாதாரணமானவர்கள். உன்னை வணங்கியே ஆக வேண்டும் என்பதற்காக வணங்க வரவில்லை. எங்களை ஆட்கொண்டு, பிறவி வேரை அறுத்து பூமியில் மீண்டும் பிறக்காமல் காத்தருள்வாய்.



வியாழன், 8 ஜனவரி, 2015

திருப்பாவை 25







 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

திருப்பள்ளி எழுச்சி - 5


பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய் எங்கள்முன் வந்து
ஏதங்கள் அருத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்
சிவபெருமானே பஞ்ச பூதங்களிலும் நீ நிறைந்திருக்கிறாய். உனக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை என்று புலவர்கள் பாடும் புகழ் கீதத்தையே நாங்கள் கேட்டறிந்தோம். எங்கும், எதிலும், எப்போதும் நீ இருந்து கொண்டுதானிருக்கிறாய் என்றெல்லாம் உன்னைப் பற்றிப் பாடுகிறார்கள். ஆனந்தத்தில் ஆடுகிறார்கள். உன்னைக் கண்டறிந்தவரை நாங்கள் அறிந்ததில்லை. குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் கோயில் கொண்ட மன்னவனே! யாருடைய சிந்தனைக்கும் எட்டாதவனே! எங்கள் முன்னே தோன்றி, எங்கள் குற்றங்களைக் களைந்து, எங்களை ஆட்கொண்டு அருளும் பெருமானே! துயில் நீங்கி எழுந்தருள்வாய்.




புதன், 7 ஜனவரி, 2015

திருப்பாவை - 24





அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
 என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பொருள்:
மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

திருப்பள்ளி எழுச்சி -  4



இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
 துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்;
தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்
இன்னிசைக் கலைஞர்கள் யாழோடும், வீணையோடும் சிவனைப் பாடுகிறார்கள். தோத்திரங்கள், வேதங்கள், மந்திரங்கள் போன்றவற்றை ஓதி பலர் உயர்கிறார்கள். பறிக்கும் போதும் சிரிக்கும் பூக்களை மாலை, பிணையல், கண்ணி, தொடையல் என்று வகை வகையாய் தொடுக்கும் போதும், சிவ சிந்தனையுடனேயே இருக்கிறார்கள் பக்தர்கள். தம் வாழ்வின் பழுது நீங்கச் சிவனைத் தொழுது நிற்போம். எந்நாளும் எம் உயர்வு உன் கருணை. எங்கள் உடம்பு வருத்திச் செய்கிற முயற்சிக்குக் கிடைக்கும் கூலி கூடுதலாய், குறைவாய்த் தெரிவதும் உன்னால்தான் என்று நெகிழ்ந்து அழுவோர். கோயிலில் உருண்டு புரண்டு அங்கப் பிரதட்சணம் செய்வோர். "நீயே அடைக்கலம்' என்று தலைக்கு மேலே கை கூப்பி நிற்போர். இவ்வாறு யாவர்க்கும் அருள் புரிபவன் அவன். திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! எங்களையும் ஆட்கொண்டு பேரருள் புரிய விரைவில் துயிலெழுவாய்.




செவ்வாய், 6 ஜனவரி, 2015

திருப்பாவை - 23


 மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலேநீ, பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்:
மழைக்காலத்தில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், தூக்கம் கலைந்து, தன் எல்லைக்குள் யாரும் புகுந்துள்ளனரா என்பதை அறிவது போல, கண்ணில் அணல் பறக்க, பிடரியை சிலுப்பியபடி எழுந்து வருவதைப் போல, கண்ணா, நீயும் புறப்பட்டு வருவாயாக. மணிவண்ணனே, உனது கோவிலிலிருந்து இங்கே வந்து, வேலைப்பாடுகள் அமைந்த அழகான சிம்மாசனத்தில் எழுந்தருளி, எங்களது கோரிக்கைகளைக் கேட்டு அதை ஆராய்ந்து எங்களுக்கு அருள் புரிவாயாக.

திருப்பள்ளியெழுச்சி 3.



கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிரியாய் எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே

பொருள்:
வெளியில் திரியும் பறவையான கரிய நிற குயில் இனிய குரலில் கூவியது. வீட்டுக்குள் இருக்கும் பறவையான கோழியோ கொக்கரக்கோ என குரல் எழுத்துக் கூவுகிறது. அதேபோல குருகுகள் எனக் கூறப்படும் பறவைகளும் ஒலித்தன. தேவனே, திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே, யாராலும் அறிய முடியாத அரும்பொருளே, எளியவனே, இறையடியார்கள் சங்குகளை முழங்குகின்றனர். நட்சத்திரத்தின் ஒளி மறைந்து போய் விட்டது. சூரியனின் ஒளி எழுந்து விட்டது. எங்களுக்கு கருணை காட்டி, வீரக்கழல் செறிந்த உனது திருவடிகளை எங்களுக்குக் காட்டி அருள் புரிவாயாக.