ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே!
அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப்
பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும்
வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய
திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க
செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம்.
உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.
திருப்பள்ளி எழுச்சி - 5
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய் எங்கள்முன் வந்து
ஏதங்கள் அருத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்
சிவபெருமானே பஞ்ச பூதங்களிலும் நீ நிறைந்திருக்கிறாய்.
உனக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை என்று புலவர்கள் பாடும் புகழ் கீதத்தையே நாங்கள்
கேட்டறிந்தோம். எங்கும், எதிலும், எப்போதும் நீ இருந்து கொண்டுதானிருக்கிறாய் என்றெல்லாம்
உன்னைப் பற்றிப் பாடுகிறார்கள். ஆனந்தத்தில் ஆடுகிறார்கள். உன்னைக் கண்டறிந்தவரை நாங்கள்
அறிந்ததில்லை. குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் கோயில் கொண்ட
மன்னவனே! யாருடைய சிந்தனைக்கும் எட்டாதவனே! எங்கள் முன்னே தோன்றி, எங்கள் குற்றங்களைக்
களைந்து, எங்களை ஆட்கொண்டு அருளும் பெருமானே! துயில் நீங்கி எழுந்தருள்வாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக