மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
பொருள்:
காண்போர் மயங்கும் வண்ணம் பேரழகைக் கொண்டவனே,
நீலமணிவண்ணனே, கண்ணனே, முன்னோர் எல்லாம், வழி வழியாக அனுஷ்டித்து வந்த பாவை நோண்புக்கு
தேவையான பொருள்களை எல்லாம் கூறுவாயாக. உலகமே நடுநடுங்க வைக்கும் பால் நிறம் கொண்ட உன்னுடைய
பாஞ்சஜன்யத்தைப் போன்ற சங்குகள், தோல் கருவியாக பெரும் பறை, பல்லாண்டு பாரும் பாராயண
கோஷ்டியினர், மங்கல தீபங்கள், கொடிகள், மேல் விதானத்தை தந்து அருள்வாயாக. ஆலிலையில்
துயில்பவனே, நாங்கள் கேட்பதை தந்து அருள் புரிவாயாக.
திருப்பள்ளி எழுச்சி – 6
பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே.
பொருள்:
உமையின் மணாளனே, குளிர்பொருந்திய வயல்கள்
சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறைந்திருக்கும் சிவனே, பரபரப்பான இந்த உலகின் சிந்தனையின்றி,
பற்று, பாசங்களை விட்டு விட்டு உன்னை மட்டுமே சிந்திக்கின்ற ஞானியர் பலரும், உன்னிடம்
அன்பு காட்டுவதே கடமை என கருதும் மைக்கண்ணியர் பலரும் உன்னை வணங்கி நிற்கிறார்கள்.
ஆனால், நாங்கள் சாதாரணமானவர்கள். உன்னை வணங்கியே ஆக வேண்டும் என்பதற்காக வணங்க வரவில்லை.
எங்களை ஆட்கொண்டு, பிறவி வேரை அறுத்து பூமியில் மீண்டும் பிறக்காமல் காத்தருள்வாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக