செவ்வாய், 13 ஜனவரி, 2015

திருப்பாவை 30




வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்குஅப் பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


பொருள்:
திருப்பாற்கடலை கடைந்த மாதவனாம், கேசவனாம் எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை, அழகான பெண்கள் எல்லாம் சென்று மனமுருக வேண்டி அவனது அருளைப் பெற்றனர். அதேபோல வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வாரின் செல்ல மகளான ஆண்டாள் நாச்சியார் நல்கிய இந்த முப்பது பாவைப் பாடல்களையும் பாடி வருபவர்கள், சிவந்த கண்களையும், அழகு பொருந்திய முகத்தையும், நீண்ட தோளினையும் உடைய திருமாலின் அருள் பெற்று, இந்தப் பிறவி மட்டுமல்லாமல் அடுத்த பிறவியையும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.


திருப்பள்ளி எழுச்சி – 10 –


புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்குகின்றோம் அவ மேயிந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்ற நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்த மெய்க் கருணை நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தருளாயே

பொருள்:

நாம் போய் பூமியில் பிறக்கவில்லையே என்று திருமாலும், பிரம்மனும் ஆசைப்பட்டனர், ஏக்கப்பட்டனர். காரணம், பூமியில் பிறந்த அனைவருமே திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானால் ஆட்கொள்ளப்படுவதால்தான். அப்படிப்பட்ட அமுதனே, உனது பரந்து விரிந்த இந்தப் பெருந்தன்மையால், எங்களையும் ஆட்கொள்வாயாக. கருணைக் கடலே, உனது நித்திரையிலிருந்து எழுந்து வந்து எம்மை ஆட்கொள்வாயாக.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக