செவ்வாய், 6 ஜனவரி, 2015

திருப்பாவை 22





  
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.


பொருள்:
அழகான பெரிய பூமியில் உள்ள அரசர்கள் தங்கள் நாடுகளை இழந்து, அகந்தை அழிந்து, நீ பள்ளி கொண்டிருக்கும் படுக்கையின் கீழ் கூடி நிற்பதைப் போல நாங்களும் உன்னை வந்தடைந்து நிற்கிறோம். கி்ங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாதா. சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே.

திருப்பள்ளி எழுச்சி 2.


அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

பொருள்:
இந்திரனுக்கு உகந்த கிழக்குத் திசையில் சூரியன் உதித்தபோது அங்கு இருள் போனது. வெளிச்சத்தைப் பார்த்து தாமரை மலர்கள் பூத்தன. பூக்கள் மலர்ந்ததைப் பார்த்து வண்டுக் கூட்டங்கள் ரீங்காரமிட்டு இசை பாடத் தொடங்கின. திருப்பெருந்துறையில் உறைந்துள்ள அழகிய பெருமானே, அருள் செல்வத்தை வாரி வழங்கும் ஆனந்த மலையே, அலைகள் அடிக்கும் கடலே, பள்ளி எழுந்தருளாய்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக