செவ்வாய், 30 டிசம்பர், 2014

திருப்பாவை - 16





திருப்பாவை - 16 

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
 தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.


 பொருள்:
உலகுக்கெல்லாம் தலைவனாய் நிலைத்திருக்கின்றவனாகிய நந்த கோபனுடைய திருக்கோவிலைக் காப்பவனே! கொடிகள் மற்றும் தோரணங்கள் மேவும் வாயிலைக் காப்பவனே! மணிக் கதவின் தாளைத் திறப்பாய்! கோகுலத்தின் சிறுமியர்களாகிய எங்களுக்கு நோன்பு நிறைவதற்கான பலனை தருவதாக, மாயவன், கருநீல வண்ணன், கண்ணன், நேற்றே வாக்களித்தான்; அந்த எம்பெருமானை துயில் எழுப்ப பாடுவதற்கு, உள்ளும் புறமும் தூயவர்களாக நாங்கள் வந்தோம். உன் வாயாலே, முதன் முதலிலேயே மறுத்து சொல்லிவிடாதே அப்பனே! வாயில் நிலையோடு நேசமாகப் பொருந்தியிருக்கும் கதவை நீ, நீக்கி திறந்து விடு.

 
திருவெம்பாவை - 16




முன்இக் கடலைச் சுருக்கியெழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
முன்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நம்தெம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிரா எம்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை ஏலோர் எம்பாவாய்!


பொருள்:
மேகமே! நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து அக் கடலைக் குறைத்து, எங்களை ஆளாக உடைய அம்மை உமா தேவியின் சிற்றிடையைப் போல மின்னிப் பொலிவுற்று, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொற்சிலம்பைப் போல சிலம்பி, அம்மையின் வில்லைப்போன்ற திருப்புருவம் எனும்படி வானில் குலவி , நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப் பிரியாத எம்பெருமான் தன் அன்பர்களுக்கு பொழியும் இனிய அருளைப் போல நீ மழையைப் பொழிவாயாக!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக