திங்கள், 22 டிசம்பர், 2014

திருப்பாவை 8.




திருப்பாவை 8

கீழ்வானம் வெள்ளன் எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்!  

பொருள்: 

மன மகிழ்ச்சியுடைய பாவையே! கிழக்கே வானம் வெளுத்து விட்டது. எருமைகள் எல்லாம் சிறிது நேரத்திற்கு முன்பே மேய்ச்சலுக்குப் போய் விட்டன.பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு நமது தோழியர்கள் போய் விட்டனர். மீதமுள்ளவர்களும் அங்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் உன்னையும் அழைத்துப் போக வேண்டும் என்பதற்காக அவர்களையும் போக விடாமல் காத்திருக்க வைத்து உன்னை அழைக்க வந்து நிற்கிறோம்.காரிகையே! காலம் தாழ்த்தாமல் எழுந்து வா! நம் பெருமான் குதிரை வடிவம் எடுத்து வந்த மாய அசுரனை வாயைப் பிளந்து மாய்த்தவர். மதுராபுரியிலே கொடிய கஞ்சன் அனுப்பிய மல்லர்களை வீழ்த்தியவர். தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவனை, கச்சிப் பதி மேவிய களிற்றை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால் நம்மீது இரக்கம் காட்டி வா! வா! என்று அழைத்து நாம் வேண்டும் வரத்தை அருளும் வரதராஜன் அவர். எனவே விரைவில் எழுந்து வா பெண்ணே!





திருவெம்பாவை 8

கோழி சிலம்ப சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப் பொருளை பாடினோம் கேட்டிலையோ?
வாழியீதெனன உறக்கமோ? வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப் பங்காளனையே பாடேல் ஓர் எம்பாவாய்! 

பொருள்:

நற்காலை பொழுது விடிந்து விட்டது, கோழிகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன. சிறு பறவைகள் ஒலியெழுப்ப ஆரம்பித்து விட்டன. நாதசுரம் ஒலிக்கின்றது, எங்கும் வெண் சங்குகள் முழங்குகின்றன. நாங்கள் அனைவரும் தனக்குவமையில்லாத பேரொளியை, ஒப்பற்ற பேரருளை, மேலொன்றுமில்லாத மெய்ப் பொருளை, பரஞ்சோதியை பாடினோமே அது உனது காதுகளை எட்டவில்லையா? உன் உறக்கம் தான் எப்படிப்பட்டதோ! வாயைத் திறந்து ஒரு வார்த்தையாவது சொல்லேன். அருட்பெருங் கடலாகிய எம்பெருமானுக்கு நீ அன்பு செய்யும் முறை இதுதானா? ஊழிக் காலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் அந்த எம்பெருமானது திருவடிகளிலே அடங்க தனி முதல்வனாய் விளங்கும் ஒப்பற்ற தலைவனை, உமையொரு பாகனை, ஏழைப் பங்காளனை பாட வேண்டாமா? எழுந்திரு கண்ணே! 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக