திருப்பாவை-13
புள்ளின்வாய்
கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக்
களைந்தானை கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவை களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண்; போது அரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்
பொருள்:
நம் பெருமாள் பறவை வடிவாக வந்த பகாசுரனின் வாயைப்
பிளந்து அவனைக் கொன்றவர், மைதிலியைக் கவர்ந்த பொல்லா ராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி
அவனை அழித்தவருமான அந்த பரந்தாமனின் வீரப் புகழைப்பாடிக் கொண்டு பாவைமார்களாகிய நம்
தோழிகள் அனைவரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர். விடி வெள்ளி தோன்றி
விட்டது, வியாழம் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கூவுகின்றன; மலர் போன்ற
அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே! நீ இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நல்ல நாளில்
உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களுடன் கலந்து குளிரக் குளிர பொய்கையில் மார்கழி
நீராட எழுந்து வாடி என் கண்ணே!
திருவெம்பாவை 13.
செந்தாமரை மலர் மேனியன் சிவன் பைங்குவளைக்
கார்மலரால்
செங்கமலப் பைம்போதால்
அங்கம்குருகு இனத்தால் பின்னும் அரவத்தால்
தங்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்புகலந்து ஆர்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்க
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடுஏலோர் எம்பாவாய்.
பொருள்:
பொய்கையில் பூத்துள்ள இந்தக் கருமையான குவளை மலர்கள்
எம்பிராட்டியைப் போல உள்ளன. அதில் பூத்துள்ள செந்தாமரை மலர்கள் எம்பெருமானின் செம்மேனியை
நினைவுபடுத்துகின்றன. அங்கு திரியும் பறவைக் கூட்டம் பெருமான் அணிந்துள்ள குருக்கத்தி
மாலையையும், அம்பிகையின் திருமேனியில், திருக்கைகளில் அணிந்துள்ள வளையல் கூட்டத்தால்,
மனிதப் பிறவிகளின் மும்மலம் - மாயை, கன்மம், ஆணவம் - நீக்க வந்து சேர்பவர்களினால் எம்கோனும்
எம் பிராட்டியும் போன்று இசைந்த பொங்கு மடு.
இத்தகைய பொங்கு மடுவில் பாய்ந்து, பாய்ந்து கைகளில்
அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், காற்சிலம்புகள் கலந்து ஆரவாரம் செய்யவும், கொள்ளும்
கைகள் பூரிப்படையவும், அந்த கைகளால் குடைகின்ற பொய்கை நீர் மேலோங்கவும், இந்த தாமரைப்
பூங்குளத்து நீரில் பாய்ந்து நீராடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக