கல்வி நலம் தரும் சகலகலாவல்லிமாலை
ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் கலைமகளை நோக்கிப் பாடிய சகலகலாவல்லி மாலையை தினந்தோறும் ஓதும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி நிலையில் மேம்படவும் கல்வீல் வெற்றியினைப் பெறவும் கலைமகளின் அருள் நிச்சயம் கிட்டும். இந்தப் பதிகத்துடன் அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் தொடர் நிறைவு பெறுகிறது. இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டப் பாடல்கள் தவிர தமிழில் ஏராளமான அருட்பதிகங்கள் உள்ளன. பன்னிருத் திருமுறைகள், திவ்ய பிரபந்தம், அருணகிரியார் பாடலகள், கந்த புராணம், பெரிய புராணம், கம்ப ராமாயணம் இது போன்று என்ணற்ற நூல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் படித்து இறைவனது அருள் பெற்று வளமுடன் வாழ வேண்டுகிறேன்.நன்றி.
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.
பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதௌி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.
சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.