புதன், 10 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 17


பொன் பொருள் கிடைக்கவும் இழந்தப் பொருளை மீட்கவும் உதவும் பதிகம்

சுந்தரர் திருமுதுகுன்றத்திறைவரை வணங்கி "நஞ்சியிடை" என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி இறைவன்பால் பொருள் பெறும் மனக்குறிப்புடன் "மெய்யில் வெண்பொடி" எனத்  தொடங்கித் திருப்பதிகம் பாடினார். திருமுதுகுன்றத்திறைவர் நம்பியாரூரர்க்குப் பன்னீராயிரம் பொன்னைப் பரிசிலாக வழங்கியருளினார். பொன் பெற்ற சுந்தரர் மீண்டும் இறைவனைப் பணிந்து தேவரீர் தந்தருளிய இப் பொன்னைத் திருவாரூரில் உள்ளோர் வியக்கும் வண்ணம் அங்கே வரும்படிச் செய்தல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்பொழுது 'இப்பொன்னெல்லாவற்றையும் மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்க' என்றதோர் அருள் வாக்கு எழுந்தது. அம் மொழியைச் செவிமடுத்த சுந்தரர் தாம் பெற்ற பொன்னின் மாற்றறிதற்காக மச்சம் வெட்டி வைத்துக் கொண்டு பொன்னனைத்தையும் மணிமுத்தாற்றில் புகவிட்டு  என்னை வலிய ஆட்கொண்ட திருவருளை இதிலறிவேன் என்று கூறித் தில்லையை நோக்கிப் புறப்பட்டார். வழியில் கடம்பூரைத் தரிசித்துத் தில்லையம்பதியை அடைந்தார். பின்னர் பல தலங்களை தரிசித்துவிட்டு திருவாரூரை யடைந்து பூங்கோயிற் பெருமானைத் தொழுது பரவையாருடன் இனிதிருந்தார்.இங்ஙனம் இருந்து வரும் நாளில் ஒருநாள் பரவையாரை நோக்கி "முதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் புகவிட்டோம். அப்பொன்னை இந்நகரத் திருக்குளத்தில் எடுத்து வருவோம் வருக" என அழைத்தார். பரவையாரும் வியப்பெய்தி உடன் சென்றார். நம்பியாரூரர் பெருமானை வணங்கிக் கோயிலை வலம் வந்து கோயிலின் மேல்பால் உள்ள திருக்குளத்தின் வடகீழ்க்கரையில் பரவையாரை நிற்கச் செய்து தாம் இறங்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரர் தம் செந்தமிழ்ப் பதிகம் கேட்கும் விருப்பினால் இறைவன் பொன்னை விரைவில் தோன்றாதவாறு செய்தருளினார். இந்நிலையில் பரவையார் ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடும் நிலையை எண்ணி நகைத் துரைத்தார். அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த பெருமானே! 'பரவை நகைத்துரையாதவாறு முன்னுரைத்தபடி செம்பொன்னைத் தந்தருளுக' எனப் "பொன்செய்த மேனியினீர்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடல் முடிந்த பின்னரும் பொன் கிடைக்கவில்லை. ஒன்பதாந் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்திரள் சுந்தரர் கைக்குள் கிடைத்தது. பொன்னை எடுத்த சுந்தரர் அதனையும் தாம் முன்னே மாற்றறிவதற்காக வெட்டி வைத்த மச்சத்தையும் உரையிட்டுப்பார்த்தார். எடுத்தபொன் உரையில் தாழ்ந்துகாணப்பட்டது. அதைக்கண்ட சுந்தரர் மீண்டும் திருப்பதிகம்பாடி மாற்றுயரப்பெற்றார். பொற்குவையைப் பரவையார் மாளிகைக்கு அனுப்பிவிட்டுப் பூங்கோயில் சென்று இறைவனை வணங்கிப் பரவையாருடன் திருமாளிகை சென்று இறையருளை எண்ணி மகிழந்திருந்தார். இப்பதிகப் பாராயணம் பொன் பொருள் அளிக்க வல்லதோடு இழந்த பொருளை மீட்கும் வலிமை கொண்டதாம்.

பொன்செய்த மேனியினீர்
    புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும்
    எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள்
    பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள்
    அடியேனிட் டளங்கெடவே.

உம்பரும் வானவரும்
    உடனேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித்
    திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள்
    பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மான்அருளீர்
    அடியேன்இட் டளங்கெடவே.

பத்தா பத்தர்களுக்
    கருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே
    முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண்
     பரவையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய்
    அடியேன்இட் டளங்கெடவே.

மங்கையோர் கூறமர்ந்தீர்
    மறைநான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர் 
      திகழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை
    குணங்கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய்
    அடியேன்இட் டளங்கெடவே.

மையா ரும்மிடற்றாய்
    மருவார்புரம் மூன்றெரித்த
செய்யார் மேனியனே
    திகழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே
    ரல்குலாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய்
    அடியேன்இட் டளங்கெடவே.

நெடியான் நான்முகனும்
    இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச
    முதுகுன்றம் அமர்ந்தவனே
படியா ரும்மியலாள்
    பரவையிவள் தன்முகப்பே
அடிகேள் தந்தருளாய்
    அடியேன்இட் டளங்கெடவே.

கொந்தண வும்பொழில்சூழ்
    குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர்
    சடைமாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள்
     பரவையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய்
    அடியேன்இட் டளங்கெடவே.

பரசா ருங்கரவா
    பதினெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர
     முதுகுன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள்
    பரவையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய்
    அடியேன்இட் டளங்கெடவே.

ஏத்தா திருந்தறியேன்
    இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம்
    முதுகுன்றம் அமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள்
    பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய்
    கொடியேன்இட் டளங்கெடவே. .

பிறையா ருஞ்சடைஎம்
    பெருமான் அருளாய்என்று
முறையால் வந்தமரர்
    வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில்
    வயல்நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க்
    கெளிதாஞ்சிவ லோகமதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக