(குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கவும் பிணி போக்கவும் உதவும் பதிகம்)
சுந்தர மூர்த்தி நாயனார் சிவத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு ஒவ்வொரு தலமாக சென்று கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட இந்த தலத்தின் வழியாகவும் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த ஊரின் தெருவொன்றில், ஒரு வீட்டில் சிறுவனுக்கு முப்புரிநூல் (உபநயனம்) அணிவிக்கும் மங்கல விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்னொரு வீட்டில் இறப்பு நிகழ்ந்ததற்கான அழுகை ஓலம் கேட்டுக் கொண்டிருந்தது.சுந்தரர் அத்தெருவில் இருந்தோரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டறிந்தார். அதற்கு
அங்கிருந்தவர்கள், ‘பூணூல் அணிவிக்கும் எதிர்வீட்டுச் சிறுவனின் வயதினை ஒத்த குழந்தையை, முதலை ஒன்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கி விட்டது. அக்குழந்தை இருந்திருந்தால் அதற்கும் இதுபோல பூணூல் அணிவிக்கும் விழா நடைபெற்றிருக்குமே என்று எண்ணி பிள்ளையை இழந்த சோகத்தை பெற்றோர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தனர்.அந்தசமயம் சுந்தரர் அங்கு வருகை தந்ததை அறிந்து, இறந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் கண்ணீரைத் துடைத்து சோகத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், சுந்தரரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரை வரவேற்றனர். உண்மையை உள்ளத்தால் உணர்ந்து கொண்ட சுந்தரர், அந்தத் தாய் – தந்தையரின் துன்பத்தைத் துடைக்கத் திருவுள்ளம் கொண்டார். குழந்தையை பறிகொடுத்தவர்களிடம், ‘இறைவன் கருணை மிக்கவன். அவன் பேரருளால் எல்லா அற்புதங்களும் நடக்கும். கவலையை விடுங்கள்’ என்று கனிவுடன் கூறி, முன்பு சிறுவனை, முதலை விழுங்கிய குளக்கரைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு குளக்கரை வறண்டு போய் இருந்தது. தண்ணீரே இல்லாத குளத்தில் முதலையை எங்கு என்று தேடுவது.. எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம் பெருமானையே உற்றாய் என்றுன்னையே
உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால் புற்றா டரவப் புக்கொளி யூரவி நாசியே பற்றாக வாழ்வேன் பசுபதி யெம் பர மேட்டியே’* என்ற குறிஞ்சிப் பண்ணிலமைந்த தேவாரப் பதிகத்தைப் பாடத் தொடங்கிய சுந்தரர்,‘கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே’ என்று சிவனிடம் உருகி
வேண்டினார். பத்து பதிகங்களைப் பக்திப் பரவசத்துடன் அவர் பாடி டித்ததும்,
அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சிவனருளால் வறண்டிருந்த குளத்தில் நீர் நிரம்பியது. நீருக்குள்ளிருந்து முதலை வெளிப்பட்டது. முதலை வாயைத் திறக்க அதனுள்ளிருந்து மூன்றாண்டுகட்கு முன்பு விழுங்கிய சிறுவன், இளைய வயது கொண்ட வளர்ச்சியுடன் வெளிப்பட்டான்.பிள்ளையின் பெற்றோரும், மற்றோரும் அளவிலா ஆனந்தம் கொண்டனர். அவர்கள் இறைவனின் கருணையையும், சுந்தரரின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்து, கை தொழுதனர்.
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாய் என்றுன்னையே உள்குகின் றேன்உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன் னைக்கிறி செய்ததே.
எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.
உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
அரங்காவ தெல்லா மாயிடு காடது அன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே.
நாத்தா னும்உனைப் பாடல்அன் றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே.
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
சந்திகள் தோறுஞ்சலபுட்பம் இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.
பேணா தொழிந்தேன் உன்னைஅல் லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியே
காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே.
நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.
நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக