வெள்ளி, 19 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 20



உணவு பொன் பொருள் தடையின்றி கிடைக்க உதவும் பதிகம்

சுந்தரர், பரவைநாச்சியார் பங்குனி உத்திரத் திருநாளில் செய்யும் தானதருமங்களுக்குப் பொருள் பெற எண்ணித் திருவாரூரிலிருந்து திருப்புகலூர் சென்று தொழுது கோயிலின் முன்புறம் செங்கற்களைத் தலைக்கு உயரமாக வைத்து இறையருளால் துயின்றார். துயிலெழுந்தபோது செங்கற்கள் பொன்னாகியிருப்பதைக் கண்டு இறையருளை எண்ணி வியந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.இப்பதிகப் பாராயணம் உணவு பொன் பொருள் தடையின்றி கிடைக்க உதவும்

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
    சார்வி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதரும் சோறுங் கூறையும்
    ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

மிடுக்கி லாதானை வீம னேவிறல்
    விசய னேவில்லுக் கிவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
    கூறி னுங்கொடுப் பார்இலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேல்அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.        

காணி யேற்பெரி துடைய னேகற்று
    நல்லனே சுற்றம் நற்கிளை
பேணி யேவிருந் தோம்பு மேயென்று
    பேசி னுங்கொடுப் பார்இலை
பூணி பூண்டுழப் புட்சி லம்புந்தண்
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆணி யாய்அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.        

நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல்
    நடுங்கி நிற்கும்இக் கிழவனை
வரைகள் போல்திரள் தோளனேயென்று
    வாழ்த்தி னுங்கொடுப் பார்இலை
புரைவெள் ளேறுடைப் புண்ணி யன்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அரையனாய்அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.       

வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப்
    பாவி யைவழக் கில்லியைப்
பஞ்ச துட்டனைச் சாது வேயென்று
    பாடி னுங்கொடுப் பார்இலை
பொன்செய் செஞ்சடைப் புண்ணி யன்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில் நோயறுத் துஞ்சு போவதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

நலம்இ லாதானை நல்ல னேயென்று
    நரைத்த மாந்தரை இளையனே
குலம்இ லாதானைக் குலவ னேயென்று
    கூறி னுங்கொடுப் பார்இலை
புலமெ லாம்வெறி கமழும் பூம்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அலம ராதமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.        

நோயனைத்தடந் தோள னேயென்று
    நொய்ய மாந்தரை விழுமிய
தாயன் றோபுல வோர்க்கெ லாமென்று
    சாற்றி னுங்கொடுப் பார்இலை
போயு ழன்றுகண் குழியாதேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆயம் இன்றிப்போய் அண்டம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.        

எள்வி ழுந்திடம் பார்க்கும் ஆகிலும்
    ஈக்கும் ஈகிலன் ஆகிலும்
வள்ள லேயெங்கள் மைந்த னேயென்று
    வாழ்த்தி னுங்கொடுப் பார்இலை
புள்ளெ லாஞ்சென்று சேரும்பூம்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
அள்ளற் பட்டழுந் தாதுபோவதற்
    கியாதும் ஐயுற வில்லையே.        

கற்றி லாதானைக் கற்று நல்லனே
    காம தேவனை ஒக்குமே
முற்றி லாதானை முற்ற னேயென்று
    மொழியி னுங்கொடுப் பார்இலை
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
அத்தனாய்அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.  

தைய லாருக்கோர் காமனேயென்றும்
    சால நல்வழக் குடையனே
கையு லாவிய வேல னேயென்று
    கழறி னுங்கொடுப் பார்இலை
பொய்கை ஆவியின் மேதி பாய்புக
    லூரைப்பாடுமின் புலவீர்காள்
ஐயனாய் அமர் உலகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.        

செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென்
    புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவலூரன்
    வனப்பகை யப்பன் சடையன்றன்
சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய
    பாடல் பத்திவை வல்லவர்
அறவனார்அடி சென்று சேர்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக